கடந்த மாதம் பிரெஞ்சு ஓபன் அரையிறுதியில் ஜோகோவிச்சிடம் தோற்ற பிறகு அல்கரஸ் இப்படி கூறியிருந்தார் “இந்தப் போட்டியைப் போல வேறு எப்பொழுதும் பதற்றமாக இருந்ததில்லை. ஜோகோவிச்சுக்கு எதிராக விளையாடுவது அவ்வளவு எளிதான காரியமில்லை. கிராண்ட்ஸ்லாம் அரையிறுதியில் ஜோகோவிச் போன்ற வீரரோடு விளையாடும்போது மிகப்பெரிய தைரியம் வேண்டும். அடுத்தமுறை அவருடன் விளையாடும் போது நான் என்னை மாற்றிக் கொள்வேன் என நம்புகிறேன்.” விம்பிள்டன் இறுதி போட்டியில் ஜோகோவிச்சை வென்றதன் மூலம் தான் சொன்னதை செய்து காட்டியிருக்கிறார் 20 வயதேயான ஸ்பெய்ன் இளைஞன் கார்லோஸ் அல்கரஸ்.

இதுவரை ஏழு விம்பிள்டன்னுடன் 23 கிராண்ட்ஸ்லாம் வென்ற ஜோகோவிச் 6 வருடத்திற்கு ( 34 போட்டிகளுக்கு) பிறகு விம்பிள்டன்னில் தோற்கிறார். கடந்த இருபது ஆண்டுகளில் பெடரர், நடால், ஜோகோவிச் மற்றும் முர்ரே ஆகிய நால்வரைத் தவிர விம்பிள்டன் பட்டம் வென்ற வீரரானார் அல்கரஸ்.
கடந்தாண்டு விம்பிள்டன், இந்தாண்டு ஆஸ்திரேலியன் ஓப்பன், பிரெஞ்சு ஓப்பன் என வென்று தனிக்காட்டு ராஜாவாக டென்னிஸ் உலகில் ஆதிக்கம் செலுத்தி வந்தார் 36 வயது நோவக் ஜோகோவிச். அவரை எதிர்த்து ஆடிய வீரர்கள் அனைவரும் போராடி வெல்லமுடியாமல் அவரிடம் சரணடைந்தனர். இந்தப் பின்னணியில் தான் ஜோகோவிச் அல்கரஸை தனது 35வது கிராண்ட்ஸ்லாம் இறுதிப் போட்டியில் எதிர்கொண்டார். அல்கரஸ் ஒரு முழுமையான டென்னிஸ் வீரர்.

இவர் போர்ஹேண்ட் மற்றும் பேக்ஹேண்ட் இரண்டிலும் சிறப்பாக விளையாடினாலும் போர்ஹேண்ட் தான் தனித்துவமானது. அதேபோல் ட்ராப் ஷாட்களுக்கும் நெட் கேம்களுக்கும் பெயர் போனவர். கோர்ட்டின் அந்த எல்லையிலிருந்து இந்த எல்லைக்கு ஓடி பந்துகளை திருப்பி அனுப்புவதில் வல்லவர். தனது 16 வயதில் தொழில்முறை வீரராக விளையாட்டை தொடங்கிய இவர் தனது முதல் கிராண்ட்ஸ்லாமாக 2022 அமெரிக்க ஓப்பன் பட்டத்தை வென்றது மட்டுமில்லாமல் டென்னிஸ் தரவரிசை பட்டியலில் முதலிடத்திலும் உள்ளார்.
இந்தப் போட்டியில் ஜோகோவிச் முதல் செட்டில் 6-1 என எளிதாக வென்றவுடன் நேர் செட்களில் இந்த இறுதிப் போட்டியை வெல்வார் என பலரும் நினைத்தனர். ஒரு விளையாட்டில் ஒருவர் மட்டுமே வென்று கொண்டிருந்தால் அனைவருக்கும் சலிப்பு தட்டிவிடுமல்லவா, அந்த குறையை போக்கவே உதித்தான் `மாவீரன்’ அல்கரஸ். இரண்டாவது செட்டில் முதல் இரண்டு கேம்களை வென்ற அல்கரஸை விடாமல் துரத்திய ஜோகோவிச் 6-6 என டையில் முடித்ததோடு, டை பிரேக்கில் முதல் மூன்று புள்ளிகளை பெற்று வெற்றிக்கு அருகில் சென்றார். அதன்பிறகு அல்கரஸும் விடாப்பிடியாக போராடி அந்த செட்டை கைப்பற்றினார். இருவரும் தலா ஒரு செட்டை கைபற்ற ஆட்டம் சூடு பிடித்தது.

மூன்றாவது செட்டில் தான் ஆட்டம் உச்சத்தை எட்டியது என சொல்லலாம். முதல் இரு கேமையும், நான்காவது கேமையும் அல்கரஸும் மூன்றாவது கேமை ஜோகோவிச்சும் கைப்பற்ற மூன்றாவது செட் 3-1 என ஆனது. இந்த செட்டை கைப்பற்ற வேண்டுமானால் இந்த கேமை வெல்ல வேண்டிய கட்டாயத்தில் இருந்தார் ஜோகோவிச். ரசிகர் கூட்டம் அமைதியாக ஜோகோவிச் தனது சர்வை தொடங்குகிறார், தொடர்ந்து புள்ளிகள் பெற்று 40-15 என கேம் பாயிண்ட் வர ஜோகோவிச்சின் ரசிகர் கூட்டம் ஆர்ப்பரிக்கிறது. ஆனால் சிறிது நேரத்திலே அவர்கள் சத்தம் அடங்குகிறது அல்கரஸ் ரசிகர்களின் சத்தம் விண்ணைப் பிளக்கிறது. அல்கரஸ் விடாப்பிடியாக புள்ளிகளை பெற்று 40-40 என டியூஸ் ஆகிறது. அந்த ஆரவாரங்களுக்கு மத்தியில் ஜந்தாவது கேம் 26 நிமிடங்கள் நீண்டது, அதில் 8 முறை கேம் பாய்ண்ட் வாய்ப்பு வந்தும் அதனை நழுவவிட்டார் ஜோகோவிச்.
இந்த கேமில் மட்டும் அல்கரஸ் 718 மீட்டரும் , ஜோகோவிச் 595 மீட்டரும் ஓடியிருந்தனர். நீண்ட போரட்டத்துக்குப் பிறகு ஐந்தாவது கேமை வென்ற அல்கரஸ் அடுத்த இரண்டு கேமையும் ஐந்து நிமிடத்தில் வென்று 6-1 என மூன்றாவது செட்டை கைப்பற்றுகிறார்.
தான் தோல்வியை நோக்கி சென்று கொண்டிருப்பதை எண்ணி சுதாரித்துக் கொண்ட ஜோகோவிச் நான்காவது செட்டில் 6-3 என பெற்று கம்பேக் கொடுக்கிறார். இருவரும் 2-2 என பெற்று இறுதி செட் விளையாட தயாராகின்றனர்.
இறுதி செட்டில் ஜோகோவிச்சின் ஆட்டம் அந்தளவு தாக்கம் செலுத்தவில்லை, கடைசியில் அல்கரஸ் ட்ராப் ஷாட் அடிக்க அதை ஜோகோவிச் நெட்டுக்கு அருகில் வந்து அனுப்ப அதை திருப்பி ஜோகோவிச் தலைக்கு மேல் லாப் சாட் அடித்து நான்கு மணி நேரம் 42 நிமிடங்கள் சென்ற போட்டியை முடித்து வைத்தார்.
இந்த போட்டியில் தனக்கு தொடர்ந்து கிடைத்த வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ளாததால் ஜோகோவிச் தனது 24வது கிராண்ட்ஸ்லாம் வாய்ப்பை இழந்தார். முந்தைய போட்டியை ஒப்பிடுகையில் அவர் போர்ஹேண்ட் ஷாட்கள் கொஞ்சம் சொதப்பலாகத்தான் இருந்தது. அல்கரஸின் பேக்ஹேண்ட் டாப்ஸிபின் இந்த போட்டியில் சிறப்பாக இருந்தது, அதனால் நிறைய ட்ராப் ஷாட்களையும் போட முடிந்தது. இதனால் ஜோகோவிச் வழக்கத்தை விட பேஸ்லைனை ஒட்டி ஆடினார். ஆட்டம் செல்ல செல்ல அல்கரஸின் சர்வும், பேக்ஹேண்ட் கிராஸ் கோர்ட் ஷாட்டும் மேம்பட்டுக்கொண்டே சென்றது. முதல் செட்டில் ஒரு கேமை மட்டுமே பெற்று தோற்றிருந்தாலும் மனம் தளராமல் அலகரஸ் தொடர்ந்து சிறப்பாக விளையாடி இப்போட்டியை வென்றுள்ளார்.

மொத்தத்தில் கடந்த மாத பிரெஞ்சு ஓபனிலிருந்து பாடங்களை கற்றுக்கொண்டு தன் திறன்களை மேம்படுத்தி, பதற்றத்தை சிறப்பாக கையாண்டு டென்னிஸ் உலகின் தலைசிறந்த வீரரான ஜோகோவிச்சை தோற்கடித்து விம்பிள்டன் பட்டத்தை வென்றுள்ளார் அல்கரஸ். இந்த போட்டி முடிந்தபிறகு செய்தியாளர் சந்திப்பில் ஜோகோவிச் அல்கரஸை பற்றி

“நான் இப்படிப்பட்ட வீரரிடம் இதுவரை விளையாடியதில்லை. நடால், பெடரர் மற்றும் என்னை போன்ற உலகின் தலைசிறந்த மூன்று வீரர்களின் அம்சங்கள் இவரிடம் இருப்பதை ஒத்துக் கொள்கிறேன். இவரிடம் நடாலை போல போராட்ட குணமும், போட்டிக்கான மனநிலையும் உள்ளது. என்னுடைய பேக்ஹேண்ட், டிபன்ஸ் மற்றும் தகவமைத்துக் கொள்ளும் திறனும் உள்ளது” என கூறியுள்ளார்.
வேங்கை வாழ்ந்த காட்டிலே, வேங்கை வந்து நிரப்பிடும் கதையோ அரசன் நானோ? ஆம்! இவன் அரசன்தான், டென்னிஸ் உலகின் அடுத்த அரசன்!