தருமபுரி: தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே சாலையைக் கடந்து சென்ற வெள்ளை நிற பாம்பை அப்பகுதி மக்கள் ஆச்சரியம் மேலிட பார்த்தனர்.
பென்னாகரம் வட்டத்தில் கரியம்பட்டி-முதுகம்பட்டி இடையே புதிதாக தார்சாலை அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. நேற்று (ஜூலை 10) சாலைப் பணியாளர்கள் நாய்க்கனேரி பகுதியில் சாலைப் பணிகளில் ஈடுபட்டிருந்தனர்.
இந்நிலையில், நாய்க்கனேரி பகுதியில் சாலையோரம் உள்ள குட்டை ஒன்றில் இருந்து வெள்ளை நிற பாம்பு ஒன்று வெளியேறி வந்துள்ளது. சுமார் 8 அடி நீளம் கொண்ட இந்த பாம்பை அப்பகுதியில் சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.
தொடர்ந்து அந்தப் பாம்பு சாலையைக் கடந்து விளைநிலங்களில் நுழைந்து பின்னர் புதரில் சென்று மறைந்தது. இவ்வாறு அந்த பாம்பு புதரில் மறையும் வரை சாலைப் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களும், அப்பகுதி மக்களும் திரண்டு பின் தொடர்ந்து சென்று அந்த பாம்பை ஆச்சரியம் மேலிட வேடிக்கைப் பார்த்தனர்.
அதன் தோற்றத்தை பார்த்தபோது சாரை வகையைச் சேர்ந்த பாம்பு போன்று காட்சியளித்தது என சாலைப் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் தெரிவித்தனர்.