கரூர் மவட்டம், கடவூர் அருகே இருக்கிறது வீரணம்பட்டி. இந்த கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 168 மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்த பள்ளியில், மாணவர்களுக்காக பள்ளி வளாகத்திற்குள் மூன்று சின்டெக்ஸ் டேங்க் அமைக்கப்பட்டு, அவற்றில் நீர் சேமிக்கப்பட்டு, அதன்மூலமாக மாணவர்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், நேற்று பள்ளிக்கு வந்த மாணவர்கள், பள்ளி இடைவேளையில் தண்ணீர் குடிப்பதற்காக தண்ணீர் தொட்டி பகுதிக்கு சென்றுள்ளனர். அப்போது, அந்த தண்ணீர் தொட்டியில் இருந்து அதிகமாக கெமிக்கல் வாடை வந்துள்ளதை மாணவர்கள் உணர்ந்துள்ளனர். தண்ணீர் தொட்டியில் இருந்து கெட்ட நாற்றத்துடன் தண்ணீர் வந்ததை பார்த்த மாணவர்கள் அதிர்ச்சி அடைந்ததோடு, இதுகுறித்து உடனடியாக ஆசிரியர்களிடம் தகவல் கொடுத்தனர்.

இந்த தகவலை அறிந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் உள்ளிட்ட ஆசிரியர்கள் உடனடியாக அந்த தண்ணீர் தொட்டிகளில் இருந்து மாணவர்கள் தண்ணீர் குடிக்காமல் தடுத்தனர். அதோடு, இந்த தகவல் மேலதிகாரிகளுக்கு கொண்டுச்செல்லப்பட்டது. அதனைத்தொடர்ந்து, கடவூர் தாசில்தார், சுகாதாரத்துறை உள்ளிட்டோர் அந்த பள்ளிக்கு விரைந்த வந்தனர். புகாரின் பேரில் கடவூர் தாசில்தார் முனிராஜ் மற்றும் சுகாதாரத்துறையினர் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டனர். ஆனால், சிந்தாமணிபட்டி காவல்துறையினர் உடனடியாக அப்பகுதிக்கு வரவில்லை. இதனால், அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மாவட்ட குற்றப்பிரிவு காவல் ஆய்வாளருக்கு தகவல் கொடுத்துள்ளனர். அதன் பேரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
அதன் பிறகு தான் குளித்தலை டி.எஸ்.பி ஸ்ரீதர், சிந்தாமணிப்பட்டி காவல் நிலைய போலீஸார் உள்ளிட்ட காவல்துறையினர் காலதாமாக வந்து சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து சுகாதாரத் துறையினர் மூன்று தண்ணீர் தொட்டிகளில் இருந்து ஆய்வு செய்வதற்காக தண்ணீர் மாதிரிகளை எடுத்துச் சென்றனர்.
ஏற்கனவே இப்பகுதியில் உள்ள கோயிலில் பட்டியிலின இளைஞரை உள்ளே அனுமதிக்காமல் இரு பிரிவினரிடையே பிரச்னை ஏற்பட்டு கோவில் பூட்டி சீல் வைக்கப்பட்டது. பின்னர், கரூர் மாவட்ட நிர்வாகம் இரு பிரிவினர்களிடையே சமாதான பேச்சு வார்த்தை நடத்தியபிறகு, சுமுக உடன்பாடு ஏற்பட்டவுடன் கோயிலை திறந்தனர்.
இந்நிலையில், அந்த கிராமத்தில் உள்ள அரசுப் பள்ளியில் மர்ம நபர்கள் கெமிக்கலை கலந்திருப்பது, பொதுமக்களை அச்சமடைய வைத்திருக்கிறது. இதனால், அப்பகுதியில் அசம்பாவிதம் ஏற்படாத வண்ணம் அப்பகுதியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவர்தனம் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

அதோடு, அப்பகுதியில் காவல் துறையினர் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. குடி தண்ணீர் தொட்டியில் கெமிக்கல் கலக்கப்பட்ட சம்பவத்தில் பல்வேறு கோணங்களில் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதைத்தவிர, கோயிலில் இரு பிரிவினருக்கு இடையில் ஏற்பட்ட பிரச்னை குறித்தும், விசாரித்து வருகின்றனர். மேலும், பள்ளிப் பகுதிகளில் இளைஞர்கள் இரவு, பகல் நேரங்களில் மது அருந்துவதால், அந்த பள்ளி ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர் ஆகியோர் அந்த இளைஞர்களை கண்டித்துள்ளதாகவும் தெரிகிறது. அதன் பின்னணியில் கூட இந்த சம்பவம் நடைபெற்றிருக்கலாம் என்ற கோணத்திலும் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.