பிரசவித்த பெண்கள் வீடு திரும்ப ஏ.சி வசதியுடன் கூடிய 2 வாகனங்கள் – தருமபுரி எம்.பி நிதியில் தொடக்கம்

தருமபுரி: அரசு மருத்துவமனைகளில் பிரசவிக்கும் பெண்கள் பச்சிளம் குழந்தைகளுடன் வீடு திரும்ப 2 குளிர்சாதன வாகனங்களை தொகுதி நிதி மூலம் தருமபுரி மக்களவை உறுப்பினர் வழங்கியுள்ளார்.

அரசு மருத்துவமனைகளுக்கு பிரசவ சிகிச்சைக்கு வரும் பெண்கள் பிரசவம் முடிந்த பின்னர் தங்களின் பச்சிளம் குழந்தைகளுடன் வீடு திரும்ப ஆம்புலன்ஸ் வாகனங்களில் செல்ல தயக்கம் காட்டி வந்தனர். இதையறிந்த தருமபுரி மக்களவை உறுப்பினர் செந்தில்குமார், பிரசவித்த பெண்கள் குழந்தைகளுடன் வீடு திரும்ப உதவும் வகையில் தொகுதி மேம்பாட்டு நிதி மூலம் வாகனங்கள் வழங்க முடிவு செய்தார். அதற்காக ரூ.48 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தார்.

இதன்மூலம் ரூ.24 லட்சம் மதிப்பிலான 2 நவீன வாகனங்கள் வாங்கப்பட்டன. சுற்றுலா வாகனம் போன்ற தோற்றம் கொண்ட இந்த வாகனங்கள் குளிர்சாதன வசதியுடன் கூடியவை. இந்த இரு வாகனங்களையும் சுகாதாரத் துறையிடம் ஒப்படைத்து அவற்றின் சேவையை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நேற்று (ஜூலை 5) நடந்தது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற தருமபுரி மக்களவை உறுப்பினர் செந்தில்குமார் வாகனங்களை ஒப்படைத்ததுடன், கொடியசைத்து அவற்றின் இயக்கத்தை தொடங்கி வைத்தார்.

பின்னர் அவர் கூறியது, “தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அரசு தலைமை மருத்துவமனை, பாலக்கோடு அரசு வட்டார மருத்துவமனை ஆகிய 2 மருத்துவமனைகளுக்கும் சேவை வழங்கும் வகையில் ஒரு வாகனமும், அரூர், பாப்பிரெட்டிபப்ட்டி அரசு மருத்துவனைகளுக்கு சேவை வழங்கும் வகையில் ஒரு வாகனமும் வழங்கப்பட்டுள்ளது. இந்த வாகனத்தில் 12 பேர் வரை அமர்ந்து பயணிக்கலாம். இதில் பயணிக்க கட்டணம் எதுவும் வசூலிக்கப்படாது. பிரசவித்த பெண்கள் இந்த வாகனங்களை பயன்படுத்தி பயனடைய வேண்டும்” இவ்வாறு கூறினார்.

இந்த நிகழ்ச்சியில், தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் மருத்துவர் அமுதவல்லி, மருத்துவத் துறை இணை இயக்குநர் மருத்துவர் சாந்தி, அரசு மருத்துவக் கல்லூரி கண்காணிப்பாளர் மருத்துவர் சிவக்குமார் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.