சென்னை: விஜய் டிவியில் ரசிகர்களை கவர்ந்த சீரியல்களில் ஒன்றாக பாரதி கண்ணம்மா 2 இருந்து வருகிறது.
இந்தத் தொடரின் அடுத்தடுத்த எபிசோட்கள் ரசிகர்களை கவர்ந்து வருகிறது. கிராமத்து கதைக்களத்தில் இந்தத் தொடர் ரசிகர்களுக்கு சிறப்பான எபிசோட்களை கொடுத்து வருகிறது.
விரைவில் இந்தத் தொடர் நிறைவடையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. டிஆர்பியில் சிறப்பான புள்ளிகளை பெற தொடர் தவறிவிட்டதாக காரணம் கூறப்படுகிறது.
கொசுக்கடியில் அவதிப்படும் பாரதி: விஜய் டிவியின் முக்கியமான தொடர்களில் ஒன்றாக பாரதி கண்ணம்மா 2 காணப்படுகிறது. கடந்த பிப்ரவரி மாதத்தில் இதன் முதல் சீசன் நிறைவடைந்த நிலையில், சில தினங்களிலேயே இரண்டாவது சீசன் துவங்கப்பட்டது. சீரியல் துவங்கி 5 மாதங்கள் ஆன நிலையில், இந்தத் தொடருக்கு விரைவில் என்ட் கார்ட் போடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. டிஆர்பியில் அதிகமான புள்ளிகளை பெற இந்தத் தொடர் தவறிவிட்டதாக காரணம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனாலும் சீரியல் துவங்கி இன்னும் 5 மாதங்கள்கூட நிறைவடையாத நிலையில், தொடர் பிக்கப்பாக இன்னும் கொஞ்சம் காலம் கொடுக்கப்படலாம் என்பதே ரசிகர்களின் கோரிக்கையாக உள்ளது. கண்ணம்மா மீது காதல் வயப்பட்ட பாரதி, தற்போதுதான் வெண்பாவின் சூழ்ச்சியை முறியடித்து கண்ணம்மாவை திருமணம் செய்துள்ள நிலையில், இனிமேல் வெண்பாவின் ஆட்டம் எத்தகையதாக இருக்கும் என்பதை அறி ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

ஆனால் திருமணம் முடிந்து, தங்களது வீட்டின் தோட்டத்திலேயே டென்ட் அடித்து கண்ணம்மாவுடன் தங்குகிறார் பாரதி. முதல் நாளில் அவர் ஆசையுடன் கண்ணம்மா மீது கையை போட, அவரோ, அலறித் துடிக்கிறார். வீட்டின் உள்ளே தூங்கிக் கொண்டிருந்தவர்களையும் தோட்டத்திற்கு வரவைக்கிறார். இதனால் அவமானத்திற்குள்ளாகும் பாரதி, கண்ணம்மா கனவு கண்டு இதுபோல அலறியதாக கூறுகிறார். மற்றவர்கள் அதை நம்ப முடியாமல் பார்க்கின்றனர்.
இதையடுத்து கண்ணம்மாவுடன் ஒரே டென்ட்டில் இருக்காமல் வெளியில் வந்து தூங்குகிறார் பாரதி. வெளியில் கொசுக்கடியில் மிகவும் கஷ்டப்படுகிறார். இரவெல்லாம் அவருக்கு நித்திரையில்லாமல் கழிகிறது. மறுநாள் காலையில் தன்னுடைய மகன் படும் அவஸ்தையை பார்க்கும் சவுந்தர்யா, மிகவும் வேதனைக்குள்ளாகிறார். தன்னுடைய மகனை வெட்டவெளியில் தூங்கவைத்துவிட்டு கண்ணம்மா டென்டிற்குள் தூங்கியதை பார்த்து அவருக்கு ஆத்திரம் மேலிடுகிறது.

தொடர்ந்து கண்ணம்மாவிடம் சண்டை பிடிக்க அவர் செல்ல, அவரது மகள், அவரை தடுக்கிறார். கண்ணம்மாவிடம் சண்டை போட்டால், அதனால் தன்னுடைய அண்ணனின் தூக்கம் கெடும் என்று தன்னுடைய தாயிடம் கூறுகிறார். இரவெல்லாம் தூங்காமல் தற்போது தூங்கிக் கொண்டிருக்கும் தன்னுடைய மகனின் தூக்கத்தை கெடுக்க விரும்பாமல் சவுந்தர்யா விலகி செல்கிறார். இதனால் அங்கு மிகப்பெரிய சண்டை தவிர்க்கப்படுகிறது.
மறுநாள் காலையில் லேட்டாக எழுந்திரிக்கும் கண்ணம்மாவிற்கு தேவையான அனைத்து பொருட்களையும் வாங்கி வைத்து காத்திருக்கிறார் பாரதி. அவருக்கு தேவையான மாற்றுத் துணி முதல் தேநீர் வரை அனைத்தையும் வாங்கி வைத்துவிட்டு அவர் கண்ணம்மாவிற்காக காத்திருக்கையில் தாமதமாக எழுந்ததற்காக வருத்தப்படும் கண்ணம்மா, தனக்காக தன்னுடைய கணவன் அனைத்து பொருட்களையும் வாங்கி வைத்ததை எண்ணி பெருமை கொள்வதாக இன்றைய எபிசோட் காணப்படுகிறது.