புதுடெல்லி: காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய சட்டப்பிரவு 370 ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் ஆகஸ்ட் 2 ஆம் தேதி முதல் தினமும் விசாரணை செய்யப்படும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வகை செய்யும் 370-வது சட்டப்பிரிவை ரத்து செய்து கடந்த 2019 ஆகஸ்ட் 5 ஆம் தேதி அரசாணை வெளியிடப்பட்டது. இதன்மூலம் காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் சுமார் 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் தொடரப்பட்டன.
இந்த வழக்குகளை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான 5 நபர்கள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரித்து வருகிறது. இந்த நிலையில் தலைமை நீதிபதி சந்திர சூட், இந்த அமர்வு முன் விசாரணைக்கு உள்ள இந்த மனுக்கள் மீது ஆகஸ்ட் 2ம் தேதி (புதன்கிழமை) முதல் விசாரணை நடைபெறும். திங்கள் மற்றும் வெள்ளி தவிர்த்த மற்ற நாட்களில் தினமும் விசாரணை நடைபெறும்” என்று தெரிவித்தார்.
இந்த வழக்குத் தொடர்பான அனைத்து ஆவணங்களையும், அனைத்து தரப்பினரும் ஜூலை 25ம் தேதிக்குள் மின்னணு முறையில் தாக்கல் செய்யவேண்டும் என்று அரசியல் சாசன அமர்வு தெரிவித்துள்ளது. மேலும், வழக்கு விசாரணையின் போது ஜம்மு காஷ்மீரின் தற்போதைய நிலைமை குறித்து மத்திய அரசு தாக்கல் செய்துள்ள புதிய பிரமாணபத்திரம் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாது. இதில் உள்ள அரசியல் சாசனம் தொடர்பான விஷயங்களை மட்டுமே விசாரிப்போம் என்று அமர்வு தெளிவுபடுத்தியுள்ளது.
இதனிடையே, மூத்த வழக்கறிஞர் ராஜு ராமச்சந்திரன் ஐஏஎஸ் அதிகாரி ஷா ஃபாசல் மற்றும் முன்னாள் மாணவ செயல்பாட்டாளர் ஷீலா ரஷித் ஆகியோர் இதுதொடர்பாக தாக்கல் செய்த மனுவினை திருப்பப்பெறுவதாக தெரிவித்தார். அதனை ஏற்றுக்கொண்ட தலைமை நீதிபதி அவர்கள் இருவரின் பெயர்களையும் மனுதார்கள் பட்டியலில் இருந்து நீக்கும்படி நீதிமன்ற பதிவருக்கு உத்தரவிட்டார்.
அரசியலமைப்பு சட்டப்பிரிவு 370-ன் படி ஜம்மு காஷ்மீர் மக்களுக்கு கடந்த 1954ம் ஆண்டு முதல் 2019 ம் ஆண்டு வரை சிறப்பு அந்தஸ்து மற்றும் சலுகைகள் வழங்கப்பட்டிருந்தன. இந்தநிலையில், ஜம்மு காஷ்மீர் (மறுசீரமைப்பு) சட்டம் 2019 அமலுக்கு வந்தது. இதனைத் தொடர்ந்து ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.