‘ஈவென்ட் ஜங்ஷன்’ என்ற பெயரில், ‘ஈவென்ட் மேனேஜ்மென்ட்’ நிறுவனம் நடத்தி வரும், விருது நகர் மாவட்டம் சிவகாசியை சேர்ந்த செல்வாம்பிகா:
படிப்பை முடித்ததும், ஐ.டி., நிறுவனத்தில் வேலை பார்த்தேன். அப்புறமாக, மார்க்கெட்டிங் துறையில் வேலைக்கு சேர்ந்தேன்.
வர்த்தக நுணுக்கங்கள் புரிய துவங்கியதும், தனியாக தொழில் துவங்க வேண்டும் என்ற ஆசை உருவானது. லட்சக்கணக்கில் முதலீடு செய்து, தொழில் துவங்கும் சூழலும், வசதியும் என்னிடம் இல்லை.
அதனால், ஐடியாவும், உழைப்புமே முதலீடாக இருக்க வேண்டும் என்று நினைத்தேன். பல பிசினஸ் ஐடியாக்களை யோசித்து, கடைசியாக, ஈவென்ட் மேனேஜ்மென்ட் பிசினஸ் துவக்க முடிவெடுத்தேன்.
இந்தத் தொழிலை ஆரம்பிக்க முடிவு செய்திருந்த நேரத்தில், என் தோழியின் குழந்தைக்கு பிறந்த நாள் வந்தது. அந்த பார்ட்டியை குறைந்த செலவில் வெற்றிகரமாக நடத்திக் கொடுத்தேன்.
அந்த புகைப்படங்களை, சமூக வலைதளங்களில் பகிர்ந்தேன்; அதன் வாயிலாக, அடுத்தடுத்து நிகழ்ச்சிகள் வரத் துவங்கின.
சமூக வலைதளங்கள் பட்டி தொட்டி எல்லாம் பரவ துவங்கிய பின், ‘நம் வீட்டில் நடக்கும் நிகழ்ச்சி கிராண்டா இருக்கணும்’ என்று, எல்லாருமே யோசிக்க துவங்கினர்.
அந்த மாற்றம் தான், என் பிசினசுக்கு அடித்தளம். நாங்கள் செய்யும், ஒவ்வொரு ஈவென்ட்டும் தனித்துவமாக இருக்க வேண்டும், வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும் அனுபவம் புதுமையாக இருக்க வேண்டும் என, பார்த்துப் பார்த்து திட்டமிட துவங்கினேன்.
‘பொன்னியின் செல்வன் தீம், டிஸ்னி தீம், பட்டாம்பூச்சி தீம், சூப்பர் ஸ்டார் தீம், அரண்மனை தீம்’ என, பல தீம்களை உருவாக்கி, அதற்கேற்ப பேக் ரவுண்டிலிருந்து, கேக், ரிட்டன் கிப்ட்ஸ் வரைக்கும் திட்டமிட்டு, நிகழ்ச்சிகளை நடத்தி முடித்திருக்கிறேன்.
சமூக வலைதளங்கள் வாயிலாகவே, பிரபலங்களும் என்னை தொடர்பு கொள்ள ஆரம்பித்தனர்.
நடிகை சினேகா, ஆல்யா மானசா, பாபி சிம்ஹா உள்ளிட்ட பல பிரபலங்களின் ஈவென்டுகளை ஒருங்கிணைக்க துவங்கினேன். மேலும், பல தனியார் நிறுவனங்களின் நிகழ்ச்சிகளையும், ஒருங்கிணைத்து நடத்தி வருகிறேன்.
பெண்களுக்கு தொழில் சரிவராது என்று கூறியவர்களின் வார்த்தைகளை மீறி, நிறைய தடைகளுக்கு பின், தொழிலதிபர் என்ற அடையாளத்தை வாங்கியிருக்கிறேன்.
திட்டமிடல், பண நிர்வாகம், கிரியேட்டிவிட்டி என, எல்லாமே பெண்களுக்கு அதிகம்.
‘டிரெண்ட்’ என்ன என்பதை மட்டும் கவனித்து, அதற்கேற்றபடி, ‘அப்டேட்’ செய்து கொள்ளும் பெண்கள், ஈவென்ட் மேனேஜ்மென்ட்டில் எளிதாக சாதிக்கலாம்!
தொடர்புக்கு:
91766 56521
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்