ஸ்ரீஹரிகோட்டா: நிலவின் மறு பகுதியை ஆய்வு செய்வதற்காக இந்தியா ஏவிய சந்திரயான்-3 செயற்கைக்கோள் தற்போது பூமியின் மூன்றாவது சுற்றுவட்ட பாதையிலிருந்து, 4வது சுற்றுவட்ட பாதைக்கு வெற்றிகரமாக நகர்த்தப்பட்டுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. இதன் மூலம் நிலவுக்கு அருகாமையில் செயற்கைக்கோள் சென்றிருக்கிறது.
விண்வெளித்துறையில் இந்தியா பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறது. அந்த வகையில், இந்தியா அனுப்பிய சந்திரயான் -1 விண்கலம் நிலவில் நீர் இருப்பதற்கான ஆதாரத்தை கண்டுபிடித்த பின்னர் உலக நாடுகள் போட்டிப்போட்டுக்கொண்டு தற்போது நிலவை ஆய்வு செய்து வருகிறது. இந்த பிரபஞ்சத்தில் மனிதர்கள் நீடித்து வாழ நிலாதான் மனிதர்களுக்கு இருக்கும் மிகப்பெரிய வாய்ப்பு.
இன்னும் சில நூறு ஆண்டுகளில் பூமி மீது விண்கற்களின் மோதல்கள் அதிகரிக்கலாம். இது ஒரு சில ஆயிரம் ஆண்டுகளில் பூமியையே அழிக்கும் அளவுக்கு கூட போகும். எனவே நாம் வேற்று கிரகத்தை கண்டுபிடிக்க வேண்டிய அவசியத்தில் இருக்கிறோம். அதற்கு பூமியிலிருந்து பயணிப்பதைவிட நிலவிலிருந்து பயணிப்பதுதான் சுலபம். உதாரணமாக செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் தங்களுடைய காலனிகளை அமைக்க முயல்கின்றனர்.
இதற்கு பூமியிலிருந்து செல்வதை காட்டிலும் நிலவிலிருந்து செல்வது ஈஸியான வேலை. மட்டுமல்லாது நிலவின் தென் துருவத்தில் தண்ணீர் இருப்பதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. இந்த தண்ணீரை ஹைட்ரஜன் மற்றும் ஆக்சிஜனாக பிரித்து, ஆக்சிஜனை சுவாசிக்கவும், ஹைட்ரஜனை எரிபொருளாகவும் பயன்படுத்த முடியும். அப்படியெனில் நிலவிலிருந்து சூரிய குடும்பத்திற்கு ராக்கெட் அனுப்ப முடியும். எனவே நிலவை ஆக்கிரமிக்கும் போட்டிகள் தீவிரமடைந்து வருகின்றன.
அதில் ரஷ்யா, அமெரிக்கா, சீனா மற்றும் ஐரோப்பாவுக்கு அடுத்து இந்தியா இருக்கிறது. அந்த வகையில் கடந்த 14ம் தேதியன்று நிலவுக்கு சந்திரயான் 3 விண்கலத்தை இஸ்ரோ அனுப்பியது. இது நிலவை ஆய்வு செய்து இதுவரை நமக்கே தெரியாத தகவல்களை அனுப்பும். ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் கூட இந்த திட்டத்தில் இன்னும் வெற்றிபெறவில்லை. ஆனால் இந்தியா இதனை சாதித்து காட்டியிருக்கிறது.
அதேபோல நிலவில் இருக்கும் கனிமங்களை கைப்பற்றவும் மறுபுறம் போட்டி நடக்கிறது. உலகம் முழுவதும் இருக்கும் கனிமங்கள் ஒரு காலத்தில் தீர்ந்து போய்விடும். எனவே நிலவை நோக்கி அமெரிக்க உள்ளிட்ட நாடுகள் கூட்டணி வைத்திருக்கிறது. இந்நிலையில், சந்திரயான் -3 விண்கலம் ஏவுதல் சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்திருக்கிறது.
கடந்த 14ம் தேதி நிலவுக்கு ஏவப்பட்ட சந்திரயான் -3 விண்கல் 41 நாட்கள் பயணத்திற்கு பின்னர் நிலவை சென்றடையும். இதற்கு முன்னர் பூமியை 6 முறை சுற்றி வரும். அதில் மூன்று சுற்றுக்கள் நிறைவடைந்துள்ளன. இதனையடுத்து நான்காவது சுற்றுப்பாதையில் செயற்கைக்கோளை நிலை நிறுத்த இஸ்ரோ முயன்றது. அதன்படி இன்று மதியம் 2-3 மணியளவில் இந்த நிலை நிறுத்தல் வெற்றிகரமாக செய்து முடிக்கப்பட்டுள்ளது.
இதனை இஸ்ரோ தனது டிவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது. இதனையடுத்து 5வது சுற்றுவட்ட பாதைக்கு சந்திரயான் -3 செயற்கைக்கோள் வரும் 25ம் தேதி நிலை உயர்த்தப்படும் என்றும் தெரிவித்துள்ளது. கடந்த முறை நிலவில் தரையிறங்க முயன்றபோதுதான் சந்திரயான் -2 தோல்வியில் முடிந்தது. எனவே இந்த முறை எந்த தோல்வியும் ஏற்படாதவாறு இஸ்ரோ சந்திரயான்-3 செயற்கைக்கோளை வடிவமைத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.