இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் நாட்டின் கடுமையான பொருளாதார சிக்கல் இருப்பது அனைவருக்கும் தெரியும். அதைச் சரி செய்யாமல் பாகிஸ்தான் கொடி ஏற்றும் விவகாரத்தில் இந்தியாவுடன் போட்டிப் போட்டு வருகிறது.
ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினம் இந்தியாவில் மிகப் பிரம்மாண்டமாகக் கொண்டாடப்படும். டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மூவர்ணமாக்கக் கொடியை ஏற்றுவார்.
நாடு முழுக்க பல்வேறு இடங்களிலும் தேசியக் கொடி ஏற்றி கோலாகலமாகக் கொண்டாடுவார்கள். டிரோன் நிகழ்ச்சி தொடங்கி பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளும் கூட நடக்கும். உலகையே வியக்க வைக்கும் வகையில் இந்த நிகழ்ச்சிகள் இருக்கும்.
பாகிஸ்தான்: இதற்கிடையே நமது அண்டை நாடான பாகிஸ்தானும் இந்தியாவைப் போலவே சுதந்திர தனத்தை எப்படியாவது பிரம்மாண்டமாகக் கொண்டாட வேண்டும் என்ற முயற்சியில் இறங்கியுள்ளது. பாகிஸ்தானில் மிக மோசமான பொருளாதார சூழல் இப்போது நிலவி வருகிறது. கோதுமை, பெட்ரோல், டீசல் என அனைத்து பொருட்களின் விலையும் உச்சம் தொட்டுள்ளது. இருப்பினும், அதைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்காமல் பிரம்மாண்டமாகக் கொண்டாடும் முயற்சியில் பாகிஸ்தான் இறங்கியுள்ளது.
இந்தியா, பாகிஸ்தான் என்று இரு நாடுகளுமே பிரிட்டிஷ் ஆட்சியில் இருந்து தான் சுதந்திரம் பெற்றன. இந்தியாவில் ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினம் கொண்டாடப்படும் நிலையில், பாகிஸ்தானில் ஒரு நாள் முன்னதாக ஆகஸ்ட் 14ஆம் தேதி சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது. இருப்பினும், இந்தியாவின் சுதந்திர தின கொண்டாட்டம் அளவுக்கு பாக். கொண்டாட்டம் உலக அளவில் கவனம் பெறாது.
500 அடி உயரக் கொடி: இந்தாண்டு சுதந்திர தின கொண்டாட்டத்தில் அந்த நிலையை ஓரளவுக்காவது மாற்ற வேண்டும் என்று பாகிஸ்தான் நினைக்கிறது. இதனால் சுதந்திர தினத்தன்று பாகிஸ்தான் 500 அடி தேசியக் கொடியை ஏற்ற முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த கொடி பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள லிபர்ட்டி சவுக்கில் ஆகஸ்ட் 14ஆம் தேதி ஏற்றப்படுகிறது.
இந்த ஒரு கொடிக்காகப் பாகிஸ்தான் சுமார் 40 கோடி ரூபாய் செலவழிக்க உள்ளது. பாகிஸ்தான் பல ஆண்டுகளாகவே கடும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறது. இப்போது அவர்களுக்கு 2000 கோடி ரூபாய் கடனும் இருக்கிறது. சமீபத்தில் தான் நிலைமையைச் சமாளிக்கச் சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்ததெல்லாம் கடன் வாங்கினார்கள். ஆனாலும், இந்தியாவுடன் போட்டிப் போட வேண்டும் என்று இப்போது இந்த பிரம்மாண்ட கொடியை ஏற்ற உள்ளனர்.
கொடி போர்: இந்த சுதந்திர தினத்தில் அட்டாரி எல்லையில் 413 அடி உயரக் கொடியை ஏற்ற இந்தியா திட்டமிட்டுள்ளது. இந்தச் சூழலில் தான் பாகிஸ்தான் 500 அடி கொடியை ஏற்ற முடிவு செய்துள்ளது. அதேநேரம் இரு நாடுகளுக்கும் இடையே இப்படி ‘கொடிப் போர்’ நடப்பது இது முதல்முறை இல்லை.
சுதந்திர கொண்டாட்டத்தில் கொடி ஏற்றுவது தொடர்பாக இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே பல ஆண்டுகளாகப் போட்டி நிலவி வருகிறது. கடந்த 2017ஆம் ஆண்டில், அட்டாரி-வாகா எல்லையில் இந்திய 360 அடி மூவர்ணக் கொடியை நிறுவிய உடனேயே 400 அடி கொடியை நிறுவப் பாகிஸ்தான் முடிவு செய்தது குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தானில் பல ஆண்டுகளாகப் பொருளாதார சிக்கல் இருந்தாலும் கடந்த சில மாதங்களாக இது தீவிரமடைந்துள்ளது. அங்கே பெருமழையால் ஏற்பட்ட வெள்ள பாதிப்பு பாகிஸ்தானைப் புரட்டிப் போட்டது. இதையடுத்து சவுதி அரேபியா, ஐக்கிய அமீரகம் அவ்வளவு ஏன் சர்வதேச நாணய நிதியம் ஆகியோரிடம் பல பில்லியன் டாலரை கடனாகவும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.