பெங்களூரு மீட்டிங்… எதிர்க்கட்சிகள் கனவு கரை சேருமா? உள்ளுக்குள் ஏகப்பட்ட அட்ராசிட்டி!

2024 மக்களவை தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு கூட இல்லை. மத்தியில் ஆளும் பாஜக அரசு அடுத்த தேர்தலுக்கும் பிரதமர் மோடி தான் நம்பர் ஒன் என்பதை கட்சி ரீதியாகவும், ஆட்சி ரீதியாகவும் மக்கள் மத்தியில் பதியச் செய்து வருகிறது. ஒவ்வொரு மாநிலமாக தங்களின் செல்வாக்கை ஆழம் பார்த்து ஆபரேஷன் அஜெண்டாக்களை அரங்கேற்றி வருகிறது. எனவே ஒருபக்கம் ரூட் கிளியர். ஆனால் எதிர்க்கட்சிகள் தான் திண்டாடி வருகின்றனர்.

எதிர்க்கட்சிகள் ஆலோசனை

இந்நேரம் பிரதமர் வேட்பாளர் இவர் தான், தேசிய அளவில் கூட்டணி இதுதான், தெற்கு, வடக்கு, கிழக்கு, மேற்கு என மண்டல வாரியாக கட்சிகளுக்கான முக்கியத்துவம் என்ன? உள்ளிட்டவை குறித்து அறிவித்திருக்க வேண்டாமா? ஆலோசனை கூட்டம் நம்பர் ஒன், நம்பர் டூ என சற்றே வேகம் குறைந்து செயல்பட்டு வருவதாக அரசியல் பார்வையாளர்கள் விமர்சனம் செய்கின்றனர். நாளைய தினம் கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் எதிர்க்கட்சிகளின் இரண்டாவது ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.

பாட்னாவில் ஒன்று கூடிய கட்சிகள்

முதல் கூட்டம் ஜூன் 23ஆம் தேதி பிகார் தலைநகர் பாட்னாவில் ஐக்கிய ஜனதா தளத்தின் நிதிஷ் குமார் ஒருங்கிணைத்தார். இரண்டாவது கூட்டத்தை
காங்கிரஸ்
ஒருங்கிணைத்துள்ளது. காங்கிரஸ் கட்சி தான் நாட்டிலேயே மிகவும் பழமையான கட்சி. எனவே மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக அரசியல் முன்னெடுப்பை முதல் ஆளாய் செய்திருக்க வேண்டாமா? என்ற கேள்வி எழுகிறது. இதில் கோட்டை விட்டதால் நிதிஷ் குமார், மம்தா பானர்ஜி என ஆளாளுக்கு ஸ்கோர் செய்ய ஆரம்பித்துவிட்டனர்.

பெங்களூருவில் 2வது கூட்டம்

இருப்பினும் பாஜகவை வீழ்த்த காங்கிரஸ் விட்டு கொடுத்து செல்வதில் தவறில்லை. முதலில் கூட்டணியில் சமரசம், செல்வாக்கு பெற்ற மாநில கட்சிகளுக்கு போட்டியிடுவதில் முன்னுரிமை, அதன்பிறகு பிரதமர் வேட்பாளர் என காய்களை நகர்த்தினால் சரியாக இருக்கும் என எதிர்க்கட்சிகள் பலவும் வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையில் பெங்களூரு நகரில் ஜூலை 17, 18 ஆகிய தேதிகளில் நடக்கும் ஆலோசனை கூட்டத்தில் 24 அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்பர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாரெல்லாம் பங்கேற்பு

இதில் சோனியா காந்தியும் வருவார் என்று கூறுகின்றனர். மேலும் பிகார் முதலமைச்சர் நிதிஷ் குமார், ராஷ்டிரிய ஜனதா தள் தலைவர் லாலு பிரசாத், துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ், ஐக்கிய ஜனதா தள தலைவர் ராஜிவ் ரஞ்சன் ஆகியோர் கலந்து கொள்கின்றனர். முதல் கூட்டத்திற்கு வராத ராஷ்டிரிய லோக் தள் கட்சி தலைவர் சவுத்ரி ஜெயந்த் சிங் வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஆம் ஆத்மி பரபரப்பு

ஆனால் டெல்லி அரசுக்கு எதிரான மத்திய அரசின் அவசர சட்டத்திற்கு காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்தால் தான் பெங்களூரு கூட்டத்தில் கலந்து கொள்வது பற்றி முடிவெடுக்கப்படும் என்று ஆம் ஆத்மி தெரிவித்துள்ளார். தென்னிந்தியாவில் இருந்து
திமுக
, மதிமுக, விசிக, கொங்கு நாடு மக்கள் கட்சி, புரட்சிகர சோசியலிஸ்ட் கட்சி,

அனைத்திந்திய பார்வர்டு பிளாக், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், கேரளா காங்கிரஸ் (ஜோசப்), கேரளா காங்கிரஸ் (மணி) ஆகியோர் பங்கேற்கின்றனர். இவற்றில் பல கட்சிகள் பெரிய எதிர்பார்ப்புகள் உடன் காத்திருக்கின்றன. தற்போதைய சூழலில் எதிர்க்கட்சிகள் விரைவாக முடிவுகளை எடுத்து ஒவ்வொரு மாநிலத்திலும் தயாராக வேண்டியது அவசியம் என்பதில் மட்டும் சந்தேகமில்லை.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.