மக்களவைத் தேர்தல் 2024ஆம் ஆண்டு மே மாதம் நடைபெறும் என கூறப்பட்டாலும், அதற்கு முன்பாகவே நடத்த அதிக வாய்ப்பு உள்ளதாக எதிர்கட்சிகள் கூறிவருகின்றன. எதிர்கட்சிகள் ஒன்றிணைய நேரம் கொடுக்காமல் தேர்தலை நடத்திவிடலாம் என்பது தான் பாஜகவின் கணக்கு. தமிழ்நாட்டில் இந்த முறை அதிக இடங்களில் போட்டியிட வேண்டும், கூட்டணியில் தங்கள் கையே ஓங்க வேண்டும் என பாஜக நினைக்கிறது. ஆனால் எடப்பாடி பழனிசாமியின் சமீபத்திய நடவடிக்கைகள் அதற்கு முட்டுகட்டை போடுவதாக உள்ளன.
அதிமுகவை சீண்டும் பாஜகதமிழ்நாட்டில் 25 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என பாஜக கூறி வருகிறது. அதுமட்டுமல்லாமல் தென் சென்னை, வேலூர் போன்ற தொகுதிகளில் வேட்பாளர்களைச் சொல்லி பிரச்சாரத்தை தொடங்கியுள்ளது. அதிமுகவை சீண்டிப் பார்க்கவே இவற்றையெல்லாம் பாஜக செய்கிறது என்கிறார்கள். அதுமட்டுமல்லாமல் கட்சிக்குள் சேர்க்க வேண்டாம், கூட்டணியில் ஓபிஎஸ், தினகரன் தரப்பை சேர்க்க வேண்டும் என்று திரைமறைவில் வலியிறுத்தி வருகிறது.
திருப்பி கொடுக்கும் எடப்பாடி பழனிசாமிபாஜக எங்களிடமும் பேசிக்கொண்டுதான் உள்ளது என்று ஓபிஎஸ்ஸும் வெளிப்படையாக சொல்லி அதை உறுதிபடுத்தினார். பாஜக அதிக சீட் கேட்பதும், மீண்டும் ஓபிஎஸ், தினகரனை அழைத்து வருவதும் எடப்பாடி பழனிசாமிக்கு பிடிக்கவில்லை. அதனாலே கூட்டணியைப் பற்றி இப்போது பேச வேண்டாம், அதற்கு இன்னும் காலம் இருக்கிறது என்று கூறியுள்ளார். அதுமட்டுமல்லாமல் பாஜகவுக்கு தனது எதிர்ப்பை காட்டும் விதமாக பொது சிவில் சட்டத்தை அதிமுக எதிர்க்கும் என்று கூறியுள்ளார்.
அதிமுக சிறுபான்மையினர் வாக்கு வங்கிபாஜக கொண்டு வந்த பல சட்டங்களை அதிமுக இதற்கு முன் ஆதரித்தது. ஆனால் பொது சிவில் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தன் மூலம் நாங்கள் தற்போது பாஜக பக்கம் இல்லை என்ற தோற்றத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்தலாம். இதன் மூலம் அதிமுகவின் பழைய சிறுபான்மையினர் வாக்கு வங்கி மீண்டும் கிடைக்கும் என எடப்பாடி பழனிசாமி கருதுகிறாராம்.
அதிமுக பொதுச் செயலாளர் பதவி!ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களை கட்சியிலிருந்து நீக்கி ஒரு ஆண்டு நிறைவடையப் போகிறது. இந்த ஓர் ஆண்டு காலம் வழக்கு, விசாரணை, மேல்முறையீடு என்றே போய்விட்டது. தற்போது நீதிமன்றமும், தேர்தல் ஆணையமும் எடப்பாடி பழனிசாமியை பொதுச் செயலாளராக அங்கீகரித்து விட்டது.
ஒதுங்கிக் கொண்ட ஓபிஎஸ்அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும் என்று வலியுறுத்திய ஓபிஎஸ்ஸும் மீண்டும் இணைய முடியாது என்று கூறிவிட்டார். அதுமட்டுமல்லாமல் தங்களுக்கென டிவி சேனல், பத்திரிக்கை ஆகியவற்றை தயார் செய்து வரும் அவர் இனி தனித்து செயல்படவே அதிக வாய்ப்பு, அது நமக்கு சாதகம் தான் என எடப்பாடி பழனிசாமி தரப்பு கருதுகிறது. எனவே இனி உள்ள சில மாதங்களில் திமுகவுக்கு எதிராக தீவிரமாக அரசியல் செய்தாலே விட்டதை பிடித்துவிடலாம் என்று கணக்கு போட்டுள்ளார்.
வேகமெடுக்கும் அதிமுக
உடல்நிலை சரியில்லாமல் சேலத்தில் இருந்தே கட்சிப் பணிகளை ஒருங்கிணைத்து வந்த எடப்பாடி பழனிசாமி, தற்போது சேலத்தை சுற்றியே பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார். கட்சியில் புதிய உறுப்பினர்களை இணைக்கச் சொல்லி கட்சி நிர்வாகிகளை முடுக்கிவிட்டுள்ளார். பொதுச் செயலாளர் தனது உடல்நலத்தையும் பாராமல் கட்சிப் பணிகளில் வேகம் காட்டுவதால் ஒவ்வொரு மாவட்டத்திலும் முன்னாள் அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள் பம்பரமாக சுழல வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதனால் அதிமுக மீண்டும் பழைய ஃபார்முக்கு திரும்பியுள்ளதாக சொல்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.