திருப்பூர்: தமிழகம் முழுவதும் உள்ள மாற்றுத்திறனாளிகள், மாற்றுத் திறனாளிகள் நலத் திட்ட உதவிகளைப் பெற தகுந்த ஆவணங்களுடன் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
மாற்றுத்திறனாளிகளுக்காக தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
மாற்றுத்திறனாளிகளுக்கு அரசால் ஒதுக்கப்பட்ட வீடுகளுக்கு பயனாளிகளின் பங்கு தொகையினை செலுத்துவதற்காக வட்டியில்லா கடனுதவி வழங்கும் திட்டத்தின் மூலம் 1000 நபர்களுக்கு பயன் அளிக்கும் வகையில் 1.20 கோடி நிதியினை தமிழக அரசு ஒதுக்கி உள்ளது.
உயர்கல்வி பயிலும் 1000 பார்வை மாற்றுத்திறன் மாணவர்களுக்கு தலா ரூ.14000 மதிப்பில் நவீன வாசிக்கும் கருவி வழங்கும் வகையில் 1.40 கோடி லட்சத்தை அரசு ஒதுக்கி உள்ளது.
ஒரு கால் பாதிப்படைந்த மாற்றுத்திறனாளிகளும் பயன்பெறும் வகையில் இணைப்புச் சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் வழங்கும் திட்டம் விரிவுப்படுத்தப்பட்டு 500 பயனாளிகளுககு இந்த நிதியாண்டில் வழங்கப்பட உள்ளது. இதற்காக 4.50 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
உள்ளாட்சி அமைப்புகளின் மூலம் கட்டப்படும் வணிக வளாகங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு ஐந்து சதவீதம் கடைகள் ஒதுக்கீடு செய்யப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை இருமடங்காக உயர்த்தப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கு ஓய்வூதியமும் 1500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
இது தவிர பல்வேறு திட்டங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு முன்னுரிமை அளித்து வருகிறது . எனவே மாற்றுத்திறனாளிகளே
உதவித்தொகை, உதவி உபகரணங்கள் பெறுவது, வங்கி கடன் மானியம், திருமண உதவித்தொகை, மாதாந்திர உதவித்தொகை ஆகியவற்றிற்கு விண்ணப்பித்தால் அரசு உங்களுக்கு நிச்சயம் உதவிகளை வழங்கும். இதற்கு நீங்கள் அலைய தேவையில்லை ஆன்லைனிலேயே விண்ணப்பிக்க முடியும்.
இது குறித்து திருப்பூா் மாவட்ட கலெக்டர் தா.கிறிஸ்துராஜ் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது:
” மாற்றுத் திறனாளிகளின் நலனுக்காக தமிழக அரசு பல்வேறு வகையான நலத் திட்ட உதவிகள் வழங்கும் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

–
மாற்று திறனாளிகள் நலத்திட்டங்களை பெறுவதற்கு சிரமமின்றி விண்ணப்பங்களை சமா்ப்பிப்பதற்கு ஏதுவாக சில திட்டங்களுக்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்க தற்போது தமிழ்நாடு மின் ஆளுமை முகமை மூலம் வசதி செய்யப்பட்டுள்ளது.
இதில், கல்வி உதவித் தொகை, உதவி உபகரணங்கள் பெறவும், வங்கிக் கடன் மானியம், திருமண உதவித் தொகை, மாதாந்திர பராமரிப்பு உதவித் தொகை ஆகியவற்றுக்கு தகுந்த ஆவணங்களுடன் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.
அதாவது ( http://www.tncsevai.tn.gov.in/Citizen/Registration.aspx என்ற இணையதளம் மூலம் விண்ணப்பித்து பயன்பெறலாம்.)
ஆகவே, மேற்கண்ட திட்டங்களுக்கு அருகில் உள்ள இ-சேவை மையம் அல்லது இணையதளம் மூலம் விண்ணப்பித்து ரசீதைப் பெற்றுக் கொள்ளலாம்” இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.