“செந்தில் பாலாஜி, மெமோவை வாங்க மறுத்தது ஏன்..?" – அடுக்கடுக்காக கேள்வி கேட்ட நீதிபதி!

பண மோசடி விவகாரத்தில் அமலாக்கத்துறையால் கடந்த மாதம் கைதுசெய்யப்பட்ட தி.மு.க அமைச்சர் செந்தில் பாலாஜி, காவேரி மருத்துவமனையில் இதய அறுவை சிகிச்சை முடித்துவிட்டு தற்போது நீட்டிக்கப்பட்ட நீதிமன்றக் காவலில் இருக்கிறார். இந்த நிலையில், செந்தில் பாலாஜியை விடுவிக்கக் கோரி அவரின் மனைவி மேகலா தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு, மூன்றாவது நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன்பு இன்று இறுதி விசாரணைக்கு வந்தது.

செந்தில் பாலாஜி

அப்போது, மேகலா தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், “செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கில், குற்றம் மூலம் பெற்ற பணத்தை வைத்திருப்பதாகவோ, அதை மறைத்திருப்பதாகவோ எந்த ஆதாரங்களும் இல்லை. ஆதாரங்கள் இருந்தால் மட்டுமே அமலாக்கத்துறையினரால் கைதுசெய்ய முடியும். சட்டவிரோத பணப் பரிமாற்றத் தடைச் சட்டப் பிரிவுகளின்படி அமலாக்கத்துறை விசாரணை நடத்த முடியுமே தவிர, புலன் விசாரணை மேற்கொள்ள முடியாது என உச்ச நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது. அதுமட்டுமல்லாமல் இந்த வழக்கில் செந்தில் பாலாஜியின் வாக்குமூலம் ஏற்கனவே பதிவும்செய்யப்பட்டிருக்கிறது. அதோடு, கைதுசெய்யப்பட்ட நபரை 24 மணி நேரத்தில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, ஆதாரங்களை சீல் வைத்த கவரில் நீதிமன்றத்தில் சமர்ப்பித்து, கைதுக்கான காரணங்களைத் தெரிவித்து நீதிமன்றக் காவலில் வைக்க அமலாக்கத்துறை கோரலாம்” என விளக்கினார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதி சி.வி.கார்த்திகேயன், “நீதிமன்றக் காவலில் வைக்க நீதிமன்றத்துக்கு அதிகாரம் உள்ளபோது, ஆட்கொணர்வு மனு எப்படி தாக்கல் செய்ய முடியும். நீதிமன்றக் காவலிலுள்ள செந்தில் பாலாஜியை ஆஜர்படுத்தி விடுவிக்கும்படி அமலாக்கத்துறைக்கு எப்படி உத்தரவு பிறப்பிக்க முடியும்” எனக் கேள்வி எழுப்பினார்.

பின்னர் இது சம்பந்தமாக மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ வாதிடுவார் எனத் தெரிவித்த கபில் சிபல், “செந்தில் பாலாஜியை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்க அனுமதித்த சென்னை உயர் நீதிமன்றம், அவர் நீதிமன்றக் காவலில் தொடர வேண்டும் என உத்தரவிட்டிருக்கும் நிலையில், மறுநாளே அவரை காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கோரி அமலாக்கத்துறை மனுத்தாக்கல் செய்தது குறித்து உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்திருக்கிறது. குற்றம்சாட்டப்பட்ட எவரும் நீதிமன்ற நடைமுறைகளை விரக்தியடையச் செய்ய முடியாது என அமலாக்கத்துறை, அமர்வு நீதிமன்றத்தில் தெரிவித்திருப்பது தவறானது.

கபில் சிபல்

காவலில் வைத்து விசாரிக்க அனுமதி பெற்ற அமலாக்கத்துறை, அதை ஏன் அமல்படுத்தவில்லை… ஒருவேளை அமர்வு நீதிமன்றம் விதித்த நிபந்தனைகளால் விசாரிக்க முடியவில்லை என்றால், அதை எதிர்த்து அமலாக்கத்துறை உயர் நீதிமன்றத்தை நாடியிருக்கலாம். மருத்துவர்களிடம் சொல்லி உரிய ஏற்பாடுகளுடன் விசாரணை நடத்தியிருக்கலாம். அதற்கு எந்த தடையும் இல்லை. மேலும், காவலில் வைத்து விசாரிக்க சட்டபூர்வமாக அனுமதி பெற்றபோதும் காவலில் எடுக்காததால், முதல் 15 நாள்களை நீதிமன்றக் காவல் காலமாக கருதக் கூடாது என அமலாக்கத்துறை கோர முடியாது” என்று வாதிட்டார்.

அதைத் தொடர்ந்து, “மருத்துவமனையில் செந்தில் பாலாஜியை காவலில் வைத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு ஏதேனும் தடை இருந்ததா?” என நீதிபதி எழுப்பினார்.

இதற்குப் பதிலளித்த கபில் சிபல், “எந்த தடையும் இல்லை. மருத்துவர்களே விசாரணை நடத்த அனுமதித்ததாக அமலாக்கத்துறை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டிருக்கிறது. அதோடு, நீதிமன்றக் காவலில் நீடிக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை காவலில் வைத்து விசாரிக்க அனுமதியளித்து அமர்வு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கக் கூடாது என நீதிபதி நிஷா பானுவும், தாங்கள் காவலில் வைத்து விசாரிக்க கோரி அமலாக்கதுறை அமர்வு நீதிமன்றத்தை அணுகியது குறித்து நீதிபதி பரத சக்கரவர்த்தியும் அதிருப்தி தெரிவித்திருக்கின்றனர்.

Senthil Balaji: செந்தில் பாலாஜி

ஆரம்பம் முதல் அமலாக்கத்துறை அதிகார வரம்பை மீறியிருக்கிறது, சட்ட அதிகாரம் இல்லாத நிலையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் தங்களை காவல்துறை அதிகாரிகள்போல கருதி செயல்பட்டனர். நீதிபதி நிஷா பானுவின் தீர்ப்பு சரியானது” என்று கூறி வாதத்தை முடித்தார்.

கபில் சிபலைத் தொடர்ந்து வாதிட்ட மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, “செந்தில் பாலாஜி வழக்கில் இரு நீதிபதிகளும் ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு உகந்தது எனத் தெரிவித்திருக்கின்றனர். கைது நடவடிக்கை அடிப்படை உரிமைகளை மீறுவதாக இருந்து, அதனைக் கருத்தில் கொள்ளாமல் நீதிமன்றக் காவலில் வைத்து உத்தரவிட்டால், அது சட்டவிரோதம். செந்தில் பாலாஜியை நீதிமன்றக் காவலில் வைத்து உத்தரவு பிறப்பித்த பின்னர், அதற்கு எதிர்ப்பு தெரிவித்த மனுவை நிராகரித்த அமர்வு நீதிமன்ற நீதிபதியின் நடைமுறை சரியானதல்ல” என்றார்.

அதைத் தொடர்ந்து “கைதுக்கான காரணங்கள் குறித்த ஆவணத்தை வழங்கியபோது அதை செந்தில் பாலாஜி பெற மறுத்தது ஏன்” என கேள்வி எழுப்பிய நீதிபதி, “கைது நடவடிக்கை சட்டத்தை மீறி மேற்கொள்ளப்பட்டிருந்தால், அமலாக்கத்துறை அதிகாரிகளை கூண்டில் ஏற்றி அதற்கான இழப்பீட்டை பெற்றுக் கொள்ளலாம்” என்று கூறினார்.

பின்னர் இதனை எதிர்த்து வாதிட்ட என்.ஆர்.இளங்கோ, “கைதுக்கான காரணங்கள் குறித்த ஆவணங்கள் மின்னஞ்சலில் அனுப்பிய பிறகு திருத்தப்பட்டிருக்கின்றன. இது முறைகேடானது. ஜூன் 13-ம் தேதி சோதனை தொடங்கியது முதல் செந்தில் பாலாஜி ஒத்துழைத்தார். வாக்குமூலமும் அளித்தார். ஆனால் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என அமலாக்கத்துறையினர் குற்றம்சாட்டுகின்றனர். காவலில் வைத்து விசாரிக்க அனுமதி பெற்ற நிலையில், காவலில் வைத்து விசாரிக்க வேண்டாம் என முடிவுசெய்தால் காவலை திரும்ப வழங்கியிருக்க வேண்டும். அதை விடுத்து, காவலில் எடுத்து விசாரிக்க முடியவில்லை என அமர்வு நீதிபதிக்கு மின்னஞ்சல் அனுப்பியிருக்கக் கூடாது” என வாதிட்டார்.

வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ

இதற்கு பதில் வாதம் முன்வைத்த கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், “அமலாக்கத்துறை காவலில் எடுத்திருந்தால்தான் மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த முடியும்” என்று விளக்கினார். இதற்குப் பதிலளித்த என்.ஆர்.இளங்கோ, “காவலில் எடுத்து விசாரிக்க முடியவில்லை என அமர்வு நீதிமன்றத்துக்கு மின்னஞ்சலில் அனுப்பிய மனுவை மனுதாரர் தரப்புக்கு வழங்கவில்லை” எனக் குறிப்பிட்டார்.

இறுதியாக மேகலா தரப்பு வாதம் முடிவடைந்ததையடுத்து, அமலாக்கத்துறை வாதத்துக்காக வழக்கின் விசாரணையை நாளைக்கு தள்ளிவைத்தார் நீதிபதி சி.வி.கார்த்திகேயன்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.