சென்னை: “ஓ.பி.ரவீந்திரநாத் அதிமுக கிடையாது என்று கட்சியின் சார்பில் கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது. அவருக்கும் அதிமுகவுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. அவர் சுயேச்சை எம்.பி என்ற அடிப்படையில்தான் அவரை அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு அழைத்திருப்பார்கள்” என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.
சென்னையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் புதன்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: “அதிமுக ஒரு மிகப் பெரிய சக்தி என்பதை இன்றைக்கு இந்தியாவே உணர்ந்திருக்கிறது. அதன் அடிப்படையில்தான் அதிமுகவுக்கு இந்தளவுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. அதைத்தான் பார்க்க வேண்டும்.
நீதிமன்றத்தைப் பொறுத்தவரை, ஓ.பி.ரவீந்திரநாத் தேனி தொகுதியில் வெற்றி பெற்றது செல்லாது என்று அறிவித்துள்ளது. இது தொடர்பாக ஏற்கெனவே கட்சியின் சார்பில், நாங்கள் கடிதம் கொடுத்துள்ளோம். அதேபோல், நாடாளுமன்றத்திலும் அவர் அதிமுக கட்சியே இல்லை என்று கடிதத்தை சமர்ப்பித்துள்ளோம்.
எனவே, அவருக்கும் அதிமுகவுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. தேசிய ஜனநாயக கூட்டணியில் எங்களுக்கு கொடுத்த முக்கியத்துவத்தை கருதி பார்க்கும் வேளையில், ஓ.பி.ரவீந்திரநாத்தை அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு அழைத்தால் எந்தவிதமான தாக்கமும் ஏற்படப்போவது கிடையாது. அவர் சுயேச்சை எம்.பி என்ற அடிப்படையில்தான் அழைத்திருப்பார்கள்” என்று அவர் கூறினார்.