சென்னை: ஜவான் படத்தில் சம்பளம் கொடுக்காவிட்டாலும் நடித்திருப்பேன் என விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்.
ஷாருக்கான் கதாநாயகனாக நடிக்கும், ஆக்ஷன் த்ரில்லர் படமாக உருவாகி வரும் ஜவான் படத்தில் நயன்தாரா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதில், பிரியாமணி, யோகி பாபு, சான்யா மல்ஹோத்ரா என பலர் நடித்துள்ளனர்.
இதில், இந்தி நடிகை தீபிகா படுகோன் கேமியோ ரோலில் நடித்துள்ளார். செப்டம்பர் 7ந் தேதி இப்படம் வெளியாக உள்ளதால் படத்தின் அடுத்த வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.
ஷாருக்கானின் ஜவான்: பதான் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பின் ஷாருக்கான் நடிப்பில் உருவாகி உள்ள படம் ஜவான். இப்படத்தை இயக்குவதன் மூலம் பாலிவுட் இயக்குனராக அட்லீட் மாறி உள்ளார். ஷாருக்கானுக்கு ஜோடியாக முன்னணி கதாநாயகி நயன்தாரா நடித்துத்துள்ளார். இப்படத்தில் வில்லனாக விஜய் சேதுபதி நடித்துள்ளார்.
மிரட்டலான டிரைலர்: இந்த படத்திலும் நடிகர் ஷாருக்கான் தனக்கென ஒரு படையை உருவாக்கி அவர்களுடன் எதிரிக்கு எதிராக செயல்படும் போர் வீரராக வருகிறார். இந்த படத்தின் டீசர் சில நாட்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. ஜவான் டிரைலரில் விஜய் சேதுபதியை பார்த்த ரசிகர்கள் மிரண்டு போனார்கள். அந்த அளவுக்கு சும்மா பின்னி பெடலெடுத்து இருந்தார்.
சம்பளம் என்னங்க சம்பளம்: இந்நிலையில், நடிகர் விஜய்சேதுபதி ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில், நான் ஷாருக்கான் சாருக்காக மட்டுமே ஜவான் படத்தில் நடித்தேன். எனக்கு சம்பளமே கொடுக்காமல் இருந்திருந்தாலும் கூட அந்த படத்தில் நடித்திருப்பேன். எனக்கு ஷாருக்கான் சாருடன் சேர்ந்து நடிக்க வேண்டும் என்பது என் கனவு என்று கூறியுள்ளார்.
ஷாருக்கானின் தீவிர ரசிகன்: நயன்தாரா, விக்னேஷ் சிவன் திருமணத்தில் ஷாருக்கான் கலந்து கொண்டார். அப்பொழுது அவரை பார்த்த விஜய் சேதுபதி, சார் உங்கள் படத்தில் வில்லனாக நடிக்க ஆசையாக இருக்கிறது என்று கூறியிருக்கிறார். அதன் பிறகே ஜவான் படத்தில் விஜய் சேதுபதியை நடிக்க வைத்திருக்கிறார் அட்லி. விஜய் சேதுபதி ஷாருக்கானின் ரசிகரைத் தாண்டி வெறியர் என்று சொல்லும் அளவுக்கு அவரை அவ்வளவு பிடிக்குமாம்.