இந்தூர்: மத்தியப் பிரதேச மாநிலத்தில் மாநிலத்தில் ஓடும் காரில் வைத்து இளைஞர் கொடூரமாகத் தாக்கப்பட்டு, கால்களை நக்க வைத்த சம்பவத்தின் வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேச மாநிலத்தில் சித்தி என்ற இடத்தில் பழங்குடியின தொழிலாளி தஷ்மத் ராவத் மீது பாஜக நிர்வாகி பிரவேஷ் சுக்லா என்பவர் சிறுநீர் கழித்த சம்பவம் நாட்டையே உலுக்கியது.
இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி பகீர் கிளப்பிய நிலையில், சுக்லா மீது தேசியப் பாதுகாப்பு சட்டம், வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
மேலும், அவரது வீடும் புல்டோசர் கொண்டு இடிக்கப்பட்டது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அம்மாநில முதல்வர் சவுகான் அந்த தொழிலாளியை நேரில் அழைத்து மன்னிப்பு கேட்டார். அது மட்டுமின்றி அவரது கால்களையும் கழுவினார். அந்த பரபரப்பே இன்னும் ஓயாத நிலையில், இப்போது அதே மத்தியப் பிரதேசத்தில் மற்றொரு பகீர் சம்பவம் அரங்கேறியுள்ளது.
கொடூரம்: அங்கே குவாலியர் பகுதியில் ஓடும் காரில் இளைஞர்கள் சிலர் சேர்ந்து கொண்டு ஒருவரை மிக கடுமையாகத் தாக்குகின்றனர். அங்கிருந்த ஒருவர் வலுக்கட்டாயமாக அவரது கால்களை நக்க வைத்துள்ளனர். இது குறித்த வீடியோ இணையத்தில் வெளியாகி டிரெண்டாகி வருகிறது. நெட்டிசன்கள் பலரும் இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும், சம்மந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.
இதில் பாதிக்கப்பட்ட நபரும் குற்றஞ்சாட்டப்பட்டவர் என இரு தரப்பும் குவாலியர் மாவட்டத்தில் உள்ள தப்ரா நகரில் வசிப்பவர்கள் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. இணையத்தில் டிரெண்டாகும் அந்த வீடியோவில் காருக்குள்ளே இளைஞன் ஒருவர் மற்றொருவரை மிகக் கொடூரமாகத் தாக்குகிறார். கடுமையாகத் தாக்கும் அந்த இளைஞர், அத்துடன் நிற்காமல், தனது காலையும் நக்க வைக்கிறார்.
செருப்பால் அடித்த கொடூரம்: காதில் கேட்கவே முடியாத கெட்ட வார்த்தைகளால் அந்த இளைஞனைத் திட்டுகின்றனர். மேலும், முகத்திலேயே கடுமையாகத் தாக்கவும் செய்கிறார்கள். இந்தச் சம்பவம் தொடர்பாக மற்றொரு வீடியோவும் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. அதில் குற்றம் சாட்டப்பட்டவர் செருப்பைக் கழட்டி அந்த இளைஞனின் முகத்தில் அடிப்பதும் இருக்கிறது.
இந்தச் சம்பவத்திற்குப் பலரும் கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளனர். குற்றவாளியை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றும் அவர் மீது மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பலரும் வலியுறுத்தி வருகின்றனர். இந்தச் சம்பவத்திற்குக் கண்டனம் தெரிவித்துள்ள அம்மாநில உள்துறை அமைச்சர் நரோத்தம் மிஸ்ரா, இது தொடர்பாக ஏற்கனவே இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் இது சம்பவத்தில் தொடர்ந்து விசாரணை நடந்து வருவதாகவும் தெரிவித்தார்.
இது குறித்து தப்ரா துணைப் பிரிவு காவல்துறை அதிகாரி விவேக் குமார் ஷர்மா கூறுகையில், “நேற்று மாலை முதல் காரில் வைத்து இளைஞர் கொடூரமாகத் தாக்கப்படும் வீடியோ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. அந்த வீடியோவை ஆய்வுக்கு அனுப்பியுள்ளோம். பாதிக்கப்பட்ட இளைஞனின் குடும்பத்தினர் அளித்த புகார் அடிப்படையில் கடத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறோம்” என்று அவர் தெரிவித்தார்.