India opposes Khalistan supporters! |  காலிஸ்தான் ஆதரவாளர்களுக்கு இந்தியா எதிர்ப்பு!

ஒட்டாவா: இந்தியாவில் உள்ள பஞ்சாபை பிரித்து, காலிஸ்தான் தனி நாடு கோரும் விவகாரத்தில், கனடாவில் இன்று, இரண்டாவது முறையாக பொது ஓட்டெடுப்பு நடத்த, காலிஸ்தான் ஆதரவாளர்கள் முடிவு செய்துள்ளனர். இதற்கு, நம் அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் நியூயார்க்கை தலைமையிடமாக வைத்து, எஸ்.எப்.ஜே., எனப்படும் சீக்கியர்களுக்கான நீதி என்ற அமைப்பு செயல்பட்டு வருகிறது. இது, சீக்கியர்களுக்காக காலிஸ்தான் எனும் தனி நாடு கோரி வருகிறது.

கடந்த 2007ம் ஆண்டு குர்பத்வந்த் சிங் பன்னும் என்பவரால் இந்த அமைப்பு துவங்கப்பட்டது.

ஓட்டெடுப்பு

இந்த அமைப்பால் பஞ்சாபின் பல்வேறு பகுதிகளில் வன்முறை நிகழ்ந்ததால், கடந்த 2019ம் ஆண்டு நம் நாட்டு அரசால் தடை செய்யப்பட்டது.

இந்த அமைப்பு, இந்தியாவில் இருந்து பஞ்சாபை பிரிப்பதற்கான ஓட்டெடுப்பை, உலகின் பல பகுதிகளில் வாழும் சீக்கியர்களிடையே நடத்தி வருகிறது.

இந்த ஓட்டெடுப்பு, அமெரிக்கா, பிரிட்டன், கனடா, ஆஸ்திரேலியா உட்பட பல நாடுகளில் நடத்தப்பட்டு வருகிறது.

வட அமெரிக்க நாடான, கனடாவின் பிராம்ப்டன் நகரில், கடந்த 2022ம் ஆண்டு சீக்கியர்களுக்கான நீதி அமைப்பு ஓட்டெடுப்பு நடத்தியது.

இந்நிலையில் இன்று, காலிஸ்தான் தனி நாடு விவகாரத்தில், இரண்டாவது முறையாக, கனடாவில் ஓட்டெடுப்பு நடத்த இந்த அமைப்பு முடிவு செய்துள்ளது.

இதற்கான முழு ஏற்பாடுகளை இந்த அமைப்பு செய்து வருகிறது.

கனடாவின், கிரேட்டர் டொரான்டோ பகுதியில், மிசிசாகா நகரின் மால்டன் பகுதியில் உள்ள குருத்வாராவில், இந்த ஓட்டெடுப்பு நடக்க உள்ளது.

இதற்காக, அந்தப் பகுதி முழுதும் காலிஸ்தான் ஆதரவாளர்கள் போஸ்டர் அடித்து ஒட்டி உள்ளனர். இதில், 1 லட்சத்திற்கும் மேற்பட்டோரை பங்கேற்க வைக்க சீக்கியர்களுக்கான நீதி அமைப்பு திட்டமிட்டுள்ளது.

இந்த விவகாரத்தை, கனடா அரசின் உயர் மட்ட அதிகாரிகள் கவனத்திற்கு, நம் நாட்டு துாதரக அதிகாரிகள் எடுத்துச் சென்றுள்ளனர்.

இது குறித்து, கனடாவுக்கான இந்திய துாதர் சஞ்சய் குமார் வர்மா கூறியதாவது:

இந்தியா – கனடா இடையேயான உறவில் பிளவை ஏற்படுத்த, சீக்கியர்களுக்கான நீதி அமைப்பு மேற்கொள்ளும் முயற்சி ஒருபோதும் வெற்றி பெறாது. இந்த அமைப்பு நடத்தும் ஓட்டெடுப்பால் எந்த பயனும் இல்லை.

இந்தியாவுக்கு எதிராக, கடந்த 8ம் தேதி நடந்த காலிஸ்தான் ஆதரவாளர்கள் போராட்டத்தை முறியடித்தது போல, இந்த ஓட்டெடுப்பு முயற்சியையும், கனடாவில் வசிக்கும் இந்திய வம்சாவளியினர் முறியடிப்பர்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கிடையே, காலிஸ்தான் ஆதரவாளர்களின் ஓட்டெடுப்பு குறித்து, இந்திய வம்சாவளியினரும் அந்நாட்டு அரசு அதிகாரிகளிடம் புகார் அளித்துஉள்ளனர்.

மேலும், இது தொடர்பாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு கடிதம் எழுதும் போராட்டத்தையும் துவங்கி உள்ளனர்.

அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது:

காலிஸ்தான் ஆதரவாளர்களின் போராட்டம், ஓட்டெடுப்பு போன்ற நடவடிக்கைகள், கனடாவில் உள்ள இந்திய வம்சாவளியினரின் ஒற்றுமையை சீர்குலைப்பதாக உள்ளன.

இது, கனடாவுக்கு நல்லதல்ல. அவர்களின் இந்த நடவடிக்கைகளை அரசு ஒடுக்க வேண்டும்.

காலிஸ்தான் ஆதரவாளர்கள் ஒட்டியுள்ள போஸ்டர்கள், அச்சத்தைத் துாண்டுவது மட்டுமல்லாமல், தவறான செய்திகள் மற்றும் பிளவுபடுத்தும் சித்தாந்தங்களைப் பரப்பும் வகையில் உள்ளன.

நம் சமூகத்தில் பிளவுகளை உருவாக்கி கனடாவின் நற்பெயரை கெடுக்க முயற்சி செய்கின்றனர். அவர்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

3 பேர் கைது

நம் நாட்டின் பஞ்சாபில் உள்ள உளவுத் துறை தலைமையகத்தில் தாக்குதல் நடத்திய வழக்கில் தொடர்புடைய, காலிஸ்தான் ஆதரவாளர்கள் மூன்று பேரை, கனடா குடியுரிமை துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.கடந்த மாத இறுதியில், ஐரோப்பிய நாடான பிரிட்டனின் லண்டனில் இருந்து, கனடாவின் டொரன்டோ விமான நிலையத்திற்கு வந்த போது, அந்த மூன்று பேரும் கைது செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. அவர்களது பாஸ்போர்ட் உள்ளிட்ட சில ஆவணங்கள் போலியாக இருந்ததாகக் கூறப்படுகிறது. எனினும் இது குறித்த தகவல், கனடாவில் உள்ள நம் நாட்டின் அதிகாரிகளுக்கு அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்படவில்லை.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.