கொல்கத்தா: மேற்குவங்கத்தில் கடந்த 8-ம்தேதி உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட்டது. இந்த தேர்தலுக்கான பிரச்சாரம், வாக்குப்பதி வின்போது மிகப்பெரிய அளவில் வன்முறை சம்பவங்கள் அரங்கேறின. இதில் 45 பேர் உயிரிழந்தனர்.
மாநிலம் முழுவதும் 928 ஜில்லா பரிஷத் (மாவட்ட அளவில்) இடங்கள், 9730 பஞ்சாயத்து சமிதி (வட்ட அளவில்) இடங்கள், 63,229 கிராம பஞ்சாயத்து இடங்களுக்கு தேர்தல் நடைபெற்ற நிலையில் நேற்று வாக்குகள் எண்ணப்பட்டன.
மொத்தமுள்ள 63,229 கிராம பஞ்சாயத்து இடங்களில் நேற்றிரவு நிலவரப்படி ஆளும் திரிணமூல் காங்கிரஸ் 26,786-ஐ கைப்பற்றியுள்ளது. பாஜக 6,901, மார்க்சிஸ்ட் 1,923, காங்கிரஸுக்கு 1,073 இடங்கள் கிடைத்துள்ளன.
மொத்தமுள்ள 9730 பஞ்சாயத்து சமிதி இடங்களில் ஆளும் திரிணமூல் 900, பாஜக 79 இடங்களைப் பெற்றுள்ளன. ஜில்லா பரிஷத்தின் 928 இடங்களில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் 82 இடங்களைப் பிடித்துள்ளது.
அடுத்த 2 நாட்களுக்கு தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை நடைபெறும். அதன்பிறகே முழுமையான விவரங்கள் தெரியவரும் என்று மாநில தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.