பிரதமர் மோடியின் பிரான்ஸ் பயணமும், ரஃபேல் எம் ஜெட் விமானமும்… பக்கா டீலிங் ரெடி!

பிரான்ஸ் நாட்டிற்கு இரண்டு நாட்கள் பயணமாக பிரதமர் மோடி புறப்பட்டு சென்றுள்ளார். இன்று காலை அவர் புறப்படுவதற்கு முன்பாக மிக முக்கிய ஒப்பந்தம் ஒன்றுக்கு பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளது. அதாவது, ரஃபேல் எம் (Rafale-M) என்ற கடற்படையில் செயல்படும் 26 போர் விமானங்களை வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

பிரான்ஸ் சுற்றுப்பயணம்

இது ரஃபேல் போர் விமானங்களின் ஒருவகை என்பது கவனிக்கத்தக்கது. இதில் பல்வேறு மேம்படுத்தப்பட்ட அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. மடிக்கக்கூடிய இறக்கைகள், அதிகப்படியான வலுவை தூக்கி செல்லும் பகுதி உள்ளிட்டவை முக்கியமானவை. இதுதவிர இந்தியாவில் ஸ்கார்பீன் நீர்மூழ்கி கப்பல் கட்டுமானங்களை அமைக்கும் ஒப்பந்தத்திற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

பாரிஸில் சிறப்பான வரவேற்பு

மேற்குறிப்பிட்ட இரண்டு ஒப்பந்தங்களும் பிரான்ஸ் சுற்றுப்பயணத்தில் கையெழுத்தாகும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்று (ஜூலை 13) மாலை பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் நகருக்கு பிரதமர் மோடி சென்றடைந்தார். விமான நிலையத்தில் பாஸ்டில் டே கொண்டாட்டத்தின் போது வழங்கப்படும் உயரிய ராணுவ மரியாதை அளிக்கப்பட்டது.

இந்தியா – பிரான்ஸ் நல்லுறவு

மோடியை பிரான்ஸ் பிரதமர் எலிசபெத் போர்னே வரவேற்றார். இதையடுத்து பாரிஸ் நகரில் இந்திய வம்சாவளியினர் சிறப்பான முறையில் வரவேற்றனர். நாளைய தினம் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானை பிரதமர் மோடி சந்தித்து பேசுகிறார். இதில் இந்திய – பிரான்ஸ் ஆகிய நாடுகளின் நல்லுறவை வலுப்படுத்தும் வகையில் பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரஷ்யா – உக்ரைன் போர்

இதுதவிர சர்வதேச அளவிலான விஷயங்களும் பேசப்படும் என்கின்றனர். தற்போதைய சூழலில் ரஷ்யா – உக்ரைன் போர் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. இதில் இந்தியா, பிரான்ஸ் நாடுகள் மாறுபட்ட நிலைப்பாட்டை கொண்டிருக்கின்றன. இவை இருநாடுகளின் நல்லுறவை எந்தவிதத்திலும் பாதிக்காது என்கின்றனர்.

இந்தியாவின் நிலைப்பாடு

உக்ரைன் நாட்டிற்கு உறுதுணையாக நிற்கும் பிரான்ஸ் அரசு, அந்நாட்டிற்கு தேவையான ராணுவ உபகரணங்களை வழங்கி வருகிறது. மேலும் போரை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுக்கு அழுத்தம் தந்து வருகின்றனர். இந்தியாவை பொறுத்தவரை எந்த ஒரு நாட்டிற்கும் ஆதரவு தராமல் நடுநிலையான நிலைப்பாட்டில் இருக்கிறது.

ரஷ்ய எண்ணெய் ஏற்றுமதி

குறிப்பாக ரஷ்யாவில் இருந்து எண்ணெய் விஷயத்தில் சிக்கல் வந்துவிடக் கூடாது என்பதில் கவனமாக காய் நகர்த்துகிறது என அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர். முன்னதாக பிரான்ஸ் நாட்டில் இருந்து 36 ரஃபேல் போர் விமானங்களை பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு ஒப்பந்தம் போட்டு வாங்கியது.

இது 23 ஆண்டுகளுக்கு பின்னர் மிகப்பெரிய அளவில் போடப்பட்ட ஒப்பந்தம் என்பது கவனிக்கத்தக்கது. கடைசியாக ரஷ்யாவிடம் இருந்து சுகோய் ஜெட் விமானங்களை பெரிய அளவில் இந்திய அரசு வாங்கியிருந்தது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.