திருப்பத்தூர்: ஜோலார்பேட்டையே குஷியில் உள்ளது.. இருந்தாலும், ரயில்வே ஸ்டேஷனில் நடந்த சம்பவம், திருப்பத்தூர் மக்களை அதிர செய்துவிட்டது.. அப்படி என்ன நடந்தது?
ஜோலார்பேட்டையில் சதாப்தி ரயிலுக்கு, நிறுத்தம் குறித்த வேண்டுகோள்கள் விடுக்கப்பட்ட வண்ணம் இருந்தன.. கர்நாடகா மாநிலம் மைசூரு இடையே இயக்கப்படும் சதாப்தி விரைவு ரயிலானது, ஜோலார்பேட்டையில் நிறுத்தப்படுவதில்லை.
மத்திய அரசு: முக்கிய வழித்தடமான ஜோலார்பேட்டையில், ரயில் நிறுத்தம் வழங்க வேண்டும் என்று திருப்பத்தூர் மற்றும் ஜோலார்பேட்டை பகுதி மக்கள் நீண்டகாலமாகவே, தொடர்ந்து வலியுறுத்தபடியே இருந்தனர்..
அதேபோல, ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் சதாப்தி நின்று செல்ல வேண்டும் என்று திருவண்ணாமலை தொகுதி அண்ணாதுரை எம்பியும், பாராளுமன்ற கூட்டத்தில் கோரிக்கை விடுத்தார். இந்த கோரிக்கையை ஏற்று ஜோலார்பேட்டை ரெயில்நிலையத்தில் சதாப்தி எக்ஸ்பிரஸ், ஜூலை 9ம் தேதி முதல் ரெயில் நின்று செல்வதற்கான ரெயில்வே நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டது. இதற்கான ஒப்புதல் அறிவிப்பும் சமீபத்தில் வெளியாகியிருந்தது.
பொதுமக்கள்: அதன்படி, நேற்றிரவு 8.15 மணிக்கு வந்த ரெயில் ஜோலார்பேட்டை ரெயில்நிலைத்தில் நின்று 8.18 மணியளவில் பெங்களூரு நோக்கி புறப்பட்டது. அப்போது அண்ணாதுரை எம்பி மற்றும் எம்எல்ஏக்கள் க.தேவராஜி, ஏ.நல்லதம்பி மலர் தூவி கொடியசைத்து தொடங்கி வைத்தனர். நீண்ட கால கோரிக்கை நிறைவேற்றப்பட்டதால், பயணிகளும், பொதுமக்களும் இதனால் மகிழ்ச்சியில் திக்குமுக்காடிப்போயிட்டனர்.
எனினும் சிறு சலசலப்பு ஜோலார்பேட்டையில் ஏற்பட்டது.. முன்னதாக, ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரெயில் நின்று செல்லும் நிகழ்வை, ஜூலை 9ம் தேதி மத்திய அமைச்சர் எல்.முருகன் துவங்கி வைப்பதாக கூறப்பட்டது.. இதையடுத்து, மத்திய அமைச்சர் முருகன் வரப்போவதாக அறிவிப்பு வெளியானதால், ஏராளமான பாஜகவினர் ரயில்வே ஸ்டேஷனில் திரண்டிருந்தனர். ஆனால், முருகன் வரவில்லை. இதனால் பாஜகவினர் ஏமாற்றம் அடைந்தனர்.
சலசலப்பு: மேலும், ஜோலார்பேட்டை ரயில்நிலைய 1வது நடைமேடையில் திமுக சார்பில் விழா மேடை அமைக்கப்பட்டிருந்தது.. இதையடுத்து, இந்த நிகழ்ச்சியில் பாஜக நிர்வாகிகள் பேச அனுமதி மறுக்கப்பட்டதாக சொல்லப்படவும், திமுக மற்றும் பாஜக தரப்பினரிடையே, சலசலப்பு ஏற்பட்டது..

அதேபோல, விழா மேடையில் குறைந்தளவு நாற்காலிகள் போடப்பட்டது. இதனால் முதலில் வந்த திமுகவினர் மேடையில் உட்கார்ந்துவிட்டனர்.. அதற்கு பிறகு வந்த பாஜகவினருக்கு நாற்காலிகள் இல்லாததால், இது தொடர்பாகவும் சலசலப்பு ஏற்பட்டது. அப்போது பாஜகவினர் திடீரென கோஷங்களை எழுப்ப ஆரம்பித்துவிட்டனர்.. அதே போன்று திமுகவினரும் கோஷங்களை பதிலுக்கு எழுப்பினர். அப்போது அவர்களுக்குள் தளளுமுள்ளு ஏற்பட்டது. உடனே போலீசார் அவர்களை சமாதானம் செய்தனர்.
ஹைலைட்: இதில் ஹைலைட் என்னவென்றால், அங்குவந்த சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயிலை இவர்களில் யார் கொடியசைத்து வரவேற்பது என்பதில் வாக்குவாதம் வெடித்துள்ளது..
இந்த வாக்குவாதத்தை பார்த்துமே அங்கிருந்த பொதுமக்கள் அதிர்ச்சியாகிவிட்டனர்.. பிறகு போலீசார் மறுபடியும் இரு தரப்பினரையும் சமாதானம் செய்யும் அளவுக்கு நிலைமை போய்விட்டது.. இறுதியில், திமுகவினரும், பாஜகவினரும் சேர்ந்தே ரயிலை வரவேற்று கொடியசைத்து வைத்திருக்கிறார்கள். இப்படி, திமுக – பாஜக செய்த சம்பவத்தால், ஜோலார்பேட்டையே வெலவெலத்து போய்விட்டது.