வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர்
கால் பந்து காய்ச்சல் உலகை பிடித்திருந்தது அந்த மைதானத்தை பார்க்கும் எவருக்கும் தெரிந்துவிடும்.
ஒரு பெரிய மைதானத்தில் சிறுவர்கள், சிறுவர்கள்.
கழுகுப்பார்வையில் அந்த மைதானத்தை நோக்கியிருந்தால் புள்ளி புள்ளியாய் தோன்றியிருப்பார்கள்.
அந்த பெரிய மைதானத்தை தங்களுக்குள் எந்த ஒரு ஐக்கிய நாடு சபையின் உதவியும் இன்றி எல்லை பிரித்து அந்த சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்தார்கள்.
ஓவென்று கத்திக்கொண்டு…..
இங்கே பாஸ் செய், இங்கே பாஸ் செய் என்று கெஞ்சிக்கொண்டு….
பாக் ஆள், பாக் ஆள் என்று பின்னால் வரும் எதிரி டீமின் வீரனைப் பற்றி எச்சரிக்கை விடுத்துக்கொண்டு….
இந்த அனைத்து சத்தங்களும் சேர்ந்து அந்த மைதானமே ஒரே களேபரமாய் இருந்தது.
ரொனால்டோ படமும் மெஸ்ஸி படமும் போட்ட பனியன்கள் அணிந்து சில சிறுவர்கள்,
சற்றே பெரிய சிறுவர்கள் அர்ஜெண்டினா ஜெர்சியோ, ப்ரேசில் ஜெர்சியோ போட்டுக்கொண்டு,
வெவ்வேறு வகையான பந்துகளை வைத்துக்கொண்டு அவர்கள் விளையாடிக்கொண்டிருந்தார்கள்.
இந்த காய்ச்சல் ஒரு குறிப்பிட்ட காலம் வரை தான் இருக்கும்.
அடுத்து ஐபீஎல் வந்தால் அவர்களின் காய்ச்சல் கிரிக்கெட் காய்ச்சலாக மாறியிருக்கும். அவர்கள் அணியும் பனியன்களின் ஆதர்ஷ வீரர்களும் மாறியிருப்பர். ஜெர்சியும் சென்னை சூப்பர் கிங்ஸாகவோ அல்லது குஜராத் டைட்டன்சுடையதாகவோ மாறியிருக்கும்.

ஆனால் அச்சிறுவர்களுடைய தற்போதைய நோக்கம் எல்லாம் எதிரி டீமின் கோல் போஸ்ட்டாக வைக்கப்பட்டிருக்கும் இரண்டு கற்களின் நடுவே ஒரு கோல் போடுவது தான்.
அங்கு வரும் பெரியவர்கள் கூட ஜப்பானிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்திருந்த ஜெர்மனி பற்றி தான் பேசிக்கொண்டிருந்தார்கள்.
அந்த மைதானத்தின் சூழ்நிலைகளுக்கு ஒத்துவராமல் ஒரு பெண் தனியாக ஒதுக்குப்புறமாய் அமர்ந்திருந்தாள்.
அவள் அவ்வப்போது தலை தூக்கி தலை தூக்கி பார்த்துக் கொண்டிருந்தது யாரையோ அவள் எதிர்நோக்கி காத்திருக்கிறாள் என்று அவளை ஐந்து நிமிடம் கவனிக்கும் எவருக்கும் உணர்த்தியிருக்கும்.
சிறுவர்களுக்கு அவளை பார்க்கும் வயது இன்னும் வரவில்லை. அவர்கள் கவனமெல்லாம் எதிர் டீம் வீரர்களை ஏமாற்றி கோல் அடிப்பதிலேயே இருந்தது.
சிறிது நேரம் கழித்து அவள் எதிர்பார்த்து காத்திருந்த அந்த இளைஞனும் வந்து சேர்ந்தான்.
அவள் அவனைப் பார்த்து,”ஹாய் வருண்” என்றாள்.
அந்த இளைஞனும் அந்த யுவதியை நோக்கி,” ஹாய் ரீட்டா” என்றான்.
இப்பொழுது வருணும் ரீட்டாவும், ரீட்டா அமர்ந்திருந்த இடம் விட்டு எழுந்து அந்த எதிர்கால கால்பந்து வீரர்களை தொந்தரவு செய்யாமல் நடந்தனர்.
உட்கார்ந்திருந்தபொழுது ரீட்டாவை கவனிக்காத சில வாலிபம் கடக்கா பெரியவர்கள் அவள் வருணுடன் நடக்க ஆரம்பித்தபொழுது அவளை கவனித்தனர்.
ரீட்டா ஒரு காட்டன் சேலை அணிந்து எளிமையாக இருந்தாலும் அந்த காட்டன் சேலையால் அவள் அழகை தணித்து வைக்க முடியவில்லை.

வருணும் அவளுக்கு தகுந்த இணையாக தான் இருந்தான்.
அவர்கள் அந்த மைதானத்தை சுற்றி சென்று இப்பொழுது ரீட்டா முதலில் அமர்ந்திருந்த இடத்திற்கு 180 டிகிரீ எதிர்பக்கம் அடைந்திருந்தனர்.
மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்த ஏதோ ஒரு சிறுவர் குழு ஓ என்று சத்தமிட்டது. எதிரி அணியின் பாதுகாப்பு வளையத்தை கடந்து கோல் போட்டிருக்க வேண்டும்.
வருணும் ரீட்டாவும் தேர்ந்தெடுத்திருந்த இடம் தனிமையாக இருந்தது. சற்று தள்ளி ஆமணக்கு செடிகள் வளர்ந்திருந்தன.
யாரும் அவர்கள் பக்கம் இருக்கவில்லை.
வருண் கொஞ்சம் புல் வளர்ந்திருந்த இடமாக தேர்வு செய்து கைக்குட்டை விரித்து அமர்ந்தான்.
ரீட்டா தன் கைப்பையை அவன் அருகில் வைத்துவிட்டு சற்று தள்ளி அமர்ந்தாள்.
வருண் ரீட்டாவைப் பார்த்து,” இன்றோடு ஒரு வருசமாச்சு நாம் முதன் முதலில் சந்திச்சு” என்றான்.
ரீட்டா அதற்கு பதில் ஏதும் சொல்லாமல் வருணை நேர்பார்வை பார்த்து,’என்ன ஆச்சு வருண்?” என்று ஆவலுடன் வினவினாள்.
”முடியாதுட்டாங்க. அப்பா வீட்டை மறந்துடுங்கறார். அம்மாவோ மருந்து குடிச்சுடுவேங்கறா”
“நீ என்ன சொல்றே வருண்?”
”இந்த உலகை எதிர்த்துக்கொண்டு யாருமே இல்லாமல் நண்பர்களை மட்டும் நம்பி வாழ்வது ரொம்ப கஷ்டம் ரீட்டா. காலம் மாறியிருக்கும் என்று ரொம்ப நம்பிக்கை வச்சுறுந்தேன். மட்டன் சாப்பிடும் பெண் அக்ரகாரத்துக்கு ஒத்து வரமாட்டாங்குறாங்க”
”நான் மட்டன் சாப்பிட்றதை உட்டுட்றேன்னியா?”
“சொல்லிட்டேன். வீட்டுளே சாப்பிடலேன்னாலும் வெளிலே போய் சாப்டுவியாம். சிலுவை அணிந்த ஆட்கள் எல்லாம் வீட்டுக்குள் வருவாளாம்”
“நான் எங்கள் ஆட்களை துறந்து வர்றேன்னியா வருண்”
“ஆரம்பத்துலே அப்படி தான் சொல்வா. நாள் ஆக ஆக நீயும் மட்டன் சாப்பிட்றவனாயிடுவடான்னு தலையிலே அடிச்சுண்டு அழறா அம்மா”
“அப்ப நம்மளும் இன்னொரு அம்பிகாபதி அமராவதி தானா வருண்”
வருண் அதற்கு என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் ரீட்டாவையே பார்த்தவண்ணம் இருந்தான்.
“வருண் நம்ம சர்க்கிள் எல்லாம் தெரியும் நாம் காதலிக்கிறோம் என்று. ராபர்ட் இன்னும் என் கிட்டே தகராறு பண்ணிக்கிட்டு தான் இருக்கான், அவனை கல்யாணம் பண்ணிக்க சொல்லி. எனக்கு வருண் தான். வேறு யாரும் வருண் இடத்தில் வரமுடியாது”
இப்பொழுது அந்த மைதானத்தில் இருந்து ஓவென்ற சத்தம் மீண்டும் கேட்டது. இன்னொரு அணி கோல் போட்டிருக்க வேண்டும்.

“நாமும் இந்த சிறுவர்களைப் போலவே இருந்திருக்கலாமோ வருண். சீசனுக்கு சீசன் மாறிக்கொண்டு. எந்த ஒரு கவலையுமில்லாமல் இருந்திருக்கலாம்”
கேலி செய்கிறாளோ என்று ஒரு நிமிடம் சந்தேகித்து பின்,” இருக்காது” என்று தன்னையே தேற்றிக் கொண்ட வருண், ரீட்டாவிடம்,” உங்க வீட்லே என்ன சொல்றாங்க ரீட்டா” என்று மென்மையாக வினவினான்.
”இந்த மென்மை தான் எனக்கு உன்னிடம் பிடித்தது வருண்” என்று வெளிப்படையாக வருணைப் பாராட்டிய ரீட்டா,” முடியாதுட்டாங்க வருண்”
கொஞ்சம் கொஞ்சமாக அந்த மைதானத்தை இருள் சூழ ஆரம்பித்தது.
அந்த சிறுவர்கள் குழுக்கள் குழுக்களாய் மைதானம் விட்டு விலக ஆரம்பித்திருந்தனர்.
பெரியவர்களும் அன்றிரவு மோதப்போகும் அணிகள் பற்றி விவாதித்துக் கொண்டே சிறிது சிறிதாய் அவ்விடம் விட்டு அகன்றனர்.
அவர்கள் அனைவரும் மைதானம் விட்டு விலகுவதை பார்த்தவாறு வருணும் ரீட்டாவும் இன்னும் அமர்ந்திருந்தனர்.
சூரியன் இரவு ஷிஃப்டிற்கு ஐரோப்பா வழியாய் அமெரிக்கா சென்றுவிட்டபடியால் அந்த மைதானத்தை முழுமையாக இருள் சூழ்ந்திருந்தது.
அடுத்த நாள் மாலை மீண்டும் சிறுவர்கள் உலகக்கோப்பை ஆட்டங்களின் மாதிரிகளாய் விளையாட அந்த மைதானத்தில் குழுமியிருந்தனர்.
ஓ ஓ என்ற இரைச்சல் அந்த மைதானத்தை மீண்டும் நிரப்ப ஆரம்பித்தது.
யாரோ ஒரு சிறுவன் தவறாக அடித்த பந்து அந்த ஆமணக்கு செடிகளின் அருகில் வந்து விழுந்தது.
அந்த பந்தை எடுக்க ஒரு சிறுவன் வேகமாய் ஓடி வந்தான்.
அந்த சிறுவனுக்கு பின்னால் மைதானத்தில் இருந்து ஒரு எச்சரிக்கை குரல் வந்தது,
“டேய் பாத்துடா. நேத்து அந்த இடத்துலே ஒரு ஆம்பளையும் பொம்பளையும் செத்துக் கிடந்துருக்காங்கடா”
அன்புடன்
எஃப்.எம்.பொனவெஞ்சர்
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்…
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க – [email protected] என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்… நடந்துகொண்டிருக்கலாம்… நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.