கொலை விமர்சனம்: டெக்னிக்கலாக ஓகே; ஆனால் வித்தியாசமான உலகில் நடக்கும் வழக்கமான துப்பறியும் கதைதான்!

மெட்ராஸில் உள்ள ஒரு அபார்ட்மென்ட்டில் மர்மமான முறையில் கொலை செய்யப்படுகிறார் பிரபல மாடலான லைலா (மீனாட்சி சவுத்ரி). இந்தக் கொலை வழக்கானது புதிதாக பணியில் சேர்ந்திருக்கும் ஐ.பி.எஸ்., அதிகாரியான சந்தியாவிடம் (ரித்திகா சிங்) ஒப்படைக்கப்படுகிறது. சந்தியாவின் குருவும், துப்பறியும் நிபுணருமான முன்னாள் காவல்துறை அதிகாரி விநாயக் (விஜய் ஆண்டனி) அவருக்கு இவ்வழக்கில் உதவுகிறார். கொலையின் பின்னணியை ஒவ்வொன்றாக துப்புத்துலக்க ஆரம்பிக்கிறார் விநாயக்.

கொலை விமர்சனம்

ஒருகட்டத்தில், கொலை செய்யப்பட்ட லைலாவின் போட்டோகிராபர் அர்ஜுன் (அர்ஜுன் சிதம்பரம்), நண்பர் சதீஷ் (சித்தார்த்தா சங்கர்), ஏஜென்ட் ஆதித்யா சர்மா (முரளி சர்மா), போலி மேனேஜர் பப்லு (கிஷோர் குமார்) ஆகியோர் விநாயக்கின் சந்தேக வலையில் சிக்குகின்றனர். இறுதியில், இந்தக் கொலையைச் செய்தது யார், அதை எப்படி விநாயக் கண்டுபிடித்தார், கொலைக்கான காரணம் என்ன, மனைவியைப் பிரிந்து, உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கும் தன் மகளின் நிலைமையையும் மீறி இந்த வழக்கை விநாயக் கையில் எடுக்கக் காரணம் என்பது போன்ற கேள்விகளுக்கான பதிலை த்ரில்லர் திரைக்கதையில் தர முயன்றிருக்கிறார் இயக்குநர் பாலாஜி கே.குமார்.

ஒருபக்கம் நொடிந்துபோன சொந்த வாழ்க்கையும், உயிருக்குப் போராடும் மகளையும் நினைத்து வருந்தும் தந்தை, மறுபக்கம் ஒரு பெரிய கொலை வழக்கைத் துப்பறியும் மிடுக்கான அதிகாரி என இருவேறு தளங்களைத் தாங்கி நிற்கும் விநாயக் கதாபாத்திரத்தை ஏற்றிருக்கும் விஜய் ஆண்டனி, அதற்கு எந்த நியாயத்தையும் செய்யவில்லை. உடல்மொழியிலும், பேச்சிலும் பழக்கமான விஜய் ஆண்டனியாகவே வந்து போகிறார். ஸ்டைலிஷான ஐ.பி.எஸ்., அதிகாரியாக ரித்திகா சிங் ‘கூட இருந்த குமாராக’ படம் முழுவதும் வந்து போகிறார்.

கொலை விமர்சனம்

மொத்த படத்திலும் அழுத்தமாகப் பதியும் லைலா கதாபாத்திரத்தை ஏற்றிருக்கும் மீனாட்சி சௌத்ரி கச்சிதமான தேர்வு. தன் பொறுப்பை உணர்ந்து, மிகையில்லாத, தேவையான நடிப்பை மட்டும் வழங்கி கவனிக்க வைக்கிறார். அர்ஜுன் சிதம்பரம், சித்தார்த்தா சங்கர், முரளி சர்மா, கிஷோர் குமார், ஜான் விஜய் ஆகியோர் துணை நடிகர்களாக வந்துபோகிறார்கள், அவ்வளவே!

பிரத்யேகமான ஃப்ரேம்களை வடித்த விதத்திலும், மொத்த படத்திலும் நிறங்களையும் ஒளியையும் கையாண்ட விதத்திலும் இயக்குநர் உருவாக்க நினைத்த உலகத்தை நம் கண்முன் காட்டியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் சிவகுமார் விஜயன். முக்கியமாக, காமிக்ஸ் வடிவிலான சில ஃப்ரேம்கள் கவனிக்க வைக்கின்றன. செல்வா ஆர்.கே-வின் படத்தொகுப்பு சில காட்சிகளில் சுவாரஸ்யத்தைத் தந்தாலும், ஏனைய இடங்களில் குழப்பத்தையே தருகிறது. இரண்டாம் பாதியை இன்னமுமே துல்லியமாகத் தொகுத்து திரைக்கதையைத் தெளிவுபடுத்தியிருக்கலாம்.

கொலை விமர்சனம்

கிரீஷ் கோபாலகிருஷ்ணனின் இசையில், ஸ்ரேயா கோஷலின் குரலில் மறுஆக்கம் செய்யப்பட்ட ‘பார்த்த ஞாபகம் இல்லையோ’ பாடலும், எம்.எஸ்.கிருஷ்ணா மற்றும் அஞ்சனா ராஜகோபாலன் குரலில் ஒளிக்கும் ‘யார் நீ’ பாடலும் ரசிக்க வைப்பதோடு, இந்தத் திரைப்படத்திற்கான பிரத்யேக ‘மூட்’-ஐ செட் செய்ய உதவியிருக்கிறது. ‘Jazz’ இசை பாணியிலான பின்னணியிசையில் கிரீஷ் கோபாலகிருஷ்ணன் ஆர்கெஸ்ட்ராவின் உழைப்பு பாராட்ட வைக்கிறது. சுமாரான காட்சிகளைக் கூட தன் பின்னணியிசையால் மெருகேற்ற முயன்றிருக்கிறார். ஆனால், தொய்வான திரைக்கதை பின்னணியிசையின் பிரமாண்டத்தைச் சரியாகப் பயன்படுத்திக்கொள்ளவில்லை. கலரிஸ்ட் பணியைச் செய்திருக்கும் செல்வத்தின் மெனக்கெடலை உணர முடிகிறது. ஆனால், சொதப்பலான ‘கிராபிக்ஸ்’ காட்சிகளில் தொழில்நுட்பக் குழு கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம்.

19-ம் நூற்றாண்டின் முற்பகுதியில் ஐரோப்பாவில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தைக் கையில் எடுத்திருக்கும் இயக்குநர், அதற்கு மெட்ராஸ் என்கிற நகரம், பிரத்யேகமான காவல்துறையின் உடைகள், கட்டடங்கள், வீதிகள், நகர அமைப்பு எனப் பெரும் சிரத்தை எடுத்து, துப்பறியும் காமிக்ஸ் கதைகளின் சாயல் கலந்த ஒரு புதிய உலகத்தைத் திரையில் கொண்டு வந்திருக்கிறார். ஆனால், அந்த உலகத்தில் நடக்கும் `மர்ம கொலை – துப்பறியும் புத்திசாலி நாயகன் – அவன் பாணியிலான விசாரணை – முடிவு’ என்பதில் எந்தப் புதுமையும் சுவாரஸ்யமும் கையாளப்படவில்லை.

கொலை விமர்சனம்

தொடக்கத்தில் அந்த உலகத்தை விவரிக்கும் திரையாக்கமும், அதன் ஊடாக ஒரு பிரபல மாடலின் கசப்பான வாழ்க்கை மற்றும் மாடலிங் துறையில் இருக்கும் கறுப்பு பக்கங்களையும் பேசும் வடிவமும் கொஞ்சம் ரசிக்க வைப்பதோடு, திரைப்படத்தின் மீதான ஆர்வத்தையும் கூட்டுகிறது. ஆனால், பிரதானமாகத் திரைக்கதையில் பயணிக்கும் துப்பறியும் காட்சிகளில் சுவாரஸ்யமும் புதுமையும் இல்லாததும், கதாபாத்திரங்களின் போலியான நடிப்பும் சிறிது நேரத்திலேயே திரைப்படத்திலிருந்து நம்மை விலக வைக்கிறது. மேலும், இயக்குநர் காட்டியிருக்கும் பிரத்யேகமான உலகம் திரைக்கதைக்கு எந்த வகையிலும் உதவாமல், வெறும் அலங்கார பொருளாக மட்டுமே துருத்திக்கொண்டு நிற்கிறது. அதனால், முதற்பாதியின் நடுப்பகுதியிலேயே நம்மைச் சலிப்படைய செய்கிறது திரைக்கதை.

சுவாரஸ்யமற்று, மெதுவாக நகரும் படத்திற்குக் கதாநாயகன் என்ற பொறுப்பில் விஜய் ஆண்டனி தன் நடிப்பால் எந்த உதவியும் செய்யாமல், மேலும் திரைக்கதையை மந்தமாக்குகிறார். ஒருவழியாக, கொலைக்குப் பின்னால் உள்ள முடிச்சுகளைப் பாதி அவிழ்த்து, நான்கு நபர்களைக் குற்றவாளிக் கூண்டில் ஏற்றி, இவர்களில் யார் உண்மையான குற்றவாளி என்ற கேள்வியோடு இடைவேளை நிறைவுறுகிறது.

கொலை விமர்சனம்

ஆனால், இடைவேளையிலிருந்து இறுதிக்காட்சி வரைக்கும் பயணிக்கும் படியான தெளிவான ‘ப்ளாட்’ இருந்தும், பின்கதை, கூடுதலான மற்றும் சம்பந்தமில்லாத கதாபாத்திரங்கள், மனோதத்துவ வசனங்கள், ஆங்கில புத்தகங்களின் மேற்கோள்கள் என நீட்டி முழக்கிக்கொண்டே இருக்கின்றனர்.

கொலையாளியைக் கதாநாயகன் நெருங்கும் பகுதியில் திரைக்கதை சில சுவாரஸ்யமான விஷயங்களைக் கொண்டிருந்தாலும், தேவையில்லாத காட்சிகள், குழப்பமான காட்சிகள் என அடுத்தடுத்து வருவது, திரண்டு வரும் சிறிது நம்பிக்கையையும் கெடுக்கிறது.

கொலை விமர்சனம்

கொலையாளியை ஒரு மனப்பிறழ்வுடையவராகக் காட்டி, அவருக்கு வக்கிரமான பின்கதையையும் சேர்த்து, அடித்துத் துவைக்கப்பட்ட, அதிகம் பரிட்சயப்பட்ட த்ரில்லர் டெம்ப்ளேட்டில் படத்தைக் கொண்டுபோய் நிறுத்தியிருக்கிறார் இயக்குநர்.

வித்தியாசமான உலகில் கதை நடப்பதாய் காட்ட எடுத்த முனைப்பை, கொஞ்சம் வித்தியாசமான கதையை யோசிக்கவும் எடுத்திருக்கலாம். கொலை – பார்த்துப் பழகிய மற்றுமொரு த்ரில்லர் வகையறா படம் மட்டுமே!

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.