கர்நாடகாவில் கற்ற பாடம் + உ.பி. வியூகம்.. காங்.கை வீழ்த்த ராஜஸ்தானில் பாஜக கையிலெடுத்துள்ள 2 விஷயம்!

ஜெய்ப்பூர்: காங்கிரசை பார்த்து பாஜக காப்பியடிக்கிறதா? என்று ஆச்சரியமாக இருக்கலாம். ஆனால் ராஜஸ்தான் மாநிலத்தில் இதைத்தான் தேசிய தலைமை முதல் கொண்டு உள்ளூர் நிர்வாகிகள் வரை செய்து கொண்டு இருக்கிறார்கள்.

கர்நாடகாவில் பாஜக அடைந்த படுதோல்வி அந்த கட்சியை உலுக்கி விட்டது என்று சொல்ல வேண்டும். தோல்வியில் இருந்து பாடம் கற்றுக் கொள்வதில் பாஜக கெட்டிக்கார கட்சி. கர்நாடக தேர்தல் தோல்விக்கான காரணத்தையும் உடனே கற்றுத் தேர்ந்து விட்டது பாஜக.

எனவே தான், இந்த ஆண்டு இறுதிக்குள் தேர்தலை எதிர்கொள்ள உள்ள ராஜஸ்தானில் அதை செயல்படுத்த தொடங்கியிருக்கிறது பாஜக. அதுமட்டுமல்ல லாலு பிரசாத், பீகாரில் முதல்வராக இருந்த காலத்தில், “பழைய பாஜக” கையில் எடுத்த அஸ்திரம், உத்தரப்பிரதேசத்தில் பாஜகவின் வெற்றிக்கு காரணமான ஆயுதம், என அத்தனையையும் கலந்து கட்டி ராஜஸ்தானில் வீச ஆரம்பித்துள்ளது பாஜக.

கர்நாடக தேர்தல்: கர்நாடக பாஜக தோல்விக்கு மிகப்பெரிய காரணம் 40 சதவீதம் ஊழல் அரசு என்று காங்கிரஸ் முன்னின்று நடத்திய மிகப்பெரிய பிரச்சாரம் தான். கர்நாடக முதல்வராக இருந்த பசவராஜ பொம்மை முகத்தை வரைந்து பேடிஎம் மாதிரி Paycm என்று ஊருக்கு ஊர் போஸ்டர் அடித்து ஒட்டியது காங்கிரஸ். டிகே சிவகுமாரின் புத்திசாதுர்யம் இதில் எதிரொலித்தது என்பார்கள். ஊழலுக்கு எதிரான கட்சி என்று பாஜக பேசிக் கொண்டிருக்கும்போது அந்த கட்சியின் கர்நாடக ஆட்சி கறை படிந்தது என்று மக்கள் மனதில் பதிய வைத்து, பாஜக இரட்டை வேடம் போடுவதாக தொடர்ந்து மக்களின் மன ஆழத்துக்கு கொண்டு சென்று விட்டது காங்கிரஸ்.

ஊழல் புகார்: பாஜகவின் கர்நாடக தோல்விக்கு பல காரணங்கள் இருந்த போதிலும் ஊழல் தொடர்பான தொடர் பிரச்சாரங்கள் முக்கிய பங்காற்றின. ராஜஸ்தானில் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் அரசுக்கு எதிராக பாஜக இந்த யுக்தியை கையில் எடுத்துள்ளது. ராஜஸ்தானின் பிகானீர் நகரில் சமீபத்தில் தேர்தல் பரப்புரையில் பேசிய மோடி, “காங்கிரஸ் ஒரு கொள்ளையடிக்கும் கடை, பொய்களின் சந்தை” (loot ki dukaan, jhooth ka bazaar) என்று கடுமையாக தாக்கி பேசினார். மேலும், காங்கிரஸ் அரசு 85% ஊழல் செய்ய கூடியது என்று நேரடியாக குற்றம் சாட்டியுள்ளார் பிரதமர் நரேந்திர மோடி. ஒரு காலத்தில் நாட்டில் இருந்த ஊழல்களை குறிப்பிடுவதற்காக, அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தி, “மத்திய அரசிடம் இருந்து ஒரு ரூபாய் சென்றால் 85 பைசா ஊழலில் கரைந்து விடுகிறது” என்று மனதிலிருந்த ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருந்தார். அதை மறுபடியும் நினைவூட்டிய பிரதமர் மோடி, கடந்த 9 ஆண்டுகளில் 24 லட்சம் கோடி ரூபாய்களை நெடுஞ்சாலை பணிகளுக்காக மற்றும் ரயில்வே பணிகளுக்காக மத்திய அரசு செலவிட்டு உள்ளது என்றும், ஒருவேளை காங்கிரஸ் ஆட்சியில் இருந்திருந்தால் ராஜீவ் காந்தி சொன்ன கணக்குப்படி 20 லட்சம் கோடி சுருட்டப்பட்டு இருக்கும் என்றும் பேசினார்.

சட்டம் ஒழுங்கு: அடுத்ததாக பாஜக கையில் எடுத்துள்ள ஆயுதம், சட்டம் ஒழுங்கு பிரச்சினை. 1990களில் லாலு பிரசாத் யாதவ் பீகார் மாநிலத்தை ஆட்சி செய்த போது அது ரவுடிகளின் ராஜ்ஜியமாக இருந்தது என்பது பாஜகவின் தேர்தல் பிரச்சாரமாக இருந்தது. ஜங்கிள் ராஜ் என்று அதற்கு பெயர் சூட்டப்பட்டு மிகப்பெரிய பிரச்சாரம் நடைபெற்றது. இதன் விளைவாக 2005ம் ஆண்டு மார்ச் மாதத்திற்கு பிறகு இதுவரை ராஷ்டிரிய ஜனதா தளம் ஆட்சியைப் பிடிக்க முடியவில்லை.

What are the 2 issues BJP taken up in Rajasthan to defeat the Congress? Explainer

யோகி பார்முலா: உத்தர பிரதேசத்திலும் சட்டம் ஒழுங்கை முன்வைத்தது பாஜக பிரச்சாரம் செய்தது. ரவுடிகளுக்கு எதிராக யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசு திறமையாக நடவடிக்கை எடுக்கிறது என்பது பாஜகவின் புகழாரமாக இருந்து வருகிறது. ராஜஸ்தானிலும் இதே வெற்றி பார்முலாவை கையில் எடுத்திருக்கிறது பாஜக.

பெண்கள் பாதுகாப்பு: பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் பாதுகாப்பற்ற மாநிலம் ராஜஸ்தான், என்பது பாஜக குற்றச்சாட்டாக இருக்கிறது. தேசிய குற்றவியல் ஆவண காப்பகம் அறிக்கையின்படி, 2021 ஆம் ஆண்டு, ராஜஸ்தான் மாநிலத்தில்தான், இந்தியாவிலேயே அதிகபட்சமாக, பலாத்கார வழக்குகள் பதிவாகி இருந்தன என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதை தேர்தல் பிரச்சாரத்திற்கான துருப்புச் சீட்டாக பாஜக கையில் எடுத்திருக்கிறது. அதே நேரம் ராஜஸ்தான் மாநிலத்தில் அதிக அளவுக்கு பெண்கள் மற்றும் குழந்தைகள் தொடர்பான புகார்களை காவல்துறை எடுத்து விசாரிக்கிறது, எனவேதான் அந்த வழக்குகள் பதிவாகி இருக்கின்றன என்பது முதலமைச்சர் அசோக் கெலாட் தரப்பு வாதமாக இருக்கிறது. ஊழல் மற்றும் சட்டம் ஒழுங்கு ஆகிய இரு வெற்றி வியூகங்களை பாஜக கையில் எடுத்திருக்கிறது. இதற்கு காங்கிரஸ் எவ்வாறு பதிலடி தரப்போகிறது என்பதை எல்லாம் வைத்து தான் ராஜஸ்தான் அரசியல் நிலவரம் அடுத்தடுத்த நாட்கள் அல்லது வாரங்களில் அனல் பறக்க உள்ளது.

Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.