ஆனந்த யாழை…. மீட்டிய நா.முத்துக்குமாரின் பிறந்த தினம் இன்று : உங்களுக்கு பிடித்த பாடல் என்ன…?

முத்தான பாடல் வரிகளால் தமிழ் சினிமா ரசிகர்களை கட்டிப்போட்டவர் மறைந்த பாடலாசிரியர் நா.முத்துக்குமார். ‛‛ஆனந்த யாழை…'' மீட்டி சென்ற அவர் தனது 41வது வயதில் உடல்நலக்குறைவால் காலமானார். அவர் மறைந்து 7 ஆண்டுகள் ஆகிவிட்டது. இருப்பினும் அவரது பாடல்களால் மக்கள் மனதில் வாழ்ந்து வரும் அவருக்கு இன்று 48வது பிறந்தநாள். அவரை பற்றிய சிறு நினைவலைகளை பார்ப்போம்….

காஞ்சிபுரம் மாவட்டம் கன்னியாபுரம் கிராமத்தில் 1975, ஜூலை 12ம் தேதி பிறந்தவர் நா.முத்துக்குமார். தந்தையின் ஆர்வத்தால் முத்துக்குமாருக்கு கவிதை, பாடல்கள் எழுதும் எண்ணம் ஏற்பட்டது. இளநிலை இயற்பியல் பட்டம் முடித்த முத்துக்குமார், சென்னையில் எம்எஸ்சி மற்றும் டாக்டர் பட்டம் பெற்றுள்ளார்.

இயக்குனர் பாலு மகேந்திராவிடம் 4 ஆண்டுகள் பணியாற்றி வந்த இவர் வீரநடை படத்தின் மூலம் பாடலாசிரியராக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். 1,500 க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியுள்ளார். காதல், சோகம், பிரிவு, கொண்டாட்டம், மகிழ்ச்சி என எல்லா தளங்களிலும் பாடல்களை தந்தவர். அதிலும் யுவன் ஷங்கர் ராஜா – நா.முத்துக்குமார் கூட்டணியில் வெளிவந்த பாடல்கள் அனைத்தும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது.

கணவன் – மனைவி அன்பை சொல்லும்…. ‛‛கொஞ்சிப் பேசிட வேணாம், உன் கண்ணே பேசுதடி…'', மகளின் பாசத்தை கூறும் ‛‛ஆனந்த யாழை மீட்டுகிறாய்….', தந்தையின் பாசத்தை சொல்லும் ‛‛தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும்…, ஆரிரோ ஆராரிரோ இது தந்தையின் தாலாட்டு'', ‛‛வளையாமல் நதிகள் இல்லை, வலிக்காமல் வாழ்க்கையில்லை…'' என நம்பிக்கை தருவதிலாகட்டும், காதல் வலிகளை கூறும்… ‛‛போகாதே போகாதே…., ஏதோ ஒன்று என்னை தாக்க…, கண் பேசும் வார்த்தைகள்…, காதல் வளர்த்தேன்…, உயிரே உயிரே பிரியாதே…'', குழந்தை பருவத்தை கொண்டாடிய ‛‛வெயிலோடு விளையாடி…'' இப்படி இவரின் பாடல்களை பற்றி சொல்லிக் கொண்டே போகலாம்.

10 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பாடல்களை தந்த முத்துக்குமார் 2 தேசிய விருதுகளை வென்றுள்ளார். மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு 2016, ஆகஸ்ட் 14ல் மறைந்தார். இவருக்கு ஜீவலட்சுமி என்ற மனைவியும், ஒரு மகனும், மகளும் உள்ளனர்.

முத்துக்குமார் இருந்து இருந்தால் இன்னும் முத்தாய்ப்பான பாடல்களை வழங்கி இருப்பார். ஆனால் காலம் அவரை சீக்கிரமே கொண்டு சென்றுவிட்டது. ஆனால் அவர் தந்த பாடல்கள் மூலம் மக்கள் மனதில் என்றும் நீக்கமற நிறைந்து இருப்பார்..

நா.முத்துக்குமாரின் பாடல்களில் உங்களுக்கு பிடித்த பாடலை கீழே கமென்ட்டில் பகிர்ந்து கொள்ளலாம்….

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.