புனே: நாடு முழுவதும் தக்காளி விலை உச்சம் தொட்டுள்ளது. ஒரு கிலோ தக்காளி ரூ.100-க்கு மேல் விற்பனை செய்யப்படுகிறது. இந்தச் சூழலில், மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் விவசாயி ஒருவர் தக்காளி விற்று ஒரே மாதத்தில் கோடீஸ்வரராகியுள்ளார்.
விவசாயி துக்காராம் பாகோஜி கயாகருக்கு புனே மாவட்டத்தில் 18 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. இதில், அவர் 12 ஏக்கரில் தக்காளி விளைவித்து வருகிறார். தற்போது தக்காளி விலை உச்சம் தொட்டுள்ள நிலையில் அவருக்கு பெரும் வாய்ப்பு அமைந்துள்ளது.
கடந்த ஒரு மாதத்தில் மட்டும் அவர் 13 ஆயிரம் பெட்டிகளுக்கு தக்காளிகளை அறுவடை செய்து சந்தைப்படுத்தியுள்ளார். ஒரு பெட்டிக்கு அதன் எடையைப் பொறுத்து ரூ.1,000 முதல் ரூ.2,400 வரை விலை நிர்ணயம் செய்து விற்றுள்ளார். இதனால், கடந்த ஒரு மாதத்தில் மட்டும் அவருக்கு ரூ.1.5 கோடி வருவாய் கிடைத்துள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை ஒரே நாளில் 900 பெட்டிகள் தக்காளிகளை ஏற்றுமதி செய்து ரூ.18 லட்சம் வருவாய் ஈட்டியுள்ளார்.
அவரது விவசாயப் பணிகளுக்கு அவரது மகனும் மருமகளும் உறுதுணையாக இருக்கின்றனர். அவரது மகன் ஈஸ்வர் விற்பனை, நிதி மேலாண்மை வேலைகளைச் செய்கிறார். மருமகள் சோனாலி தக்காளியைப் பயிரிடுதல், அறுவடை செய்தல், அவற்றை பெட்டிகளில் அடைத்தல் உள்ளிட்ட வேலைகளைச் செய்கிறார். கடந்த மூன்று மாதங்களில் தாங்கள் செலுத்திய கடின உழைப்புக்குப் பலன் கிடைத்துள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
துக்காராம் மட்டுமல்ல புனே மாவட்டத்தின் ஜுன்னார் கிராமத்தைச் சேர்ந்த தக்காளி விவசாயிகள் பலரும் ஒரே மாதத்தில் கோடீஸ்வரராகியுள்ளனர்.