புதுடெல்லி: பிரான்ஸ் சென்ற இந்திய பிரதமர் மோடி, அந்நாட்டு தேசிய தினத்தில் கலந்து கொண்டார். இருதரப்பிலும் பல துறைகளில் கூட்டாக செயல்பட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
அதன்பின் மும்பையில் மசகான்டாக்ஸ் நிறுவனத்தில் 3 ஸ்கார்ப்பீன் டீசல் -எலக்ட்ரிக் நீர்மூழ்கி கப்பல்களை தயாரிக்க இரு நாடுகள் இடைய புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்திய கடற்படைக்கு ஏற்கனவே 6 ஸ்கார்ப்பீன் ரக நீர்மூழ்கி கப்பல்கள் பிரான்ஸுடன் இணைந்து ரூ.23,000 கோடி செலவில் மும்பை மசகான் டாக்ஸ் நிறுவனத்தில் கூட்டாக தயாரிக்கப்பட்டுள்ளன.
அதன் தொடர்ச்சியாக மேலும்3 நீர்மூழ்கி கப்பல்கள் தயாரிக்க தற்போது ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. மேலும் நவீன போர்விமான இன்ஜின்களை கூட்டாக தயாரிக்கவும் இந்தியா-பிரான்ஸ்இடையே ஒப்பந்தம் கையெழுத் தாகியுள்ளாது.
கடற்படை பயன்பாட்டுக்காக 26 ரபேல் போர் விமானங்களை வாங்க திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் இதுகுறித்து, பிரதமர் மோடி- அதிபர் இமானுவேல் மேக்ரான் வெளியிட்ட கூட்டறிக்கையில் எந்த தகவலும் இடம்பெறவில்லை. ‘தி ஹரிசோன் 2047’ என்ற ஆவணத்தில் இந்தியாவும், பிரான்ஸும் ஏரோநாட்டிகல் தொழில்நுட்பங்களில் கூட்டாக செயல்பட்டுபோர் விமான இன்ஜின்களை தயாரிப்போம் என தெரிவிக்கப்பட் டுள்ளது. இதற்கான திட்டத்தை ராணுவ ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனமும் (டிஆர்டிஓ) பிரான்ஸின் சஃப்ரான் நிறுவனமும் தயாரிக்கவுள்ளன.
98 கிலோ நியூட்டர் சக்தியுடன் ஜிஇ-414 விமான இன்ஜின் தயாரிப்பில் 80% தொழில்நுட்ப பரிமாற்றத்துக்கு அமெரிக்கா ஒப்புக் கொண்டுள்ளது. இந்த ரக இன்ஜின்கள் இந்தியாவில் தயாரிக்கப்படும் தேஜஸ் மார்க்-2ரக விமானத்தில் பயன்படுத்தப்படவுள்ளன. ஆனால் இதைவிட சக்தி வாய்ந்த போர் இன்ஜின் தயாரிப்பில் 100% தொழில்நுட்ப பரிமாற்றத்துக்கு பிரான்ஸ் முன்வந்துள்ளது. இதன் மூலம் 110 கிலோநியூட்டன் திறனுள்ள போர் விமான இன்ஜின் பிரான்ஸின் சஃப்ரான் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கப்படும். இவை இந்தியா தயாரிக்கும் 5-ம் தலைமுறை போர் விமானத்தில் பயன்படுத்தப்படும். மேலும் பிரான்ஸின் சஃப்ரான் நிறுவனத்துடன் இணைந்து அதிக எடையை தூக்கி செல்லும் ஹெலிகாப்டர் இன்ஜின்கள் தயாரிக்கப்படும்.