ரூ.7.27 லட்சம் வரை வருமானவரி விலக்கு… நிதியமைச்சர் சொன்னதும் நீங்கள் புரிந்துகொள்ள வேண்டியதும்!

ஆண்டுக்கு 7.27 லட்சம் ரூபாய் வரை வருமானம் ஈட்டுவோருக்கு வருமான வரி கிடையாது என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளது வரி செலுத்துவோர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் யாருக்கு பயன் கிடைக்கும் என்பதை விரிவாக பார்க்கலாம்.

மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்

கர்நாடக மாநிலம் உடுப்பியில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்று பேசியபோது, ஆண்டுக்கு 7.27 லட்சம் ரூபாய் வரை வருமானம் ஈட்டுவோர் வருமான வரி செலுத்த தேவையில்லை என்று தெரிவித்தார்.

இதுகுறித்து பேசிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், “7 லட்சம் ரூபாய் வரை வருமானம் ஈட்டுவோருக்கு வரி விலக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால், 7 லட்சம் ரூபாய்க்கு மேல் சற்று கூடுதலாக வருமானம் ஈட்டுவோர் என்ன செய்வதென கேட்கின்றனர்.

எனவே நாங்கள் குழுவாக அமர்ந்து ஆய்வு செய்தோம். அப்போது, 7.27 லட்சம் ரூபாய் வரை வருமானம் ஈட்டுவோர் வரி செலுத்த தேவை இல்லை என தெரியவந்தது. ஆக, 7 லட்சம் ரூபாயையும் தாண்டி 27,000 ரூபாயை தொட்ட பிறகுதான் நீங்கள் வரி செலுத்த தொடங்குகிறீர்கள்” என்று கூறினார்.

2023 பட்ஜெட்டில், புதிய வரி முறையில் ஆண்டுக்கு 7 லட்சம் ரூபாய் வரை வருமானம் ஈட்டுவோர் வரி செலுத்த தேவையில்லை என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், இப்போது நிதியமைச்சரோ 7.27 லட்சம் ரூபாய் வரை வருமான வரி விலக்கு இருப்பதாக கூறுகிறாரே. இதுகுறித்து விவரம் அறிவதற்காக ஆடிட்டர்எஸ். சதீஷ்குமாரிடம் (Auditorssk.com) பேசினோம்.

வருமான வரி விலக்கு

ஊதியதாரர்களை பொறுத்தவரையில் 7 லட்சம் ரூபாயையும் தாண்டி 50,000 ரூபாய் நிலைக் கழிவு (Standard deduction) வழங்கப்படுகிறது. ஆக, ஊதியதாரர்களுக்கு 7.5 லட்சம் ரூபாய் வரை வரி கிடையாது. மேலும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு 15,000 ரூபாய் நிலைக் கழிவு வழங்கப்படுகிறது.

சரி இப்போது நிதியமைச்சர் கூறும் 7.27 லட்சம் ரூபாய் வரி விலக்கு, ஊதியதாரர்கள் அல்லாமல் தொழில் வருமானம் ஈட்டும் இதர வரி செலுத்துவோருக்கு எப்படி பொருந்தும் என்பதை பார்க்கலாம்.

வருமான வரி கணக்கு:

நிதியமைச்சர் கூறியது பற்றி ஆடிட்டர் சதீஷ்குமார் பேசியபோது, “ஆண்டு வருமானத்தில் 3 லட்சம் ரூபாய் வரை வரி கிடையாது. 3 லட்சம் ரூபாய்க்கு மேல், 6 லட்சம் ரூபாய் வரை 5 சதவிகிதம் வருமான வரி விதிக்கப்படும். 6 லட்சம் ரூபாய்க்கு மேல், 9 லட்சம் ரூபாய் வரை 10 சதவிகிதம் வருமான வரி விதிக்கப்படும்.

ஒரு நபருக்கு 7.27 லட்சம் ரூபாய் வருமானம் வருகிறது என வைத்துக்கொள்வோம். முதலில் 3 லட்சம் ரூபாய்க்கு வரி கிடையாது. இரண்டாவதாக, 3 லட்சம் முதல் 6 லட்சம் ரூபாய் வரையிலான வருமானத்துக்கு (ரூ.3 லட்சம்) 5 சதவிகிதத்தில் 15,000 ரூபாய் வரி விதிக்கப்படும். அடுத்ததாக, 6 லட்சம் ரூபாயில் இருந்து 7.27 லட்சம் ரூபாய் வரையிலான வருமானத்துக்கு (ரூ.1.27 லட்சம்) 10 சதவிகிதத்தில் 12,700 ரூபாய் வரி விதிக்கப்படும்.

எஸ்.சதீஷ்குமார், ஆடிட்டர், Auditorssk.com

மொத்தமாக சேர்த்தால் 27,700 ரூபாய் மொத்த வரியாக வரும். அதில் 27,000 ரூபாய்க்கு வரி கிடையாது என்பதைத்தான் நிதியமைச்சர் கூறுகிறார். இந்த 7.27 லட்சம் ரூபாய் வரம்பு என்பது ஊதியதாரர்களுக்கும் பொருந்துமா அல்லது ஊதியதாரர்கள் அல்லாதவர்களுக்கு (Non-Salaried) மட்டும் பொருந்துமா என்பதை நிதியமைச்சர் தெளிவுபடுத்தவில்லை. எனவே, இதுகுறித்து மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும்போதே நமக்கு தெளிவான விவரம் தெரியவரும்” என்று கூறினார்.

உண்மையாகவே இது சலுகைதானா?

இந்த 27,000 ரூபாய் என்பது குறிப்பிடும் அளவுக்கு பெரிய சலுகை அல்ல. மாறாக, முதியோர்களுக்கான மருத்துவ செலவுகளுக்கு வரி சலுகைகளை வழங்குவதே உண்மையாக பயனளிக்கும் எனவும் சதீஷ்குமார் கூறினார். குறிப்பாக, முதியோர்களுக்கான மருத்துவ செலவுகளுக்கு உச்சவரம்பு ஏதும் இல்லாமல், உண்மையான செலவுத் தொகைக்கு வரி விலக்கு வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

வருமான வரி விலக்கு

இதுகுறித்து அவர் பேசியபோது, “சிலருக்கு 40 வயதில் கூட மாரடைப்பு ஏற்படுகிறது. அவர்கள் பைபாஸ் அறுவை சிகிச்சை செய்து கொண்டால், பில்லை காட்டிவிட்டு ஏன் வரி விலக்கு பெறக்கூடாது? இருதய நோய்கள், சிறுநீரக கோளாறுகள், மூளை சார்ந்த நோய்கள் உள்ளிட்ட பல்வேறு கொடிய நோய்களுக்கு மிக அதிகமாக செலவாகிறது. இதுமட்டுமல்லாமல் அவர்களுக்கு பராமரிப்புச் செலவுகளும் சுமையை ஏற்படுத்துகிறது. எனவே, மருத்துவத்தை பொறுத்தவரை வரி விலக்கிற்கு உச்சவரம்பே இருக்கக்கூடாது.

சீனியர் சிட்டிசன்கள் மட்டுமல்லாமல், வயது வித்தியாசம் இல்லாமல் அனைவருக்குமே மருத்துவ செலவுகளுக்கு உச்சவரம்பு இல்லாமல் வரி விலக்கு வழங்கப்பட வேண்டும்” என்று கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.