தருமபுரி: தருமபுரி மாவட்டம் உட்பட தமிழகம் முழுக்க உள்ள குடிநீர் கட்டமைப்புகளின் பாதுகாப்பு அம்சங்களை மறு ஆய்வு செய்து மேம்படுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
தருமபுரி மாவட்டத்தில் கடந்த 4 மாதத்தில் 2 மேல்நிலை நீர்த் தேக்க தொட்டிகளில் அத்துமீறல் சம்பவங்கள் நடந்துள்ளன. இந்நிலையில், குடிநீர் கட்டமைப்புகளின் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து மறு ஆய்வு செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாக கோரிக்கை எழுந்துள்ளது.
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் சிலர் கூறியது: தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி வட்டம் சிவாடி என்ற கிராமத்தில் கடந்த மார்ச் மாதம் இரவு நேரத்தில் இளைஞர்கள் 3 பேர் அங்குள்ள 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த் தேக்க தொட்டி மீது ஏறி மது அருந்தியுள்ளனர். அப்போது அவர்கள் தொட்டிக்குள் சிறுநீர் கழித்ததாக தகவல் பரவியது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
அதைத் தொடர்ந்து குடிநீர் தொட்டி 2 முறை சுத்தம் செய்யப்பட்டு குடிநீர் விநியோகம் தொடங்கப்பட்டது. மேலும், அந்த 3 இளைஞர்களையும் போலீஸார் கைது செய்து விசாரித்தனர். அதில், குடிநீர் தொட்டி மீது அமர்ந்து மது அருந்தியபோது தின்பண்டங்கள் மற்றும் மது போன்றவை தான் தவறுதலாக தண்ணீர் தொட்டிக்குள் சிந்தின என்று கைதானவர்கள் தெரிவித்தனர். இதேபோல, தற்போது தருமபுரி அடுத்த கிருஷ்ணாபுரம் பகுதியில் பயன்பாடற்ற நிலையில் இருந்த 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட ஒரு மேல்நிலை நீர்த் தேக்க தொட்டிக்கு 7 வயது சிறுவனை அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர் சிறுவனை அங்கேயே கொலை செய்து வீசிவிட்டு வந்துள்ளார்.
ஓராண்டுக்கு முன்பு புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மர்ம நபர்கள் மலம் கலந்த சம்பவமும் இவ்வாறு அத்துமீறி நுழைந்த நடவடிக்கை தான். மேலும், அந்த சம்பவத்தில் சாதிய வன்மமும் அடங்கியுள்ளது.
இதே வரிசையில் சில ஆண்டுகளுக்கு முன்பு தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி பகுதியில் ஊதியம் தொடர்பான பிணக்கில், குடிநீர்த் தொட்டி இயக்கும் பணியாளர் தண்ணீரில் விஷம் கலந்த சம்பவமும் நடந்துள்ளது.
தரைமட்ட மற்றும் மேல்நிலை நீர்த் தேக்க குடிநீர் தொட்டிகளுக்கு அரசு வழிகாட்டுதலின் படி உள்ளாட்சி அமைப்புகள் போதிய பாதுகாப்பு அம்சங்களை ஏற்படுத்தியுள்ளன. அதிகாரம் அளிக்கப்பட்ட நபரன்றி மற்றவர்கள் தொட்டியின் மேற்பகுதிக்கு செல்ல முடியாத வகையில் ஏணிகளில் தடுப்புக் கதவுகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால், அவற்றையும் மீறி மேல்நிலை தொட்டிகளில் குற்றச் சம்பவங்கள் நடந்து வருவதால் பாதுகாப்பு அம்சங்களை காலத்துக்கு ஏற்ப பலப்படுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
எனவே, வல்லுநர்கள் குழு மூலம் தமிழகம் முழுக்க உள்ள குடிநீர் தொட்டிகளை ஆய்வு செய்து, தீய நோக்கம் கொண்டவர்கள் தொட்டிக்குள் செல்வதை தடுக்கும் வகையிலான பாதுகாப்பு அம்சங்களை மேம்படுத்த வேண்டும். இதன்மூலம், அவசியமற்ற சட்டம்-ஒழுங்கு சிக்கல்கள் தடுக்கப்படும். இதை, செலவினமாகக் கருதாமல் குடிநீர் கட்டமைப்புகளை மையப்படுத்தி நிகழும் குற்றச் செயல்களை தடுப்பதற்கான முதலீடாகக் கருதி அரசு விரைந்து செயல்படுத்த வேண்டும். இவ்வாறு கூறினர்.