சென்னை: சன் டிவியின் முன்னணி தொடராக மாறும் முயற்சியில் தொடர்ந்து முன்னிலையில் உள்ளது இனியா தொடர்.
ஆல்யா மானசாவின் நடிப்பில் நீண்ட காலங்களுக்கு பிறகு ரிஷியும் இணைந்துள்ள இந்த சீரியல் சிறப்பான கதைக்களத்துடன் தினந்தோறும் ரசிகர்களை சந்தித்து வருகிறது.
போலீஸ் அதிகாரியாக இருக்கும் நல்லசிவம், தன்னுடைய குடும்பத்தினரிடமும் தன்னுடைய அதிகாரத் தோரணையை காட்டுகிறார். இதனால் ஏற்படும் பிரச்சினைகளை இந்தத் தொடர் சிறப்பாக எடுத்துக்காட்டுகிறது.
கந்துவட்டிக் காரர்களின் உண்மை முகத்தை அறியும் இனியா: நடிகை ஆல்யா மானசா தற்போது சன் டிவியின் இனியா தொடரில் லீட் கேரக்டரில் நடித்து வருகிறார். இந்தத் தொடரில் நீண்ட இடைவெளிக்கு பிறகு விக்ரம் என்ற கேரக்டரில் போலீஸ் அதிகாரியாக களமிறங்கியுள்ளார் ரிஷி. தன்னுடைய அக்காவிற்காக விக்ரமை திருமணம் செய்துக் கொள்கிறார் இனியா. அவர்களுக்குள் இனிமையான வாழ்க்கை துவங்க சிறிது கால அவகாசம் கேட்கிறார் விக்ரம். அவரிடம் அதிகமான மதிப்பெண்களை பெற்றால் மட்டுமே அவர்கள் இணைய முடியும் என்பதும் அவர்களுக்குள் ஏற்படும் விதிமுறை.
இனியா இனிமையானவள் என்பதை சிறிது நாட்களிலேயே கண்டுபிடித்து அவரிடம் காதல் கொள்கிறார் விக்ரம். ஆனாலும் இதை வெளிப்படுத்தாமல், தொடர்ந்து போக்கு காட்டி வருகிறார். இந்நிலையில், குடும்பத்தில் தன்னுடைய மாமனார் நல்லசிவம் மற்றும் அவரது தங்கைகளால் ஏற்படும் குழப்பங்களை தட்டிக் கேட்கிறார் இனியா. அம்மியில் மசாலா அரைக்க வேண்டும். விறகடுப்பில் சமைக்க வேண்டும என்ற ஆதி காலத்து பார்முலாக்களை தன்னுடைய மனைவி மீது திணிக்கிறார் நல்லசிவம்.
இந்த விஷயங்களை தட்டி கேட்கும் இனியா, தொடர்ந்து மிக்சி போன்ற உபகரணங்களை உபயோகிப்பதற்கு தன்னுடைய மாமியாருக்கும் வழிவகையை ஏற்படுத்துகிறார். இதற்காக ஒருநாள் சமைக்கும் டாஸ்க் ந்ல்ல சிவத்திற்கு கொடுக்கப்பட, அதில் அவர் தோற்பதால், வீட்டில் மிக்ஸி, கிரைண்டர் போன்ற உபகரங்களை பயன்படுத்த வழிவகை ஏற்படுகிறது. இத்தகைய காரணங்களால் இனியா மீது கடுமையான கோபத்தில் நல்லசிவம் உள்ளார்.
இந்நிலையில் இனியாவின் அப்பா திருவாசகத்திற்கு மூளையில் கட்டி ஏற்பட, அவரை காப்பாற்ற போராடுகிறார் விக்ரம். ஆனால் தன்னுடைய மகள்களுக்கு இந்த விஷயம் தெரிய வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறார் திருவாசகம். இந்த விஷயத்தை இனியாவிற்கு தெரியாமல் காப்பாற்றினாலும் ஆபரேஷனுக்குத் தேவையான 30 லட்சம் ரூபாய்க்காக போராடுகிறார் விக்ரம். தன்னுடைய தம்பியுடன் இணைந்து தான் போட்ட FD பணம் 8 லட்சத்தையும் அவர்கள் ஹனிமூன் போக வைத்திருந்த பணத்தையும் சேர்த்து 10 லட்சம் ரூபாயை மருத்துவமனையில் கட்டி ஆபரேஷனுக்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்கிறார்.
ஒருகட்டத்தில் இந்த விஷயம் இனியாவிற்கும் தெரிய வருகிறது. தன்னுடைய அப்பாவிற்காக விக்ரம் போராடுவதை பார்க்க முடியாமல் 5 வட்டிக்கு 20 லட்சத்தை பெறும் இனியா, அதை மருத்துவமனையில் கட்டிவிட்டு, டிரஸ்ட் மூலம் கிடைத்ததாக மருத்துவர் மூலம் விக்ரமை நம்ப வைக்கிறார். இதனால் விக்ரம் மகிழ்ச்சி அடைகிறார். ஆபரேஷனுக்கு தேதி குறிக்கப்படுகிறது. இந்நிலையில் தங்களது தாலி பிரித்து கோர்க்கும் விழாவில் பங்கேற்க தன்னுடைய அப்பாவின் ஆபரேஷனை அடுத்த நாளைக்கு தள்ளி வைக்க இனியா மருத்துவரிடம் கோரிக்கை வைக்கிறார்.
இதனிடையே, இனியாவின் பைக், ரிப்பேராக, பக்கத்தில் ஒரு பெண் மெக்கானிக்கிடம் ரிப்பேரை சரிப்பார்க்கிறார். இந்நிலையில், அங்கு வரும் கந்து வட்டிக்காரர்கள், அந்த மெக்கானிக்கிடம் வட்டியை கோபத்துடன் கேட்கின்றனர். அவர், அழுதுக் கொண்டே, தன்னுடைய அம்மா தவறிவிட்டதால், தன்னால் பணத்தை செலுத்த முடியவில்லை என்று கதறுகிறார். ஆனாலும் இரக்கப்படாத அவர்கள், அந்த மெக்கானிக்கின் குழந்தையை வலுக்கட்டாயமாக அவரிடமிருந்து பறித்து செல்கின்றனர்.
அந்த நபரிடம்தான் இனியா தன்னுடைய அப்பா ஆபரேஷனுக்காக 20 லட்சம் ரூபாயை வட்டிக்கு பெறுகிறார். தான் சரியாக வட்டியை செலுத்தி விடுவேன் என்று கூறித்தான் அவர் அந்த பணத்தை வாங்குகிறார். ஆனாலும் பெண் மெக்கானிக்கிடம் கொடூரமாக நடந்துக் கொள்ளும் அவர்களின் செயல்பாடு அவரை அச்சத்திற்கு உள்ளாக்குகிறது. இதனால் தன்னுடைய தோழியுடன் அரண்டு போய் நிற்கிறார். அந்த தோழி, இனியா வாங்கிய கடனுக்கு சாட்சிக் கையெழுத்து போட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.