கொல்கத்தா: மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் வீட்டுக்குள் ஆயுதம், கஞ்சா உள்ளிட்டவற்றுடன் நுழைய முயன்ற நபரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். இந்நிலையில் அந்த நபர் பற்றிய அதிர்ச்சியான தகவல் வெளியாகி உள்ளது.
மேற்கு வங்காளத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடக்கிறது. அந்த கட்சியின் தலைவரான மம்தா பானர்ஜி முதல்வராக உள்ளார். 2024 நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை வீழ்த்த தேசிய அளவில் கூட்டணி அமைப்பதில் மம்தா பானர்ஜி ஆர்வமாக செயல்பட்டு வருகிறார்.
இதற்காக எதிர்க்கட்சிகள் இணைந்து இந்தியா என்ற பெயரில் கூட்டணியை அமைத்துள்ளன. இந்த கூட்டணியில் மம்தா பானர்ஜி அங்கம் வகித்து வருகிறார். குறிப்பாக இந்தியா என்ற பெயரை மம்தா பானர்ஜி தான் முன்மொழிந்தார்.
தற்போது மம்தா பானர்ஜி மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவின் காலிகட் பகுதியில் உள்ள ஹாரீஸ் சட்டர்ஜி தெருவில் அமைந்துள்ள வீட்டில் வசித்து வருகிறார். இவரது வீட்டில் எப்போதும் பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். மம்தா பானர்ஜியின் வீட்டுக்கு செல்லும் நபர்களை எப்போதும் சோதனைக்கு பிறகே போலீசார் அனுமதித்து வருகின்றனர்.
இந்நிலையில் தான் மம்தா பானர்ஜியின் வீடு அமைந்துள்ள ஹாரீஸ் சட்டர்ஜி தெருவில் கருப்பு நிறத்தில் கார் ஒன்று சென்றது. அந்த காரில் போலீஸ் என ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு இருந்தது. சந்தேகம் அடைந்த போலீசார் காரை நிறுத்தினர். காரின் உள்ளே கருப்பு நிற கோட் அணிந்து ஒருவர் இருந்தார்.
அவரிடம் போலீசார் விசாரித்தனர்.
அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தார். இதைடுத்து போலீசார் காரை சோதனையிட்டனர். அப்போது காரில் ஆயுதங்கள், கஞ்சா இருந்தது. அதோடு எல்லை பாதுகாப்பு படை உள்பட வெவ்வெறு அமைப்புகளின் அடையாள அட்டையும் வைத்திருந்தார். இதையடுத்து போலீசார் அந்த நபரை பிடித்து விசாரித்தனர்.

அப்போது அவரது பெயர் நூர் ஆலம் என்பது தெரியவந்தது. மேலும் அவர் மம்தா பானர்ஜியை சந்தித்து பேச வந்ததாக தெரிவித்தார். அவரை சந்திப்பதற்கான காரணத்தை கேட்டபோது சரியாக பதிலளிக்கவில்லை. இதையடுத்து அந்த நபர் கைது செய்யப்பட்டார். இந்த கைது நடவடிக்கையை போலீசார் மேற்கொண்டபோது அந்த வீட்டில் மம்தா பானர்ஜி இருந்தார். கைதான நபரிடம் இருந்து கருப்பு நிற கார் பறிமுதல் செய்யப்பட்டது.
இதுபற்றி கொல்கத்தா போலீஸ் கமிஷனர் வினித் கோயல் கூறுகையில், ‛‛கைது செய்யப்பட்டுள்ள நபர் காரில் ஆயுதங்கள், கஞ்சா மற்றும் எல்லை பாதுகாப்பு படை உள்ளிட்ட அமைப்புகளின் அடையாள அட்டை வைத்திருந்தார். அவர் மம்தா பானர்ஜியை சந்திக்க வந்ததாக கூறினர். உண்மையில் இது மிகப்பெரிய பிரச்சனையாகும். அவர் எதற்காக அங்கு வந்தார்? அவரது நோக்கம் என்ன? என்பது பற்றி விசாரணை நடத்தி வருகிறோம்” என்றார்.