இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே இரண்டு நாட்கள் அரசு முறை பயணமாக நேற்று டெல்லி வந்தார். நேற்று டெல்லி வந்த இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்துப் பேசினார். இந்நிலையில் இன்று பிரதமர் மோடியை சந்தித்தார் ரணில் விக்ரமசிங்கே.
அப்போது புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, கால்நடை வளர்ப்பு, விமான சேவை, நாகப்பட்டினம்- இலங்கை கப்பல் போக்குவரத்து ஆகிய 4 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. அப்போது இலங்கை கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கியிருந்த போது இந்தியா உறுதுணையாக இருந்ததாக கூறி நன்றி தெரிவித்தார் ரணில் விக்ரமசிங்கே.
இந்நிலையில் பிரதமர் மோடி இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே சந்திப்பு குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை டிவீட்டியுள்ளார். அதில் இந்தியா வருகை தந்திருக்கும் இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே அவர்கள், நமது பிரதமர் மோடி அவர்களை இன்று சந்தித்தபோது, தமிழக மீனவர்களின் வாழ்வாதாரம் மற்றும் அவர்களின் பாதுகாப்பு தொடர்பான பிரச்சனைகள் குறித்து நமது பிரதமர் அவரிடம் வலியுறுத்தியதாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இலங்கையில் 13வது சட்டத் திருத்தத்தை, முழுவதுமாக அமல்படுத்தி, இலங்கைத் தமிழர்களுக்கு வழங்கப்பட்ட உறுதிமொழியை நிறைவேற்றுமாறு இலங்கை அதிபரிடம் பிரதமர் மோடி மீண்டும் கோரிக்கை விடுத்தார் என்றும் அண்ணாமலை தனது டிவீட்டில் குறிப்பிட்டார். இலங்கையில் மலையகத் தமிழர்கள் குடியேறி 200 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு, பிரதமர் மோடி, இலங்கையில் ₹75 கோடி மதிப்பில் பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ளார் என்றும் அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார். இலங்கைத் தமிழர்களின் வாழ்வாதாரம் மேம்படுவதையே, நமது பிரதமர் முன்னுரிமையாகக் கொண்டுள்ளார் என்றும் அண்ணாமலை தனது டிவீட்டில் குறிப்பிட்டுள்ளார்.
ஈழத்துக்கும் தமிழகத்துக்கும் உள்ள தொடர்பு சங்க காலம் முதலே தொடர்ந்து வருவது. 1800 ஆண்டு பழமையான சங்க இலக்கியமான பட்டினப்பாலையில், ஈழத்து உணவும் காழகத்து ஆக்கமும் பூம்புகார் துறைமுகத்தில் குவிந்து கிடந்தன என்று குறிப்பிடப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ள அண்ணாமலை அத்தகைய தொன்மையுள்ள தமிழகம் இலங்கை இடையேயான கப்பல் போக்குவரத்துத் தொடர்பு, 1960களில் ஏற்பட்ட புயலால் பாதிக்கப்பட்டு, நிறுத்தப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் இலங்கை காங்கேசம் துறைமுகத்தை, பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு 287 கோடி மதிப்பில் புதுப்பித்து, தற்போது மீண்டும் தமிழகம் இலங்கை இடையேயான கப்பல் போக்குவரத்தைத் தொடங்கவுள்ளது என்றும் அண்ணாமலை தனது டிவீட்டில் குறிப்பிட்டுள்ளார். நாகப்பட்டினம் காங்கேசன் துறை இடையேயான கப்பல் போக்குவரத்தை மீண்டும் தொடங்க, பிரதமர் மோடி மற்றும் இந்தியா வந்துள்ள இலங்கை அதிபர் ரனில் விக்கிரமசிங்கே இடையேயான ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகியுள்ளது என்றும் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
மேலும் இதன் மூலம், வரலாற்றுச் சிறப்புமிக்க தமிழர்கள் பாரம்பரியமும், ஈழத் தமிழர்களுடனான கலாச்சாரத் தொடர்பும் புதுப்பிக்கப்பட்டுள்ளது என்றும் அண்ணாமலை தனது டிவீட்டில் தெரிவித்துள்ளார். இது சாத்தியமாவதற்கு முழுமுதற் காரணமான பிரதமர் மோடிக்கு தமிழக பாஜக சார்பாக நன்றிகளைத் தெரிவித்து கொள்வதாகவும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது டிவீட்டில் குறிப்பிட்டுள்ளார்.