மடோன் அஸ்வின் இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடிப்பில் நேற்று (ஜூலை 14) திரையரங்குகளில் வெளியான `மாவீரன்’ திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுவருகிறது. ஃபேன்டஸியான கதையில் மக்களுக்கு எனப் புதிதாகக் கட்டப்படும் நகர்புற மேம்பாட்டு வாரிய வீடுகளின் தரம் குறித்த பிரச்னை பேசப்பட்டிருக்கிறது. தரமற்ற பொருள்கள் மூலம் கட்டப்படும் வீடுகள் கதையின் மையக்கருவாக உள்ளது.
இந்நிலையில் படம் குறித்த செய்தியாளர்கள் சந்திப்பின்போது பேசிய மடோன் அஸ்வின், “படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அதற்காக ரசிகர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். இந்தப் படத்தை சில உண்மையான நிகழ்வுகளை மையப்படுத்தித்தான் எடுத்துள்ளோம். ஆனால், யாரையும் காயப்படுத்தி விடக்கூடாது என்பதில் கவனமாக இருந்தோம். சென்னை கே.பி பார்க் ஹவுசிங் போர்டு பிரச்னையைதான் இதற்கான ரெஃபரன்ஸாக வைத்துக்கொண்டேன். ஆனால், யாரையும் குறிப்பிட்டுப் படமெடுக்கவில்லை” என்று கூறியிருக்கிறார்.

அது என்ன கே.பி பார்க் ஹவுசிங் போர்டு பிரச்னை?
முதன் முறையாக 1970-ல் தான் இந்தியாவில் குடிசை மாற்று வாரியம் கொண்டுவரப்பட்டது. இதன் மூலம் ஏழை எளிய மக்களுக்கு மிகக்குறைந்த விலையில் வீடு கட்டிக் கொடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2021-ம் ஆண்டில், புளியந்தோப்பிலுள்ள கே.பி பார்க் வளாகத்தில் 10 மாடிகளில் சுமார் 1,920 வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டு மக்கள் குடியமர்த்தப்பட்டனர். அப்படிக் குடியமர்த்தப்பட்ட ஒரு கட்டடம் தரமற்றிருப்பதாகவும், சுவர்ப் பகுதிகள் தொட்டாலே பெயர்ந்துவருவதாகவும் அங்கு வசிக்கும் மக்கள் குற்றம்சாட்டினர்.
இந்தப் பிரச்னை குறித்த செய்தி வெளியானதும் விஷயம் பெரிதானது. அப்போது குடியிருப்புப் பகுதியில் அமைச்சர்களும், சட்டமன்ற உறுப்பினர்களும், துறைசார் அதிகாரிகளும் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர். அந்தக் குடியிருப்பில் உள்ள மக்கள் புகார் அளித்ததை அடுத்து, ஐ.ஐ.டி நிறுவனம் அங்கு ஆய்வு மேற்கொண்டதில் தரமற்ற கட்டுமான பொருள்களைக் கொண்டுதான் அந்த அடுக்குமாடிக் குடியிருப்பு கட்டப்பட்டது என்று தெரியவந்தது.

இது தொடர்பாக சென்னை ஐ.ஐ.டி நிறுவனம் சமர்ப்பித்த அறிக்கையில், அடுக்குமாடிக் குடியிருப்பைக் கட்டிய பி.எஸ்.டி கட்டுமான நிறுவனத்தை தடைபட்டியலில் சேர்க்குமாறும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறும் கூறப்பட்டிருந்தது. அதையடுத்து, நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சம்பந்தப்பட்ட நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தது. அந்த நோட்டீஸை எதிர்த்து பி.எஸ்.டி நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் இடைக்காலத் தடை உத்தரவை நீட்டித்திருக்கிறது.
தற்போது `மாவீரன்’ படம் இப்படியொரு பிரச்னையை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருப்பது பெரும் பேசுபொருளாகி உள்ளது.