செங்கல்பட்டு: செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் பெண்ணுக்கு பிரசவம் பார்த்த பயிற்சி மருத்துவர்களால் குழந்தையின் தோள்பட்டை எலும்பு முறிந்துவிட்டதாக கூறி மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
செங்கல்பட்டு மாவட்டம் கொடூர் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயஸ்ரீ. இவர் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்காக கடந்த திங்கள்கிழமை அனுமதிக்கப்பட்டார். அவருக்கு செவ்வாய்க்கிழமை அன்று பிரசவ வலி ஏற்பட்டது.
இதையடுத்து அவர் வலியால் துடித்துக் கொண்டிருந்த நிலையில் மருத்துவர்கள் யாரும் பணியில் இல்லை. இரு பயிற்சி மருத்துவர்கள்தான் பணியில் இருந்தனர். அவர்கள்தான் ஜெயஸ்ரீக்கு பிரசவம் பார்த்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் பிரசவ அறைக்கு அழைத்து செல்லப்பட்ட ஜெயஸ்ரீயின் வயிற்று பகுதியை இரு பயிற்சி மருத்துவர்களும் அழுத்தி அழுத்தி பிரசவம் பார்த்ததாக சொல்லப்படுகிறது. தன்னால் வலி தாங்க முடியவில்லை என ஜெயஸ்ரீ கதறியுள்ளார். மேலும் தனக்கு சுகபிரசவம் வேண்டாம். சிசேசிரியன் ஆபரேஷன் செய்து குழந்தையை எடுத்துவிடுங்கள் என கூறியுள்ளார்.
ஆனால் அவர்கள் பயிற்சி மருத்துவர்கள் என்பதால் அறுவை சிகிச்சையை எப்படி செய்வது என யோசித்ததாகவும் மேலும் தன்னை வைத்து சுகபிரசவத்திற்கு பயிற்சி எடுத்ததாகவும் ஜெயஸ்ரீ குற்றம்சாட்டியுள்ளார். இந்த நிலையில் தீவிர முயற்சிக்கு பிறகு குழந்தையை இரு பயிற்சி மருத்துவர்களும் வெளியே எடுத்துவிட்டனர்.
ஆனால் குழந்தையின் தோள்பட்டை உடைந்ததாகவும் இதுவரை குழந்தையை கண்ணில் காட்டாமல் வைத்துள்ளதாகவும் உறவினர்கள் தெரிவித்தனர். இந்த நிலையில் பெண்ணின் உறவினர்கள் மருத்துவர்களை கண்டித்து முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். குழந்தைக்கு என்ன ஆயிற்று, குழந்தையை காண்பிக்க வேண்டும் என கூறி வாக்குவாதம் செய்தனர்.
இதையடுத்து ஜெயஸ்ரீக்கு பிறந்தது பெண் குழந்தை, அந்த குழந்தைக்கு வயிற்றிலேயே கை தோள்பட்டை உடைந்துவிட்டதால் அதற்காக சிகிச்சை அளிக்கவே குழந்தையை தாயிடம் கொடுக்கவில்லை என பொறுப்பு மருத்துவர் பாஸ்கர் தெரிவித்துள்ளார். மேலும் அலட்சிய மருத்துவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உறவினர்கள் வாக்குவாதம் செய்தனர்.
இது தொடர்பாக பொறுப்பு மருத்துவர் பாஸ்கரிடம் செய்தியாளர்கள் கேட்ட போது அவர் விளக்கம் அளிக்க மறுத்துவிட்டார். அங்கிருந்து விர்ரென சென்றுவிட்டார். பிரசவம் பார்த்த போது குழந்தையின் தோள்பட்டை உடைந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் பரபரப்புக்குள்ளாகியுள்ளது.