அரசியல் காழ்ப்புணர்ச்சியால் ஜெருசலேம் புனிதப் பயண நிதியுதவி நிறுத்திவைப்பு: இபிஎஸ் கண்டனம்

சென்னை: “சிறுபான்மையின மக்களுக்காக ஜெயலலிதாவே, துவக்கி வைத்த ஜெருசலேம் புனிதப் பயணத்துக்கான நிதியுதவியையும் காழ்ப்புணர்ச்சி காரணமாக நிறுத்தியுள்ளது மிகவும் கண்டிக்கத்தக்கது” என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஏய்ச்சி பிழைக்கும் தொழிலே சரிதானா? எண்ணிப்பாருங்க” என்ற எம்ஜிஆரின் பாடலுக்கேற்ப, மக்கள் விரோத ஆட்சியை நடத்தி வரும் இந்த திமுக அரசு, அவர்களை நம்பி வாக்களித்த அப்பாவி மக்களுக்கு மட்டுமல்ல, சிறுபான்மை மக்களுக்கும் பட்டை நாமம் போட்டுள்ளது.

ஆட்சிக்கு வந்தவுடன், நீண்ட நாள் சிறையில் இருக்கும் இஸ்லாமிய கைதிகளை விடுதலை செய்வோம் என்று சட்டமன்றத் தேர்தலின்போது மேடைகளில் முழங்கினார்கள் பொம்மை முதல்வரும், இதர திமுகவினரும். ஆட்சிக்கு வந்து 26 மாதங்கள் நிறைவடைந்துள்ள நிலையிலும், இதுவரை இதற்கு ஒரு தீர்வும் காணப்படவில்லை.

கிறிஸ்தவப் பெருமக்கள் ஜெருசலேம் புனித யாத்திரை மேற்கொள்ள நிதியுதவி வழங்கும் திட்டத்தை மறைந்த முதல்வர் ஜெயலலிதா கொண்டுவந்தார். அதன்படி ஆண்டுதோறும் ஜெருசலேம் புனிதப் பயணம் மேற்கொள்ளும் பயணிகளின் எண்ணிக்கை 500-ஆக இருந்ததை, 2019-ஆம் ஆண்டு, எனது தலைமையிலான அதிமுக அரசு 600-ஆக உயர்த்தியது. இதில், கன்னியாஸ்திரிகள், அருட்சகோதரிகளுக்கு 50 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. 2019-ஆம் ஆண்டுவரை இத்திட்டத்தின் கீழ் 4,128 கிறிஸ்தவர்கள், 8.25 கோடி ரூபாய் செலவில் இப்புனிதப் பயணம் மேற்கொண்டுள்ளனர். 2020-ஆம் ஆண்டு கரோனா நோய் பெருந்தொற்று காலத்தில் புனிதப் பயணம் மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது.

வாய்ப் பந்தல் போட்டே மக்களை ஏய்க்கும் இந்த திமுக அரசு, ஆட்சிப் பொறுப்பேற்று 26 மாதங்கள் முடிவடைந்துவிட்ட நிலையிலும், ஜெருசலேம் புனிதப் பயணம் மேற்கொள்ளும் கிறிஸ்தவர்களுக்கு இதுவரை நிதியுதவி வழங்கப்படவே இல்லை.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவும், அதிமுக அரசும் கொண்டுவந்த பல்வேறு மக்கள் நலத் திட்டங்களுக்கு மூடுவிழா கண்ட இந்த திமுக அரசு, சிறுபான்மையின மக்களுக்காக ஜெயலலிதாவே, துவக்கி வைத்த ஜெருசலேம் புனிதப் பயணத்துக்கான நிதியுதவியையும் காழ்ப்புணர்ச்சி காரணமாக நிறுத்தியுள்ளது மிகவும் கண்டிக்கத்தக்கது. எனவே, திமுக அரசு விழிப்புணர்வு பெற்று, கிறிஸ்தவப் பெருமக்கள் ஜெருசலேம் யாத்திரை செல்ல உடனடியாகநடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

தங்களை கேள்வி கேட்க யார் இருக்கிறார்கள் என்ற நினைப்பில் மக்கள் விரோத ஆட்சியை நடத்தும் இந்த பொம்மை முதல்வருக்கு, அவரால் ஏமாற்றப்பட்ட சிறுபான்மை மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என்று எச்சரிக்கிறேன்” என்று அவர் கூறியுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.