கலைஞர் நூலகத் திறப்பு விழாவுக்கு ஷிவ் நாடார், ரோஷிணியை அழைத்தது ஏன்? – முதல்வர் ஸ்டாலின் விளக்கம்

மதுரை: கலைஞர் நூற்றாண்டு நூலகத் திறப்பு விழாவுக்கு ஷிவ் நாடாரையும், அவரது மகள் ரோஷிணையையும் அழைத்ததன் காரணத்தை தனது உரையில் முதல்வர் ஸ்டாலின் விளக்கினார்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சனிக்கிழமை மதுரை புதுநத்தம் சாலையில் அமைந்துள்ள பொதுப் பணித் துறை வளாகத்தில் தரைத்தளம் மற்றும் 6 தளங்களுடன் கட்டப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை திறந்து வைத்து உரையாற்றும்போது, “ஷிவ் நாடாரை இந்த நிகழ்ச்சிக்கு அழைத்துக் கொண்டு வந்திருக்கிறோம். பெரிதாக, பொது நிகழ்ச்சிகள் எதிலும் அவர் கலந்துகொள்ள மாட்டார். ஆனால், இவரையும், இவரது மகள் ரோஷிணியையும் மாணவ, மாணவியர்களான நீங்கள் பார்க்க வேண்டும் என்பதற்காகதான் நான் அழைத்துக் கொண்டு வந்திருக்கின்றேன்.

மிகப்பெரிய தொழில் அதிபர் என்று சொல்வது மட்டுமல்ல, அவருடைய பெருமை; இந்திய தொழிலதிபர்களில் அதிகமான தொகைளை நன்கொடையாக வழங்கக் கூடியவர் என்று பாராட்டப்படக்கூடியவர் அவர்.

“உனக்கு பணம் வரும்போது அதிகப்படியானவர்களுக்கு உதவி செய்ய” வேண்டும் என்று இவருடைய தாயார் சொன்னார்களாம். அதற்காகவே அறக்கட்டளை தொடங்கியவர் இவர். 50 நாடுகளில் கிட்டத்தட்ட 2 இலட்சம் பேர் வேலை பார்க்கின்ற அளவுக்கு ஹெச்.சி.எல். நிறுவனத்தினுடைய நிறுவனரான இவரும் உங்களைபோல அரசுப் பள்ளியில் படித்தவர்தான். பல கிராமங்களைத் தத்தெடுத்து உதவிகளை செய்து கொண்டிருக்கிறார்.

ஒரு கிராமத்தில் பிறந்து, மாநகராட்சி பள்ளியில் படித்து, மிகச்சிறிய நிறுவனத்தை சொந்த முயற்சியால் தொடங்கி, இன்றைக்கு இவ்வளவு பெரிய மனிதராக அவர் உயர்ந்திருக்கிறார். இப்படிப்பட்டவரை உங்களுக்கு ஒரு நம்பிக்கை நட்சத்திரமாக அறிமுகப்படுத்தத்தான் இன்றைக்கு சிறப்பு அழைப்பாளராக அவர் அழைக்கப்பட்டிருக்கிறார்.

அவருடைய மகள் ரோஷிணி, அந்த நிறுவனத்தினுடைய இயக்குநராக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். பெண்கள் அனைத்துப் பொறுப்புகளிலும் இறங்கிப் பணியாற்ற வேண்டும் என்ற தந்தை பெரியாரின் கனவு நிறைவேறும் காட்சியினுடைய அடையாளமாகவும்,

இவர்கள் இருவரும் கலைஞர் நூற்றாண்டு நூலகத் திறப்பு விழாவிற்கு வந்திருக்கிறார்கள். அவர்களுக்கு நான் முதலில் உங்கள் அனைவரின் சார்பில் என்னுடைய நன்றி! நன்றி! நன்றி!” என்றார் முதல்வர் ஸ்டாலின். | வாசிக்க > “அறிவுத் தீ பரவப் போகிறது!” – கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை திறந்துவைத்த முதல்வர் ஸ்டாலின் பேச்சு

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.