டாஸ்மாக் கடையை காலையிலேயே திறப்பீங்களா.. விட்ருவோமா நாங்க.. ராமதாஸ் அதிரடி

சென்னை:
தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகளை காலையிலேயே திறப்பது குறித்து பரிசீலித்து வருவதாக மதுவிலக்கு துறை அமைச்சர் முத்துசாமி கூறிய நிலையில், அதற்கு பாமக நிறுவனர்

கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ராமதாஸ் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

தமிழ்நாட்டில் மது குடிப்பவர்களின் நலனைக் கருத்தில்கொண்டு, 90 மி.லி. மதுபுட்டி அறிமுகம் செய்யப்படும் என்று மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் முத்துசாமி கூறியுள்ளார். அதுமட்டுமின்றி, காலையில் கடுமையான பணிக்கு செல்பவர்களின் நலனைக் கருத்தில்கொண்டு நண்பகல் 12 மணிக்கு திறக்கப்படும் மதுக்கடைகளை காலையிலேயே திறப்பது குறித்தும் ஆய்வு செய்து வருவதாக அமைச்சர் கூறியுள்ளார்.

அமைச்சரின் இந்த பேச்சு அதிர்ச்சி அளிக்கிறது. மதுவிலக்குத்துறை அமைச்சராக முத்துசாமி நியமிக்கப்பட்ட போது, மதுவை கட்டுப்படுத்துவதில் நல்லது நடக்கும் என்ற நம்பிக்கை பிறந்தது. ஆனால், அவரது அண்மைக்கால செயல்பாடுகள் அந்த நம்பிக்கையை சிதைத்துவிட்டன. 90 மி.லி. மதுபானம் விற்கப்பட்டால் அது சிறுவர்களை அதிக அளவில் கவர்ந்திழுக்கும். மேலும், பணம் இல்லாதவர்கள் கூட விலை குறைவாக இருப்பதால் எளிதாக காகிதக் குடுவை மதுவை வாங்கிக் குடிப்பார்கள்.

காலை நேரத்தில் மதுக்கடைகள் திறக்கப்பட்டால், அது கடுமையான வேலைக்கு செல்பவர்களுக்கு உதவாது. மாறாக, அவர்கள் காலையிலேயே மது அருந்திவிட்டு, வேலைக்கு செல்லாமல் முடங்கிக் கிடக்கவே உதவும். அதனால் அவர்களின் குடும்பங்களின் வாழ்வாதாரம் என்னவாகும்? தமிழ்நாட்டின் வளர்ச்சியையே இது பாதிக்கும்.

தமிழகத்தில் முழுமையான மதுவிலக்கு ஏற்படுத்தப்பட வேண்டும் என்பதே மக்களின் விருப்பம். இதை மீறி, 90 மி.லி. மது அறிமுகம் செய்யப்பட்டாலும், மதுக்கடைகள் காலையில் திறக்கப்பட்டாலும் அவற்றை எதிர்த்து பாட்டாளி மக்கள் கட்சி கடுமையான போராட்டங்களை நடத்தும் எனத் தெரிவித்துக் கொள்கிறேன். எனவே, அத்தகைய திட்டங்களை தமிழக அரசு கைவிட வேண்டும். தமிழகத்தில் உள்ள மதுக்கடைகளை படிப்படியாக மூடி, அடுத்த இரண்டு ஆண்டுகளில் முழுமையான மதுவிலக்கை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு தனது அறிக்கையில் ராமதாஸ் கூறியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.