பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை வரும் 28-ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் பாதயாத்திரை செல்ல திட்டமிட்டிருக்கிறார். ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரத்தில் வருகிற 28-ம் தேதி பாதயாத்திரையைத் தொடங்குகிறார். “எம் மண் எம் மக்கள்” என்ற இந்தப் பாதயாத்திரையை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தொடங்கி வைக்கவிருப்பதாகக் கூறப்படுகிறது. மூன்று கட்டங்களாக நடைபெறவிருக்கும் இந்தப் பாதயாத்திரையானது, அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 11-ம் தேதி சென்னையில் நிறைவடையவிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் ராமநாதபுரம்-ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் கடந்த சில நாள்களாகப் பழைய தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்த மைல்கற்கள் அகற்றப்பட்டு, நெடுஞ்சாலைத்துறை சார்பில் அவசர அவசரமாகத் தமிழ், ஆங்கிலம் மற்றும் இந்தியில் எழுதப்பட்ட புதிதாக மைல்கற்கள் நடப்பட்டு வருகின்றன. இது ராமநாதபுரம் பகுதியில் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.

2018-ம் ஆண்டு இதேபோல் ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் மைல்கற்களில் இந்தியில் ஊர் பெயர்கள் எழுதப்பட்டதற்கு தி.மு.க உள்ளிட்ட பல்வேறு கட்சியினர், அமைப்பினர் கண்டனம் தெரிவித்து, கறுப்பு மையால் மைல்கற்களில் எழுதப்பட்டிருந்த இந்தி எழுத்துகளை அழித்து, தங்கள் எதிர்ப்பைப் பதிவுசெய்தனர். அதன் பிறகு தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட மைல்கற்கள் புதிதாக நடப்பட்டன. இது நடந்து நான்கு ஆண்டுகள் கடந்தவிட்ட நிலையில், தற்போது மீண்டும் இந்தி எழுத்துகள் எழுதப்பட்ட மைல்கற்கள் நடப்பட்டிருப்பது தி.மு.க-வினரிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
இது குறித்து நம்மிடம் பேசிய தி.மு.க நிர்வாகி அரு.சுப்பிரமணியன், “தமிழகத்தில் இருமொழிக் கொள்கைதான் என்பதில் தி.மு.க அரசு உறுதியாக இருக்கிறது. அதனை மீறி மத்தியிலுள்ள பா.ஜ.க அரசு, தமிழகத்தில் இந்தியை எப்படியாவது திணித்தே ஆக வேண்டும் எனத் தொடர்ந்து முயன்று வருகிறது. 2018-ம் ஆண்டு ராமநாதபுரத்தில் நெடுஞ்சாலையில் மைல்கற்கள் மூலம் இந்தியைத் திணிக்க முயன்றதை தடுத்து நிறுத்தினோம்.
இந்த நிலையில், ராமேஸ்வரத்தில் அண்ணாமலையின் நாடக யாத்திரையை தொடங்கி வைக்க வரும் அமித் ஷாவை குளிர்விப்பதற்காக மைல்கற்களில் இந்தியில் எழுதி வைத்திருக்கின்றனர். இந்தப் பாதயாத்திரையால் பா.ஜ.க உட்பட யாருக்கும் எந்தப் பயனும் இல்லை. ஆனால் பாதயாத்திரையை காரணமாக வைத்து தமிழகத்தில் மீண்டும் இந்தியைத் திணிக்க பா.ஜ.க திட்டமிட்டு வருவதாக எங்களுக்குச் சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது.

எனவே இந்தியில் எழுதப்பட்ட மைல்கற்களை உடனடியாக அகற்றவில்லை என்றால், அண்ணாமலை பாதயாத்திரையை தொடங்கி வைக்க வரும் அமித் ஷவுக்கு எதிராக கடுமையான போராட்டத்தை தி.மு.க சார்பில் முன்னெடுப்போம்” என கொதிப்புடன் கூறினார்.
இது தொடர்பாக ராமநாதபுரம் (தெற்கு) தி.மு.க ஒன்றியச் செயலாளரும், யூனியன் சேர்மனுமான கே.டி.பிரபாகரிடம் பேசினோம். “அண்ணாமலை மேற்கொள்ளவிருக்கும் இந்தப் பாதயாத்திரையை மக்கள் கவனிக்க வேண்டும் என்பதற்காக இந்தியைக் கையிலெடுத்திருக்கின்றனர். ஏற்கெனவே ராமநாதபுரத்தில் மைல்கற்களில் இந்தியில் எழுதப்பட்டிருந்ததை தி.மு.க-வினர் கறுப்பு மையால் அழித்ததை அறிந்துகொண்டு, `மீண்டும் அதைச் செய்தால் அதற்கு எதிராக தி.மு.க-வினர் போராடுவார்கள், அதனை நமக்கு சாதகமாக்கி, நமது பாதயாத்திரைக்கு எதிராக தி.மு.க-வினர் போராடுகிறார்கள்’ என மக்களை நம்பவைத்து மலிவு விளம்பரம் தேடுவதற்காகத்தான் பா.ஜ.க-வினர் இந்தத் திட்டத்தை தீட்டியிருக்கின்றனர். அவர்கள் நினைத்ததுபோலவே நாங்கள் போராட்டத்தை முன்னெடுப்போம்.
ஆனால், அந்தப் போராட்டம் கண்டிப்பாக அவர்களுக்கு எதிராகத்தான் அமையும். பாதயாத்திரை செல்லும் இடங்களில் தமிழக மக்களின் எதிர்ப்பலைகளைக் கண்டிப்பாக அண்ணாமலையால் சமாளிக்க முடியாது என்பதை அவர் புரிந்துகொள்ள வேண்டும். இந்தி மொழிமீது பா.ஜ.க-வினருக்கும் பெரிய நாட்டம் இல்லை. ஆனால் இந்தியைத் திணித்துவிட்டால், தாங்கள் தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரங்கள் செய்ய எளிதாக இருக்கும் என்ற குறுகிய எண்ணத்துடன் மட்டமான அரசியலை பா.ஜ.க-வினர் கையிலெடுத்திருக்கின்றனர். ராமநாதபுரத்தில் மைல்கற்களில் இந்தி எழுத்துகள் எழுதப்பட்டிருப்பது குறித்தும், அதற்கு எதிராக என்னென்ன மாதிரியான போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என்பது குறித்தும் கட்சித் தலைமையிடம் ஆலோசனை பெற்று வருகிறோம்.

எனவே நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் உடனடியாக இந்தி எழுத்துகள் இல்லாத புதிய மைல்கற்களை நட வேண்டும். இல்லையென்றால் தமிழகம் முழுவதும் தி.மு.க சார்பில் கடுமையானப் போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படும். குறிப்பாக ராமேஸ்வரத்தில் அண்ணாமலை பாதயாத்திரையை தொடங்கி வைக்க வரும் அமித் ஷாவை ராமநாதபுரம் மாவட்டத்துக்கு உள்ளேயே நுழைய முடியாதபடி லட்சக்கணக்கானோரை ஒன்று திரட்டி மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம்” என்றார்.
இது குறித்து தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் விளக்கம் கேட்பதற்காக தொடர்பு கொண்டபோது, ஒருவரை ஒருவர் மாற்றி… மாற்றி `அது என்னுடைய டிபார்ட்மென்ட் அல்ல’ என மட்டுமே தெரிவித்து, உரிய பதிலளிக்காமல் இணைப்பைத் துண்டித்துவிட்டனர்.