திருப்பத்தூர்: அடிதடி வழக்கில் சாட்சியம் அளிக்க வந்த விசாரணை அதிகாரியான காவல் உதவி ஆய்வாளரை மிரட்டிய வழக்கில் திருப்பத்தூர் மாவட்ட பாஜக நிர்வாகி வினோத் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் பாஜக இளைஞர் அணி அமைப்பாளராக வினோத் என்பவர் உள்ளார். அடிதடி வழக்கில் ஒன்றில் சாட்சியம் அளிக்க விசாரணை அதிகாரியான உதவி காவல் ஆய்வாளர் ஜெகநாதனை மிரட்டியதாக சொல்லப்படுகிறது. உதவி ஆய்வாளருக்கு கொலை மிரட்டல் விடுத்து மிரட்டியதால் பாஜக நிர்வாகி வினோத் மீது 6 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
தொடர்ந்து காவல் உதவி ஆய்வாளர் ஜெகநாதனுக்கு கொலை மிரட்டல் விடுத்த வழக்கில் வினோத்தை போலீசார் கைது செய்துள்ளனர். முன்னதாக இன்று காலை திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள காற்றாலை பண்ணையின் பொது மேலாளரான பிரேசில் நாட்டை சேர்ந்த கார்லஸ் ஹெர்பர்ட் பாரோஸ் என்பவரை, ஒப்பந்த பணிகளை எடுப்பதில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக திருநெல்வேலி மாவட்ட பொருளாளர் பாலகிருஷ்ணன் தூண்டுதலின் பேரில் வழக்கறிஞர் சுரேஷ் மார்த்தாண்டம் என்பவர் அடியாட்களுடன் காற்றாலை அமைந்திருக்கும் இடத்திற்கு சென்று அங்கு பணியில் ஈடுபட்டிருந்த சிலரை தாக்கியதாக கூறப்படுகிறது.
இது குறித்து கார்லஸ் ஹெபார்ட் பணகுடி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில், பாஜக நிர்வாகி பாலகிருஷ்ணன், பாலகிருஷ்ணனின் மகன் பாலாஜி மற்றும் வழக்கறிஞர் சுரேஷ் மார்த்தாண்டம் உள்ளிட்டோர் மீது ஏழு பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.