“திமுக-வின் அதிநவீன விஞ்ஞான ஊழல்… மின்சாரத்துறையில் அரசுக்கு ரூ.397 கோடி இழப்பு!" – அண்ணாமலை

தி.மு.க ஆட்சிக்கு வந்த இரண்டாண்டில் அமைச்சர் செந்தில் பாலாஜி கவனித்து வந்த மின்சாரத்துறையில், டிரான்ஸ்ஃபார்மர் கொள்முதலில் ரூ.397 கோடி அளவுக்கு ஊழல் நடந்திருப்பதாக சில ஆவணங்களோடு லஞ்ச ஒழிப்புத்துறையில் அறப்போர் இயக்கம் இன்று புகாரளித்திருக்கிறது. இந்த நிலையில் தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, ஊழலை வெளிகொண்டுவந்தமைக்காக அறப்போர் இயக்கத்துக்கு நன்றி தெரிவித்து, இதை தி.மு.க-வின் அதிநவீன விஞ்ஞான ஊழல் என்று விமர்சித்ததோடு, இதில் சம்பந்தப்பட்டவர்கள்மீது வழக்கு பதிவுசெய்து நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தியிருக்கிறார்.

அறப்போர் இயக்கம் புகார்

இது குறித்து அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில், “தமிழ்நாடு மின்சார வாரியத்தில், தி.மு.க ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகளில் டிஸ்ட்ரிபியூஷன் டிரான்ஸ்ஃபார்மர் கொள்முதலில், ரூ.397 கோடி அளவிலான மிகப் பெரிய ஊழல் நடந்திருப்பது வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது.

அரசு அதிகாரிகள் துணையோடு கிட்டத்தட்ட 30 ஒப்பந்தக்காரர்கள், ஒவ்வொரு டெண்டரிலும் ஒரு ரூபாய்கூட மாறாமல் ஒரே தொகையை அனைவரும் ஒப்பந்தப்புள்ளியில் கூறியிருக்கின்றனர். கடந்த இரண்டு ஆண்டுகளில், 45,000 டிரான்ஸ்ஃபார்மர் கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தங்கள் கோரப்பட்டிருக்கின்றன. இந்த ஒப்பந்தங்கள் அனைத்திலும், அனைத்து ஒப்பந்தக்காரர்களும் ஒரே தொகையைக் குறிப்பிட்டிருப்பதைப் பார்த்ததுமே, ஒப்பந்த ஆய்வுக்குழு, இந்த ஒப்பந்தங்களை ரத்துசெய்திருக்க வேண்டும். ஆனால், அப்படிச் செய்யாமல், சந்தை மதிப்பைவிட மிக அதிகத் தொகைக்கு ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன.

அண்ணாமலை

ஒவ்வொரு டிரான்ஸ்ஃபார்மருக்கும், சந்தை மதிப்பைவிட சுமார் ரூ.4 லட்சத்துக்கும் மேலாக அதிக விலைக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. இப்படி இரண்டு ஆண்டுகளில் வழங்கப்பட்ட அனைத்து ஒப்பந்தங்களையும் கணக்கில்கொண்டால், சுமார் ரூ.397 கோடி அரசுக்கு இழப்பு ஏற்பட்டிருப்பதாகத் தெரிகிறது. அனைத்து ஒப்பந்தக்காரர்களும் சேர்ந்து மின்துறை அதிகாரிகள் மற்றும் துறை அமைச்சருடன் இணைந்து, அரசுக்கு இழப்பை ஏற்படுத்தியிருக்கின்றனர்.

இந்த ஊழலில் முக்கிய நபரான காசி என்பவர், மின்சார வாரியத்தில் கொள்முதல் நிதிப் பிரிவில் வேலை செய்பவர் என்றும், ஆனால், அலுவலகத்துக்குச் செல்லாமல், அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் இருந்தபடியே மின்சார வாரிய ஒப்பந்தங்களை முடிவு செய்வார் எனவும் கூறப்படுகிறது. இந்த நபர், 2020-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு, 2021-ம் ஆண்டு மார்ச் மாதம் கட்டாய ஓய்வு வழங்கப்பட்டவர். பின்னர் தி.மு.க ஆட்சிக்கு வந்ததும், அவரது பணிநீக்க உத்தரவு ரத்துசெய்யப்பட்டு மீண்டும் பணியில் அமர்த்தப்பட்டிருக்கிறார்.

தமிழ்நாடு மின்சார வாரியம்

ஊழல் செய்வதற்காகவே, கட்டாய ஓய்வு கொடுக்கப்பட்ட ஒருவரை மீண்டும் பணியிலமர்த்தி, அமைச்சர் வீட்டிலிருந்து ஒப்பந்தங்களை முடிவு செய்வது எல்லாம் திறனற்ற தி.மு.க ஆட்சியில் மட்டும்தான் சாத்தியம். அமைச்சருக்கும், மின்சார வாரிய நிர்வாகத்தின் தலைமை அதிகாரி உள்ளிட்ட அனைத்து அதிகாரிகளுக்கும் நேரடித் தொடர்பில்லாமல், ரூ.397 கோடி அளவுக்கான ஊழல் நடந்திருக்க வாய்ப்பில்லை.

செந்தில் பாலாஜி

உடனடியாக, அமைச்சர், அதிகாரிகள், ஒப்பந்தக்காரர்கள், மற்றும் காசி உட்பட இதில் தொடர்புடைய மின்சார வாரிய பணியாளர்கள் அனைவரின் மீதும் வழக்கு பதிவுசெய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக பா.ஜ.க சார்பில் வலியுறுத்துகிறேன். இந்த ஊழல் வழக்கு குறித்த தெளிவான தகவல்கள் அனைத்தையும் வெளிக்கொண்டு வந்து, லஞ்ச ஒழிப்புத்துறையில் புகாரளித்து நடவடிக்கை கோரியிருக்கும் அறப்போர் இயக்கத்துக்கு, தமிழக பா.ஜ.க சார்பில் மனமார்ந்த நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்” கூறப்பட்டிருக்கிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.