நேட்டோ மாநாட்டில் ஜெலன்ஸ்கி ஒதுக்கப்பட்டாரா..? – வைரலான புகைப்படம்

வில்னியஸ்: நேட்டோ மாநாட்டில் ஜெலன்ஸ்கி தனித்து ஒதுங்கி இருப்பது போன்ற புகைப்படம் வெளியாகி சமூக வலைதளப் பக்கங்களில் வைரலாகி வருகிறது.

ஐரோப்பிய நாடான லிதுவேனியாவில் உள்ள வில்னியஸ் நகரில் நேட்டோ அமைப்பு நாடுகளின் உச்சி மாநாடு நடந்தது. இதில், உக்ரைன் விவகாரம் முக்கியத்துவம் பெற்றிருந்தது. மாநாட்டின் இரண்டாவது நாளில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸிகி கலந்துகொண்டார். நிகழ்வில் ஒரு தருணத்தில் உலகத் தலைவர்கள் எல்லாம் பேசிக் கொண்டிருக்க, ஜெலன்ஸ்கி மட்டும் தனியாக நிற்பது போன்ற புகைப்படம் வெளியானது. இதனைத் தொடர்ந்து நேட்டோ மாநாட்டில் ஜெலன்ஸ்கி புறக்கணிக்கப்பட்டார் என்று சிலர் சமூக வலைதளங்களில் டிரெண்ட் செய்தனர். ஆனால், சந்தர்ப்பச் சூழலின் காரணமாகவே அந்தத் தருணத்தில் ஜெலன்ஸ்கி தனியாக நின்று கொண்டிருக்கிறார் என்று சிலரும் விளக்கமளித்தனர்.

இந்த நிலையில், நேட்டோ மாநாட்டில் பங்கேற்ற ஜெலன்ஸ்கி, “புதிய ஆயுதங்கள் வழங்க வேண்டும், நேட்டோவில் இணைவதற்கான அழைப்பு விடுக்கப்பட வேண்டும். உக்ரைனின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும்” என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தியுள்ளார்.

நேட்டோ உச்சி மாநாட்டில் கலந்துகொண்ட உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கிக்கு உக்ரைனுக்கு நீண்டகால பாதுகாப்பு வழங்குவதற்கான வாக்குறுதிகள் வழங்கப்பட்டன. ஆனால், எப்போது நேட்டோவில் உக்ரைன் இணையும் என்பது குறித்து நேட்டோ தெரிவிக்கவில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது. மாநாடு குறித்து கருத்து தெரிவித்துள்ள ரஷ்யா, பனிப்போர் காலத் திட்டங்களுக்கு ஐரோப்பிய நாடுகள் திரும்பியுள்ளன என்பதை இந்த மாநாடு நிரூபிக்கிறது என்று தெரிவித்துள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.