மக்கானா ஹெல்தியான ஸ்நாக்ஸா… யாரெல்லாம் எடுத்துக் கொள்ளலாம்? உணவியல் ஆலோசகர் விளக்கம்!

இன்று பெரும்பாலான யூடியூப் சேனல்களில் செய்து காண்பிக்கப்படும் மக்கானா, பெரும்பாலும் சூப்பர் மார்க்கெட்டுகளில் மட்டுமே கிடைக்கக்கூடிய ஹெல்தியான ஸ்நாக்ஸ். இயற்கையானது மற்றும் உடல் நலத்திற்கு ஆரோக்கியமானது என்றும் சொல்லப்படுகிறது. உண்மையில் மக்கானா என்பது என்ன… எங்கிருந்து கிடைக்கிறது… உடல்நலத்திற்கு ஏற்றதா, குழந்தைகள் முதல் எல்லா வயதினரும் உட்கொள்ளலாமா என பல்வேறு கேள்விகள் நம்மில் எழக்கூடும்.

உணவியல் நிபுணர் விஜயஸ்ரீ

இது குறித்து, உணவியல் ஆலோசகர் விஜயஸ்ரீயிடம் பேசினோம்… “பொதுவாக மக்கானா, வட இந்தியாவில் அதிகம் கிடைக்கும். அப்பகுதி மக்களால்‌ அதிகளவு விரும்பிச்‌ சாப்பிடப்படுகிறது. நம் ஊரிலும் இப்போது பரவலாகக் கிடைக்கிறது. பார்ப்பதற்கு வெள்ளையாக குட்டி காளான் போல இருக்கும், சுவைக்கும் போது பாப்கார்ன் சாப்பிடுவது போன்று‌ இருக்கும்.

இது, அல்லி மலர்களின் விதையில் இருந்து தயாரிக்கப்படுகிறது. அதனால்‌ இது‌ முழுக்க முழுக்க சைவம் என்றே சொல்லலாம். இதனை, ஆங்கிலத்தில் ஃபாக்ஸ் நட்ஸ் என்பார்கள். இதனை அப்படியே சற்று வறுத்து பாப்கார்ன் போல‌ சிலரும், தயிரோடு சேர்த்தும் சிலர் அதில் குழம்பும் கூட செய்து சாப்பிடுவார்கள். தற்போதுதான் தென்னிந்தியாவில் இந்த மக்கானா அறிமுகமாகி உள்ளது. எனவேதான் ஆன்லைன் மற்றும் சூப்பர் மார்க்கெட்டுகளில் மட்டுமே கிடைக்கிறது.

வாங்கும்போதே மக்கானாவை அது ஏற்கெனவே சமைக்கப்பட்டதா இல்லையா என கவனித்து வாங்க வேண்டும். சில இடங்களில் சமைத்து பாப்கார்ன் போல் விற்கிறார்கள். அதை நாம் அப்படியே சாப்பிடலாம். Un Cooked என குறிப்பிட்டிருந்தால், அதை வாங்கி நாம் சமைத்து சாப்பிட வேண்டும். அசைவ உணவு சாப்பிடுபவர்களுக்கு, அவற்றில் இருந்தே தேவையான அளவு புரதச்சத்து உள்ளிட்ட இதரச் சத்துகள் கிடைத்துவிடும்.

ஆனால் அசைவம் சாப்பிடாதவர்களுக்கு இந்தச் சத்துகள் பற்றாக்குறையாக இருக்கலாம். அந்த வகையில் வெறும் சைவம் மட்டுமே சாப்பிடுபவர்கள், பால் சாப்பிடுவதில் ஒவ்வாமை உள்ளவர்களுக்கெல்லாம், இந்த மக்கானா ரொம்பவே பயனுள்ளதாக இருக்கும்.

மக்கானா

எப்படி பாதாம், பிஸ்தா, முந்திரி போன்றவற்றை எடுத்துக் கொள்கிறோமோ அதேபோல் இதையும் நமது உணவுப் பட்டியலில் சேர்த்துக் கொள்ளலாம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லா வயதினரும் இதனை எடுத்துக் கொள்ளலாம். எல்லாருக்கும் ஏற்றஇதில் மெக்னீசியம், வைட்டமின் ஏ, பொட்டாசியம் போன்றவை இருப்பதால் எலும்புகளுக்கு நல்லது.

இதை அடிக்கடி எடுத்துக் கொள்ளும்போது, காயங்கள் சீக்கிரம் குணமாக வாய்ப்புள்ளது. சிலர் உடல் எடையைக் குறைக்கவும் இதனை எடுத்துக் கொள்கின்றனர். ஏனெனில் இதில் கொழுப்புச்சத்து மிகக்குறைவாகவே இருக்கிறது. நமது சருமத்தைப் பொலிவாக வைத்துக் கொள்ளவும் உதவுகிறது.

புரோட்டீன் சத்து

இதன் விலை சற்று அதிகம். அதிக விலையுள்ள இதைச் சாப்பிட்டுதான் இந்தச் சத்துகளை நாம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. எளிதில் கிடைக்கும் வேர்க்கடலை, சோயா சங்ஸ், சோயா பீன்ஸ் போன்றவற்றிலும் இதே சத்துகள் நிறைந்துள்ளன” என்கிறார் உணவியல் ஆலோசகர் விஜயஸ்ரீ.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.