இந்தூர்: மத்தியப் பிரதேச மாநிலத்தில் பழங்குடியின தொழிலாளி மீது சிறுநீர் கழித்த நபர் மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
நடந்தது என்ன? மத்தியப் பிரதேசத்தில் நேற்று முழுவதும் ஒரு வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அதில் ஒரு நபர் அமர்ந்திருக்க அவர் மீது இன்னொரு நபர் சிகரெட் புகைத்துக் கொண்டே சிறுநீர் கழிக்கிறார். இந்த வீடியோ வைரலான நிலையில் பாதிக்கப்பட்ட நபர் சித்தி மாவட்டத்தைச் சேர்ந்த 36 வயது இளைஞர் என்பதும் மனிதாபிமானமற்ற அந்தச் செயலைச் செய்தவர் பிரவேஷ் சுக்லா என்ற நபர் என்பதும் அடையாளம் தெரியவந்தது. சம்பவம் நடந்து 6 நாட்கள் கடந்து நேற்றுதான் அது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
கண்டனமும் கைதும்: இந்த வீடியோ வைரலான நிலையில் மத்தியப் பிரதேச மாநில முன்னாள் முதல்வர் கமல் நாத், “சித்தி மாவட்டத்தில் பழங்குடியின இளைஞர் மீது ஒருவர் சிறுநீர் கழிக்கும் வீடியோ பரவி வருகிறது. ஒரு பண்பட்ட சமூகத்தில் பழங்குடியின இளைஞர் மீதான இத்தகைய கொடூரமான செயலை நிறைவேற்ற இடமில்லை. இந்தச் சம்பவம் ஒட்டுமொத்த மத்தியப் பிரதேச மாநிலத்தையும் தலைகுனியச் செய்துள்ளது. இந்தக் கொடுமையைச் செய்தவருக்கு கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும். மத்தியப் பிரதேசத்தில் பழங்குடி மக்கள் மீதான வன்முறைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்” என்று கூறியிருந்தார்.
குற்றவாளி கைது: இந்நிலையில் இன்று அதிகாலையில் பிரவேஷ் சுக்லா என்ற அந்த நபரை போலீஸார் கைது செய்தனர். வீடியோ வைரலாகி பிரச்சினையான நிலையில் சுக்லா தலைமறைவானதாகவும் அவரைப் பல்வேறு இடங்களிலும் தேடி அதிகாலை 2 மணியளவில் கைது செய்ததாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பிரவேஷ் சுக்லா மீது தேசிய பாதுகாப்புச் சட்டம், எஸ்சி/எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டம் மற்றும் ஐபிசி சட்டப் பிரிவுகள் 294 (பிறருக்கு தொல்லை தரும் வகையில்: பொது இடத்தில் ஆபாசமாக நடந்து கொள்ளுதல்), 504 (அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் திட்டமிட்டு அவமானப்படுத்துதல்) ஆகியனவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. சுக்லாவின் மனைவி மற்றும் பெற்றோரிடமும் விசாரணை நடத்தப்பட்டது என்று போலீஸார் தெரிவித்தனர்.
பாஜக தொடர்பா? இதற்கிடையில் குற்றஞ்சாட்டப்பட்ட பிரவேஷ் சுக்லா, சித்தி தொகுதி பாஜக எம்எல்ஏ கேதார்நாத் சுக்லா மற்றும் ரேவா தொகுதி பாஜக எம்எல்ஏ ராஜேந்திர சுக்லா ஆகியோருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகின. அவர் பாஜக ஆதரவாளர் என்பதால் எப்படியும் தப்பிவிடுவார் என்று சமூகவலைதளங்களில் சிலர் கருத்துகளை முன்வைத்தனர். இதற்குப் பதிலளித்த கேதார்நாத் சுக்லா, “என் தொகுதியைச் சேர்ந்தவர் என்பதால் எனக்கு அவரைத் தெரியுமே தவிர அவர் பாஜக தொண்டரோ அல்லது எனது பிரதிநிதியோ கிடையாது” என்று திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்தார்.
கட்சியும் இல்லை; மதமும் இல்லை: இதற்கிடையில் இவ்விவகாரம் தொடர்பாகப் பேட்டியளித்த முதல்வர் சிவ்ராஜ் சவுகான், “கிரிமினல்களுக்கு சாதி, மதம், கட்சி என எதுவும் இல்லை. ஒரு கிரிமினல் எல்லா வகையிலும் கிரிமினல் மட்டுமே. இந்த நபர் தண்டனையில் இருந்து தப்ப முடியாது. அவர் மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட்டுள்ளேன்” என்றார்.
अपराधी केवल अपराधी होता है, उसकी कोई जाति, धर्म या पार्टी नहीं होती।
सीधी मामले को लेकर मैंने निर्देश दिए हैं, आरोपी को ऐसी सजा दी जाएगी जो उदाहरण बने। हम उसे किसी भी कीमत पर नहीं छोड़ेंगे। pic.twitter.com/gmNk7PxfZD
— Shivraj Singh Chouhan (@ChouhanShivraj) July 4, 2023
அதேபோல் மாநில உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா, “இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட நபர் எந்தக் கட்சியைச் சேர்ந்தவராக இருந்தாலும் அவர் தண்டனைக்கு உட்படுத்தப்படுவார்” என்றார்.