சென்னை: தமிழகத்தில் சட்ட விரோத கருக்கலைப்பு குறைந்துள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு பேரணி மற்றும் கருத்தரங்கை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறுகையில், “1987ம் ஆண்டு முதல் உலக மக்கள் தொகை தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. 37வது உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு இன்று விழிப்புணர்வு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 4000 பேருந்துகளில் 14 வகையான வாசகங்கள் கொண்ட விழிப்புணர்வு போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வரை 41% பேர் மட்டுமே பேருந்துகளை பயன்படுத்தினர். மகளிருக்கு கட்டணம் இல்லாத பயணம் அறிவிக்கப்பட்ட பின்பு இது 60 சதவீதமாக உயர்ந்துள்ளது. பணிக்கு செல்பவர்கள் மற்றும் கல்லூரி பெண்கள் பேருந்தில் அதிக அளவில் பயணிக்கின்றனர். அதனால் தான் மகளிர் விழிப்புணர்வு ஏற்படுத்த பேருந்துகளில் விழிப்புணர்வு வாசகங்களை ஒட்டியுள்ளோம். பல்வேறு விழிப்புணர்வு வாசகங்கள் மற்றும் சிகிச்சை முறைகள் அடங்கிய துண்டு பிரசுரமும் மூலமும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
பாரதியார் ஒரு பாடலில் 30 கோடி முகமுடையார் என்று பாடியிருப்பார். 100 ஆண்டுகளுக்கு முன்னாள் இந்தியாவின் மக்கள் தொகை 30 கோடி. தற்போது 142 கோடியாக அதிகரித்துள்ளது. ஆண்டுக்கு ஒரு கோடி அளவுக்கு மக்கள் தொகை உயர்ந்து வருகிறது. விரைவில் சீனாவை கடந்து இந்தியா மக்கள் தொகையில் முதலிடம் என்ற சூழலில் செல்கிறது.
இந்தியாவில் முதன்முறையாக கருவுற்ற ஒரு சில மாதங்களிலேயே கருவின் நிலையை முறையாக ஆய்வு செய்து குறை இருப்பினும் அதனை என்ன செய்யலாம் என்பதை பெற்றோர் முடிவெடுக்கும் வகையில் ஆய்வகம் ஓமந்தூரார் பன்நோக்கு மருத்துவமனையில் அமைந்துள்ளது.
கருக்கலைப்பு தொடர்பான ஆய்வகங்களை தீவிரமாக தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது. சட்ட விரோத கருக்கலைப்பு, பிறக்கவிருக்கும் குழந்தையின் பாலினம் குறித்து தெரிவிக்கக்கூடாது என்பது குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் ஆய்வகங்களில் வைக்கப்பட்டுள்ளது. முறையான அனுமதியில்லாத ஆய்வகங்களுக்கு சீல் வைக்கப்படுகிறது. சட்ட விரோத கருக்கலைப்பு தமிழகத்தில் குறைந்துள்ளது” என்று அவர் கூறினார்.