போபால்: பாஜக ஆளும் மத்திய பிரதேச மாநிலத்திலும் காங்கிரஸ் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியை பிடிக்கும் என லோக் போல் நடத்திய கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.
மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் கடந்த 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றிபெற்று ஆட்சியை பிடித்தது. இதில் சத்தீஸ்கரில் வலுவான வெற்றியை காங்கிரஸ் பெற்றாலும், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களில் நூலிழையில் வெற்றிபெற்றது.
மூன்று மாநிலங்களில் ஆட்சியை பிடித்தாலும், மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சி 2 ஆண்டுகளில் பாஜகவின் ஆபரேசன் தாமரையால் கவிழ்ந்தது. காங்கிரஸ் மூத்த தலைவராக இருந்த ஜோதிர் ஆதித்யா சிந்தியாவுக்கு முதலமைச்சர் பதவி கிடைக்காததால் அதிருப்தியில் இருந்த அவர் தனது ஆதரவாளர்களுடன் பாஜகவுக்கு தாவினார்.
இதனால் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்து மீண்டும், சிவராஜ் சிங் சவுஹான் தலைமையிலான பாஜக ஆட்சி மலர்ந்தது. ஆனால், அங்கு பாஜக ஆட்சி அமைந்ததில் இருந்தே மதவாத மோதல்களும், பட்டியலின, பழங்குடியின மக்களுக்கு எதிரான கொடுமைகளும் தொடர்ந்து வருகின்றன.
கடந்த ஆண்டு ராமநவமி ஊர்வலத்தின்போது மத்திய பிரதேசத்தின் பல பகுதிகளில் மதவாத மோதல்கள் வெடித்தன. பல இடங்களில் இஸ்லாமியர்களின் வீடுகள், கடைகள் புல்டோசரில் இடித்து நொறுக்கப்பட்டன. பசு கடத்தியதாக கூறியும், ஜெய் ஸ்ரீராம் சொல்ல சொல்லியும் கும்பல் படுகொலைகளும், தாக்குதல் சம்பவங்களும் தொடர்ந்தன.
சமீபத்தில் பாஜகவை சேர்ந்த நபர் பழங்குடியின சமுதாயத்தை சேர்ந்தவர் மீது சிறுநீர் கழித்த விவகாரம் நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்த ஆண்டு தேர்தலை எதிர்கொள்ளும் மத்திய பிரதேசத்தில் இந்த சம்பவம் அரசுக்கு பின்னடைவாக அமையும் என்று கருதி முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுஹானா அந்த பழங்குடி நபரின் காலை கழுவியதும் விவாதப் பொருளானது.
இந்த நிலையில் இந்த ஆண்டின் இறுதியில் தேர்தலை எதிர்கொள்ளும் மத்திய பிரதேசத்தில் எந்த கட்சி ஆட்சியமைக்கும் என லோக் போல் அமைப்பு கருத்துக்கணிப்பை நடத்தியது. கடந்த ஜூன் 13 முதல் ஜூன் 15 வரை நடத்திய இந்த கருத்துக்கணிப்பில் தொகுதிக்கு 750 பேர் என மொத்தம் 1,72,500 பேரிடம் கருத்துக்கணிப்புகள் எடுக்கப்பட்டன.
இந்த கருத்துக்கணிப்பில் காங்கிரஸ் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியை கைப்பற்றும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. 230 தொகுதிகளை கொண்ட மத்திய பிரதேச மாநிலத்தில் 115 இடங்களை பிடிக்கும் கட்சி ஆட்சியமைக்கும். அந்த வகையில் காங்கிரஸ் கட்சி 130 முதல் 135 இடங்களில் 40 முதல் 43 சதவீத வாக்குகளை பெற்று வெற்றிபெறும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
பாஜக 90 முதல் 95 இடங்களில் 38 முதல் 41 சதவீத வாக்குகளை பெறும் என்றும், பகுஜன் சமாஜ் கட்சி 1 முதல் 2 இடங்களில் 3 முதல் 5 சதவீத வாக்குகளை பெறும் எனவும், இதர வேட்பாளர்கள் 5 இடங்கள் வரை 4 முதல் 8 சதவீதம் வாக்குகளை பெற்று வெற்றிபெறலாம் என்றும் கணிக்கப்பட்டு இருக்கிறது.