மணிப்பூரில் பள்ளிகள் திறப்பு: அமைதி திரும்புமா? அரசு எடுக்கும் நடவடிக்கை!

மணிப்பூரில் நிகழ்ந்த கலவரம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இயற்கை எழில் கொஞ்சும் மாநிலமான மணிப்பூர் இரு மாதங்களாக கலவரக் காடாக காட்சி அளிக்கிறது. வன்முறை வெறியாட்டங்களால் இரு மாதங்களாக மரண ஓலங்களே மணிப்பூரில் கேட்கின்றன.

மணிப்பூரில் பெரும்பான்மையாக உள்ள மைதேயி சமூகத்தினர், தங்களுக்கு பழங்குடியின அந்தஸ்து வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகின்றனர். இதற்கு குகி பழங்குடியினர் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். இந்த பிரச்சினையில் இரு சமூகத்தினர் இடையே கடும் மோதல் நீடித்து வருகிறது.

இரண்டு மாதங்கள் நீடிக்கும் இந்த கலவரத்தில் 120க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். 3000 பேர் படு காயமடைந்துள்ளனர். 40 000 பேர் இடம்பெயர்ந்துள்ளனர். பலர் தங்கள் வாழ்வாதாரங்களை இழந்து தவித்து வருகின்றனர். வீடுகள், கடைகள் சூறையாடப்பட்டுள்ளன.

கலவரத்தை அடக்க முடியாமல் போனதற்கு பொறுப்பேற்று அம்மாநில முதலமைச்சர் பைரோன் சிங் பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. அவரோ, ”இந்த முக்கியமான தருணத்தில் முதல்வர் பதவியை ராஜினாமா செய்யப்போவதில்லை என்பதை தெளிவுபடுத்துகிறேன்” என ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

643 தனியார் பள்ளிகள், 384 அரசுப் பள்ளிகள் மற்றும் 83 உதவி பெறும் பள்ளிகள் உட்பட சுமார் 1,110 பள்ளிகள் உள்ளன. இரண்டு மாதங்களுக்கும் மேலாக பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில் இன்று (ஜூலை 5) முதல் 1 -8ஆம் வகுப்பு மாணவர்கள் பள்ளிகள் திறக்கப்படும் என்றும் அதற்கான ஏற்பாடுகளை அனைத்து மண்டல கல்வி அலுவலர்களும் மேற்கொள்ள வேண்டும் என்றும் பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் நந்தகுமார் சிங் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், செய்தியாளர் சந்திப்பின் போது மணிப்பூர் முதல்வர் என் பிரேன் சிங் கூறுகையில், மலை மற்றும் பள்ளத்தாக்கு மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள பதுங்கு குழிகள் அகற்றப்படும் என்றும், விவசாய நடவடிக்கைகள் தொடங்கும் வகையில் மைதேயி மற்றும் குகி சமூக விவசாயிகளுக்கு பாதுகாப்பை வழங்க கூடுதல் மாநில படைகள் குவிக்கப்பட்டுள்ளன என்று தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.