ஆசைக்கு கூட என்னால் தக்காளி சாதம் சாப்பிட முடியவில்லை.. ஆனால் செந்தில் பாலாஜிக்கு… ஜெயக்குமார் கவலை

சென்னை:
தக்காளி விலை கடுமையாக உயர்ந்து வருவதால் தன்னால் தக்காளி சாதம் கூட சாப்பிட முடியவில்லை என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வேதனை தெரிவித்துள்ளார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த ஜெயக்குமாரிடம் பொன்முடி விவகாரம், செந்தில் பாலாஜி விவகாரம் உட்பட பல கேள்விகள் எழுப்பப்பட்டன. அதற்கு பதிலளித்து ஜெயக்குமார் கூறியதாவது:

செந்தில் பாலாஜி, பொன்முடி என தொடர்ந்து அமைச்சர்களின் வீட்டில் அமலாக்கத்துறை ரெய்டு நடத்தி வருவதால் முதல்வர் மு.க. ஸ்டாலின் பயத்தில் நடுங்கிக் கொண்டிருக்கிறார். அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பது போல இப்போது முதல்வருக்கும், அமைச்சர்களுக்கும் எப்போது பார்த்தாலும் அமலாக்கத்துறை வந்துவிடுவார்களோ, வருமான வரித்துறை வந்துவிடுவார்களோ என பீதியிலேயே இருக்கிறார்கள்.

அதனால் மக்களை பற்றிய அக்கறை அவர்களுக்கு இல்லை. கொள்ளையடித்த பணம், குவித்த தங்கங்கள், குவித்த வைடூரியங்கள் என அனைத்தையும் பதுக்கி வைப்பதில்தான் அவர்கள் அக்கறை காட்டுகின்றனர்.

பொன்முடியை பொறுத்தவரை கிட்டத்தட்ட இரண்டரை லட்சம் யூனிட் செம்மண்ணை சுரண்டியிருக்கிறார் என்பதுதான் அவர் மீதுள்ள குற்றச்சாட்டு. ஒரு மிகப்பெரிய இயற்கை வளத்தையே சுரண்டிய கொள்ளைக்கார கும்பல் அது. அமலாக்கத்துறை சோதனையில் பல கோடிக்கணக்கான ரூபாய் இந்தோனேஷியாவுக்கும், சிங்கப்பூருக்கும் அனுப்பி வைக்கப்பட்டிருப்பது தெரியவந்திருக்கிறது. இன்னும் தோண்ட தோண்ட பல பயங்கரமான விஷயங்கள் தெரியவரும். அதனால் இப்போது ஒவ்வொருத்தராக நெஞ்சு வலி என படுத்துக்கொள்ள போகிறார்கள்.

இன்றைக்கு செந்தில் பாலாஜிக்கு புழல் சிறையில் முதல் வகுப்பு ஒதுக்கி இருக்கிறார்கள். அங்கு அவர் என்னென்ன கேட்டாலும் அது கிடைக்கும். யார் சிறைக்கு போய் பார்க்கப் போகிறார்கள்? சிக்கன் பிரியாணி, மட்டன் பிரியாணி, சூப் என கேட்டதெல்லாம் செந்தில் பாலாஜிக்க கிடைக்கும். யாருக்கு தெரியும்.. ஏர் கண்டிஷன் கூட கொடுத்தாலும் கொடுப்பார்கள். இதையெல்லாம் அமலாக்கத்துறை கண்காணிக்க வேண்டும். வீட்டில் இருப்பது போல சிறையில் இருந்தால் அது என்ன நியாயம்?

வீட்டில் கூட என்னால் ஆசைக்கு தக்காளி சாதம் சாப்பிட முடியவில்லை. அந்த அளவுக்கு விலைவாசி இருக்கிறது. ஆனால் அதை பற்றி எல்லாம் நமது முதல்வருக்கு கவலை கிடையாது. எங்கே அவரது வீட்டுக்கு அமலாக்கத்துறை வந்துவிடுவார்களோ என்பதை தான் அவர் யோசித்து வருகிறார். இவ்வாறு ஜெயக்குமார் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.