கோஹிமா: வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான நாகலாந்தில் உள்ள தேசியவாத காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏக்கள் கூண்டோடு அஜித் பவார் அணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இது சரத் பவாருக்கு மேலும் பின்னடைவை கொடுத்துள்ளது.
மகாராஷ்டிர மாநிலத்தில் சமீப காலமாக அரசியலில் பல்வேறு அதிரடி திருப்பங்கள் ஏற்பட்டு வருகிறது. உத்தவ் தாக்கரேவிடம் இருந்து பிரிந்து வந்த ஏக்நாத் ஷிண்டே பாஜக ஆதரவுடன் ஆட்சி அமைத்துள்ளார். சிவசேனா கட்சியின் சின்னமும் அவர் வசம் வந்தது. இந்த பரபரப்பு நடந்து சில மாதங்களே ஆன நிலையில், சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியும் உடைந்துள்ளது.
கடந்த 2-ந்தேதி திடீர் திருப்பமாக அஜித் பவார் தலைமையில் தேசியவாத காங்கிரஸ் கட்சி, சிவசேனா – பாஜக கூட்டணி அரசில் இணைந்தது. அஜித்பவார் துணை முதல்வராகவும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 8 பேர் மந்திரிகளாகவும் பதவி ஏற்றனர். 40 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தங்களுக்கு இருப்பதாக அஜித்பவார் தரப்பு கூறி வருகிறது. இரு அணிகளும் தாங்கள்தான் உண்மையான தேசியவாத காங்கிரஸ் என உரிமை கோரி வருவதால் மகாராஷ்டிர அரசியலில் சூடுபிடித்துள்ளது.
இந்த நிலையில், நாகலாந்து மாநிலத்தில் உள்ள தேசியவாத காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏக்கள் 7 பேரும் அஜித் பவாருக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். அது மட்டும் இன்றி நாகலாந்து தேசியவாத காங்கிரஸ் கட்சி முழுவதும் அஜித் பவாருக்கு ஆதரவு தெரிவிப்பதாக நாகலாந்து மாநில என்.சி.பி எம்.எல்.ஏக்கள் அறிக்கையில் தெரிவித்துள்ளனர். சரத் பவாருக்கு இது கடும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.