கேரள மாநிலம், கொல்லம் மாவட்டத்தைச் சேர்ந்த மோகனகுமார் – ஷீபா தம்பதியின் மகன் விவேக் மோகன். இவர், பிறவியிலேயே காது கேட்காத, வாய்பேச முடியாத மாற்றுத்திறனாளி. ஐ.டி.ஐ எலக்ட்ரிக்கல் முடித்தவர், இப்போது. கேரள மின்சாரவாரியத்தில் ஒப்பந்தப் பணிகள் செய்து வருகிறார்.
இவருக்குத் திருமணத்துக்காக பெண் கிடைக்காமல் பெற்றோரும், உற்றாரும், ஊர் மக்களும் பல ஆண்டுகளாக பெண் தேடும் படலத்தில் இறங்கியிருந்தனர். இந்த நிலையில் ஆசிரியர் ஒருவர் மூலம், வர்ஷாவின் குடும்பத்தினரின் அறிமுகம் கிடைத்தது. கொல்லம் போருவழி பனப்பெட்டி பகுதியைச் சேர்ந்த வர்ஷாவும், பிறவியிலேயே காது கேளாத, வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி.

அடூரில் உள்ள கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கிறார் வர்ஷா. நடனத்தில் ஆர்வமுள்ள வர்ஷாவுக்கும், எலக்ட்ரீஷியனான விவேக் மோகனுக்கும் திருமண பந்தம் உறுதிசெய்யப்பட்டது. கொல்லத்தில் இரு வீட்டாரும் மட்டுமல்லாமல் ஊர் மக்களும் இணைந்து கொண்டாட, சமூக புரட்சியாளர் நாராயண குரு புகைப்படம் முன்னிலையில் நிச்சயதார்த்தம் நடந்தது. நிச்சயதார்த்த மேடையிலேயே விவேக் மோகனும், வர்ஷாவும் சைகை மொழியில் பேசிக்கொண்டது ஊர் மக்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தியது.
இதுபற்றி விவேக்மோகன் மற்றும் வர்ஷாவின் பெற்றோர் கூறுகையில், “வர்ஷாவின் ஆசிரியர் கூறிய தகவலின் அடிப்படையில் விவேக் மோகனின் பெற்றோரை தொடர்பு கொண்டோம். முதலில் போன் மூலம் திருமணம் குறித்துப் பேசி முடிவு செய்தோம்.

விவேக் மோகனும், வர்ஷாவும் நேரில் சந்தித்தபோது அவர்கள் இருவருக்கும் மிகவும் பிடித்துப்போனது. இருவருக்கும் திருமணம் பேசி நிச்சயம் செய்தோம். வர்ஷாவின் கல்லூரி படிப்பு பூர்த்தியாக ஓராண்டு ஆகும். அதன் பின்னர்தான் திருமணம். அதுவரை இருவரும் ஒருவரை ஒருவர் நன்றாகப் புரிந்து கொள்ளட்டும்” என்றனர்.