சென்னை: கார்த்திக் தற்போது ராஜூ முருகன் இயக்கத்தில் ஜப்பான் படத்தில் நடித்து வருகிறார்.
இந்தப் படம் தீபாவளிக்கு வெளியாகவுள்ளதால் கார்த்தியின் ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்பில் உள்ளனர்.
இதனைத் தொடர்ந்து லோகேஷ் இயக்கும் கைதி 2ம் பாகத்தில் நடிக்கவிருந்தார் கார்த்தி.
ஆனால், தற்போது கைதி 2 ட்ராப் ஆகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன்.
ட்ராப் ஆகும் கைதி 2:கார்த்தியின் ஜப்பான் படத்திற்கு ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது. ராஜூ முருகன் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகும் இந்தத் திரைப்படம் தீபாவளி ஸ்பெஷலாக வெளியாகிறது. விரைவில் ஜப்பான் படத்தை முடித்துவிட்டு லோகேஷ் கனகராஜ்ஜுடன் இணையவிருந்தார் கார்த்தி. இருவரது கூட்டணியில் மெகா ஹிட் அடித்த திரைப்படம் கைதி.
லோகேஷ் இயக்கிய இரண்டாவது படமான கைதி 2019ம் ஆண்டு வெளியானது. கார்த்திக்கு சூப்பர் ஹிட்டாக அமைந்த இந்தப் படம், லோகேஷையும் உச்சத்தில் கொண்டு சேர்த்தது. கார்த்தி, நரேன், ஜார்ஜ் மரியான், அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்திருந்தனர். அதனைத் தொடர்ந்து விஜய்யின் மாஸ்டர், கமல்ஹாசனின் விக்ரம் ஆகிய படங்களை இயக்கிய லோகேஷ், தற்போது லியோ படத்தில் பிஸியாக காணப்படுகிறார்.
LCU கான்செப்ட்டில் உருவாகும் லியோ அக்டோபர் 19ம் தேதி வெளியாகிறது. லியோ ரிலீஸானதும் கார்த்தியின் நடிப்பில் கைதி 2ம் பாகத்தை இயக்கவிருந்தார் லோகேஷ். கைதி திரைப்படத்தில் இருந்து தான் லோகேஷின் LCU கான்செப்ட் உருவானது குறிப்பிடத்தக்கது. அதனால், அதன் 2ம் பாகம் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர். இந்தப் படத்தில் சூர்யாவும் நடிக்கலாம் என சொல்லப்பட்டது.
லியோ ரிலீஸானதும் கார்த்தியின் கைதி 2ம் பாகத்தை இயக்கவிருந்த லோகேஷ், தற்போது திடீரென அந்த முடிவில் இருந்து பின்வாங்கிவிட்டாராம். அதற்கெல்லாம் காரணம் சூப்பர் ஸ்டார் ரஜினி தான் என சொல்லப்படுகிறது. அதாவது ரஜினியின் 171வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. அதனால், லியோ ரிலீஸுக்குப் பின்னர் தலைவர் 171 வேலைகளை தொடங்க ரெடியாகிவிட்டாராம் லோகேஷ்.
இன்னொரு பக்கம் கைதி 2ம் பாகத்திற்காக கால்ஷீட் கொடுத்திருந்த கார்த்தி, லோகேஷின் இந்த முடிவால் அதிர்ச்சியில் உள்ளாராம். ஜப்பான் படத்தை முடித்துவிட்டு கைதி 2வில் இணையலாம் என காத்திருந்த கார்த்தி, அந்த தேதிகளில் சர்தார் 2-வில் நடிக்கலாம் எனக் கூறப்படுகிறது. ஆனால், அதற்குள் சர்தார் 2 ப்ரீ-புரொடக்ஷன் வேலைகள் முடியுமா என்பதும் சந்தேகமே எனத் தெரிகிறது.
அதேபோல், ரஜினியின் தலைவர் 171 படம் முடிந்ததும், கைதி 2ம் பாகத்தை லோகேஷ் தொடங்குவாரா இல்லையா என்பது சந்தேகமே என சொல்லப்படுகிறது. இதனால், கைதி 2ம் பாகம் ட்ராப் ஆக வாய்ப்பிருப்பதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதேநேரம் தலைவர் 171 படம் குறித்த அப்டேட்டை தயாரிப்பு நிறுவனம் வெளியிடும் எனக் கூறிய லோகேஷ், கைதி 2 பற்றி எந்த தகவலும் தெரிவிக்கவில்லை.