சென்னையில் பயங்கரம்.. சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்.. ஷாக்

சென்னை:
சென்னை சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் பெண் ஒருவரை இளைஞர் அரிவாளால் சரமாரியாக வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் பெண்களுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. கடந்த சில மாதங்களுக்கு முன்பு கூட, பரங்கிமலை ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவியை ஓடும் ரயில் முன்பு இளைஞர் ஒருவர் தள்ளிவிட்டதில் அந்த மாணவி உடல் துண்டாகி உயிரிழந்தார். விசாரணையில், அந்த இளைஞர் ஒருதலையாக அந்த மாணவியை காதலித்து வந்ததும், ஆனால் அந்த மாணவி அவரை காதலிக்காததால் இந்தக் கொடூர செயலில் அவர் ஈடுபட்டதும் தெரியவந்தது. ஆனாலும், இத்தனை குரூர மனம் படைத்த அந்த இளைஞருக்கு விதிக்கப்பட்ட குண்டர் சட்டத்தை நீதிமன்றம் கடந்த வாரம்தான் தள்ளுபடி செய்தது.

இந்நிலையில், தற்போது மற்றொரு பயங்கர சம்பவம் நடந்துள்ளது. இன்று இரவு 10 மணியளவில் சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் பழ வியாபாரம் செய்யும் ராஜேஸ்வரி (35) என்ற பெண் நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது சென்னை கடற்கரை செல்லும் ரயில் வந்து கொண்டிருந்தது. அந்த சமயத்தில் அங்கு வந்த ஒரு இளைஞர் திடீரென தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து அந்தப் பெண்ணை சரமாரியாக வெட்டினார். அந்தப் பெண் ரத்த வெள்ளத்தில் தப்பியோட முயன்ற போதும், அந்த இளைஞர் விடாமல் துரத்திச் சென்று அவரை வெட்டினார்.

இதை பார்த்த அங்கிருந்தவர்கள் அலறியடித்துக் கொண்டு ஓடினர். அதன் பின்னர் அந்த இளைஞர் அங்கு வந்த ரயிலில் ஏறி தப்பிச் சென்றார். இச்சம்பவம் குறித்து தகவலறிந்த போலீஸார் அங்கு வந்து காயமடைந்த ராஜேஸ்வரியை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும், அவரை வெட்டிவிட்டு தப்பியோடியவரையும் போலீஸார் தேடி வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.